Wednesday, 17 July 2013

‘பாக் மில்கா பாக்‘ அமெரிக்காவில் வசூல் மழை

இந்தியாவின் பிரபல தடகள வீரர் மில்கா சிங். 1935-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த இவர், இந்தியாவுக்காக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், டோக்கியோ, மெல்பர்ன், ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். காமன்வெல்த் விளையாட்டுகளில் தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர். இவர் தற்போது சண்டிகரில் வசித்து வருகிறார்.


இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘பாக் மில்கா பாக்‘ என்ற இந்திபடம் எடுக்கப்பட்டு கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் மில்கா சிங் வேடத்தில் இந்தி நடிகர் பர்கான் அக்தார் நடித்துள்ளார். இந்த படம் அமெரிக்காவில் 140 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே 647,112 டாலர் வசூலைக் குவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 83 லட்சம் ஆகும். இந்த வெற்றியால் மில்கா சிங் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து மில்கா சிங் கூறியதாவது:-

படம் வெளியானதிலிருந்து எனது போன் அடித்துக் கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் எனக்கு வருகின்றன.

காரல் லூயிஸ் எனக்கு போன் செய்திருந்தார். அவர் என் படத்தை பார்த்து இருக்கிறார். அது அவரை மிகவும் பாதித்துள்ளது. இந்தி வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் இந்திய நண்பருடன் சேர்ந்து அவர் படம் பார்த்துள்ளார். காரல் லூயிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர். உலகம் ஏற்றுக்கொண்ட மிகப்பெரிய தடகள வீரர். அவர் எனக்கு பரிசு பொருள் வழங்க விரும்பினார். அதற்கு அவசியமே இல்லை என்று நான் கூறினேன். எனது படத்தை பார்க்க திரையரங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர்.

இந்த பாராட்டெல்லாம் படத்தை உருவாக்கிய இயக்குனர் ரகேஷ் மேஹ்ரா, பிரசூன் ஜோசி, எடிட்டர் பி.எஸ். பாரதி மற்றும் என் கதாபாத்திரத்தில் நடித்த பர்கான் அக்தாரையே சாரும். பல விளையாட்டு வீரர்கள் வந்து போயிருக்கிறார்கள். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

என் கதாபாத்திரத்தில் நடித்த பர்கான் அக்தார் என்னைப் போலவே இருக்கிறார். அவர் படத்தில் மாயாஜாலம் செய்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger