திருச்சியில் இளந்தாமரை மாநாடு இன்று நடக்கிறது: ராஜ்நாத்சிங் நரேந்திரமோடி பங்கேற்பு ilanthamarai Conference happening today
Tamil NewsYesterday, 05:30
சென்னை, செப். 26-
திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டிற்கு தமிழக இளைஞர் அணி மாநில தலைவர் பொன்.வி.பாலகணபதி தலைமை தாங்குகிறார். இளைஞர் அணியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.முருகானந்தம் வரவேற்று பேசுகிறார். இளைஞர் அணி அகில இந்திய தலைவர் அனுராக் தாக்கூர் எம்.பி., அகில இந்திய செயலாளர் பி.முரளிதர்ராவ் ஆகியோர் மாநாட்டு தொடக்கவுரை ஆற்றுகின்றனர். பிரசார தொடக்க பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் எம்.பி. சிறப்புரையாற்றுகிறார். குஜராத் மாநில முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி எழுச்சியுரையாற்றுகிறார். அகில இந்திய அமைப்பு துணை பொதுச்செயலாளர் வி.சதீஷ், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், அகில இந்திய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, லலிதா குமாரமங்கலம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு, மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சரவண பெருமாள், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பலர் பேசுகின்றனர். மாநில செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் நன்றியுரையாற்றுகிறார்.
இளந்தாமரை மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருச்சி மாநகர பொறுப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டிற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழில் முன்பகுதியில் தாமரையில் பாராளுமன்ற வளாகம் மலர்வது போன்று வடிவமைக்கப்பட்டு, அதில் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழின் பின்பக்கத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மாநாட்டையொட்டி சென்னையின் பல பகுதிகளில் இருந்து கார், வேன், லாரிகளில் பாரதீய ஜனதா தொண்டர்கள் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
...
Show commentsOpen link
[Continue reading...]