அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று கூறியதாவது:-
கடந்த வருடம் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் எந்த அரசு பள்ளிகளில் 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் உள்ளதோ அப்படிப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டோம். அதன்படி நேற்று கோவையில் முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உள்பட அனைவரும் கலந்து கொண்டோம். 70 சதவீத தேர்ச்சிக்கு குறைவான தேர்ச்சி உடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டது. அரையாண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தவேண்டும் என்று கூறி உள்ளோம்.
எந்த மாணவர் எந்த பாடத்தில் தேர்வு பெறவில்லை என்பதை கண்டுபிடித்து அந்த பாடத்தில் நன்றாக விளக்கி பயிற்சி அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எப்படியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம்.
இது போன்ற கூட்டம் நெல்லையில் 6-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள். இப்படியாக தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கூட்டம் நடத்தி தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உள்ளோம்.
இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.