சங்கரன்கோவில் தொகுதி மக்கள் எப்போதுமே அதிமுகவுக்குத்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்போது தேமுதிகவுக்கு அவர்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். அதிமுகவுக்கு வாக்களித்த அத்தனை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை சபாநாயகர் தனபால், பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரின் மகன்களின் திருமணம் உள்பட 7 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழா சென்னையில் இன்று நடந்தது.
அதிமுகவுக்கு மிகவும் ராசியான வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதலவர் ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வதித்தார்.
அப்போது சங்கரன்கோவில் தேர்தல் முடிவு அங்கு வந்து சேர்ந்தது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெறும் செய்தியை அறிந்து கூடியிருந்த அத்தனை பேரும் உற்சாகத்தில் மூழ்கினர். முதல்வர் முகத்திலும் தாங்க முடியாத சந்தோஷத்தைக் காண முடிந்தது.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், எப்போதுமே சங்கரன்கோவில் தொகுதி மக்கள் அதிமுகவைத்தான் ஆதரித்து வந்துள்ளனர். இப்போதும் அது போலவே ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்குக் கிடைத்துள்ள இடம் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் ஜெயலலிதா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?