பெங்களூர், அக். 18–
சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதத்தை கடந்த மாதம் 27–ந்தேதி விதித்தது. இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய கர்நாடகா ஐகோர்ட்டு மறுத்தது.
இதையடுத்து ஜெயலலிதா ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். நேற்று அவரது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தண்டனையை நிறுத்தி வைத்து இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் ஜெயலலிதாவின் 21 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. ஜெயலலிதா விடுதலை ஆகிறார் என்ற தகவல் பரவியதும் தமிழ்நாடு முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தீபாவளி கொண்டாட்டத்தை மிஞ்சும் வகையில் பட்டாசுகள் போட்டு அ.தி.மு.க.வினர் மகிழ்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மதியம் 12.25 மணிக்கெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், அந்த உத்தரவை பெற்று வந்து மாலையே ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்ட நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஜெயலலிதா நேற்று மாலை பெங்களூர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆக முடியவில்லை.
கீழ் கோர்ட்டில் தண்டனை பெற்ற ஒருவர், சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஜாமீன் பெறும் பட்சத்தில், அவர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை, எந்த கீழ் கோர்ட்டில் தண்டனை பெற்றாரோ, அந்த கீழ் கோர்ட்டில் சமர்ப்பித்து நீதிபதி ஒப்புதலை பெற்ற பிறகே, சிறைத்துறை அதிகாரிகளிடம் காட்டி வெளியில் வரமுடியும். அந்த வகையில் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் உத்தரவு நகலை, டெல்லியில் இருந்து பெங்களூர் கொண்டு வந்து, தனிக்கோர்ட்டு நீதிபதி குன்ஹாவிடம் சமர்ப்பித்து ஒப்புதல் சான்று பெற வேண்டும். பிறகு அந்த சான்றிதழை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை டி.ஐ.ஜி. ஜெயசிம்ஹாவிடம் காட்டி, நடைமுறைகளை முடித்த பிறகே ஜெயலலிதா வெளியில் வர முடியும்.
இந்த சட்ட நடைமுறைகள் நேற்று மதியத்துக்குப் பிறகே வேகமாக நடந்தன. எனவே அ.தி.மு.க. வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை கொண்டு வந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து, பெங்களூர் சிறப்புக் கோர்ட்டு நீதிபதி குன்ஹா நேற்று மாலை 5.45 மணி வரை காத்திருந்தார். கோர்ட்டு நடவடிக்கைகள் மாலை 5 மணியுடன் முடிந்த பிறகும் கூட அவர் சிறிது நேரம் கூடுதலாக காத்திருந்து குறிப்பிடத்தக்கது. ஆனால் அ.தி.மு.க. வக்கீல்கள் நேற்று மாலை 6 மணிக்குப் பிறகே பெங்களூர் வந்து சேர்ந்தனர். இதனால் ஜெயலலிதாவால் நேற்றே விடுதலை பெற முடியவில்லை.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு 2 நபர் ஜாமீன் உத்தர வாதம் எனப்படும் பிணைத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் ஏதேனும் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு தடவைக்கு பல தடவை, ஆவணங்கள் சரிபார்த்து வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள சிறப்புக் கோர்ட்டு கூடியது. அங்கு சிறப்புக் கோர்ட்டு நீதிபதி குன்ஹாவிடம் அ.தி.மு.க. வக்கீல்கள், நவநீத கிருஷ்ணன், குமார், அசோகன், மணிசங்கர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதற்கான உத்தரவை காட்டினார்கள்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி குன்ஹா 2 நபர் ஜாமீன் உத்தரவாதத்தை ஆய்வு செய்தார். ஜெயலலிதாவுக்கு குணஜோதி, பரத் ஆகிய இருவரும் ஜாமீன் உத்தரவாதம் வழங்கினார்கள். அவர்கள் இருவரும் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஜாமீன் உத்தரவாதமாக அளித்தனர். சசிகலாவுக்கு லட்சுமிபதி, ராஜு ஆகிய இருவரும் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தை ஜாமீன் உத்தரவாதமாக கொடுத்தனர்.
அது போல சுதாகரனுக்காக லோகேஷ், அன்பம்மாள் ஆகியோரும், இளவரசிக்காக புகழேந்தி, ராஜேந்திரன் ஆகியோரும் தலா ரூ.1 கோடி சொத்துக்களை ஜாமீன் உத்தரவாதமாக கொடுத்தனர். 8 பேரும் கொடுத்த சொத்து ஆவணங்களை நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா ஆய்வு செய்தார்.
ஜாமீன் உத்தரவாதம் கொடுத்த 8 பேரிடமும் அவர், இந்த ரூ.1 கோடி சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டது? அந்த சொத்துக்கள் பூர்வீகமாக உள்ளவை தானா என்று விசாரித்தார். அதற்கு 8 பேரும் உரிய பதில் அளித்தனர். அதில் நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹாவுக்கு திருப்தி ஏற்பட்டது. ரூ. 8 கோடி மதிப்புள்ள சொத்து ஜாமீன் உத்தரவாதத்தை அவர் ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் ஜெயலலிதாவை ஜெயிலில் இருந்து விடுவிக்கலாம் என்பதற்கான ரிலீஸ் ஆர்டரில் கையெழுத்திட்டு வழங்கினார்.
அவரது உத்தரவு 11.35 மணிக்கு ''டைப்'' செய்யக் கொடுக்கப்பட்டது. இதற்கு மட்டும் சற்று நேரமானது. இந்த உத்தரவுடன் நீதிமன்ற ஊழியர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு புறப்பட்டு வந்தார். சிறைச்சாலை அதிகாரிகளிடம் உத்தரவு வழங்கப்பட்ட பின் பிற்பகல் 3.15 மணிக்கு ஜெயலலிதா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதா ''இசட்'' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் அவர் ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும் பலத்த பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க, ஜெயலலிதா கார் மூலம் பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சிறிய விமானத்தில் ஏறி அவர் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார். ஜெயலலிதாவுடன் அதே விமானத்தில் சசிகலா, இளவரசி, டாக்டர் சிவக்குமார், உதவியாளர்கள் பூங்குன்றன், ராணி, போலீஸ் அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள்சாமி ஆகியோரும் வருகிறார்கள்.
ஜெயலலிதா வெளியே வந்து காரில் ஏறி புறப்பட்டதும், வழிநெடுக திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
இதேபோல், ஜெயலலிதாவை உற்சாகத்துடன் வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இன்று காலை முதலே அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் அ.தி.மு.க.வினர் சென்னைக்கு திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வழிநெடுக நின்றனர்.
ஜெயலலிதா வரும் போது மேள–தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே திரண்டுள்ளனர். இதேபோல் ஜெயலலிதாவை வரவேற்று சென்னை அழைத்து வருவதற்காக அ.தி.மு.க.வினர் நேற்றே பெங்களூரிலும் குவிந்தனர்.
அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் மீண்டும் பரப்பன அக்ரஹாரா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கண்காணிப்பில் 10 துணைக் கமிஷனர்கள் தலைமையில் 1500 போலீசார் குவிக்கப்பட்டனர். பரப்பன அக்ரஹாரா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறை அருகே அ.தி.மு.க.வினர் யாரும் வர அனுமதிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?