
தங்கை செண்டிமெண்டுடன் கந்தசாமி, அந்நியன் இரண்டையும் கலந்துக்கட்டி அடித்திருக்கிறார்கள். முதல் காட்சி "பாக்கிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில்.." என்று போடும் போது பக்கத்தில் இருப்பவரிடம் "சார் இது வேலாயுதமா ? இல்லை ஏதாவது விஜயகாந்த் படமா ?" என்று கேட்க அவரும் "எனக்கும் சந்தேகமா தான் சார் இருக்கு" என்றார்.
தீவிரவாதிகளுக்கு இந்திய அரசியல்வாதியுடன் (ஹோம் மினிஸ்டர்) தொடர்பு என்ற அதே ஃபார்முலா!. விஜய் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்று சண்டை போட்டால் கூட இருக்கும் கிராமத்து மக்கள், சந்தானம், தங்கை, இரண்டு ஹீரோயின், போலீஸ் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு போக முடியுமா ? செலவு என்ன ஆவது அதனால் தீவிரவாதிகள் சொந்த செலவில் (இவரை தேடி சென்னை வந்து) சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்.
விஜய் ஓபனிங் சீன் அருவாளுடன் வந்து ரயில் சீட் போடும் அந்த காமெடி - சூப்பர், அண்ணன் தங்கை பாசத்தை காண்பிக்க அவர் கோழி பிடிக்கும் காமெடி, பிறகு சீட்டு கம்பெனியில் போட்ட பணத்தை எடுக்க சென்னை வருவது, அவர் பணத்தை லவுட்ட சந்தானம் போடும் பிளான் என்று படம் முழு மூச்சு காமெடியாக மாறுகிறது. சும்மா சொல்லக்கூடாது ஜாலியாக போகிறபோக்கில் சந்தானம் பேசும் வசனங்கள் படத்துக்கு பலம். கடைசியில் அவர் "ஏம்பா இதை மூன்றாவது சீனிலேயே சொல்லியிருக்க கூடாதா ?" என்று அவர் விஜயிடம் கேட்பது அக்மார்க் சந்த(தா)னம் காமெடி.

சினிமா வில்லன் என்றால் என்ன செய்வார் ? பாம் வைப்பார், கள்ள நோட்டு அடிப்பார், பெண்கள் வியாபாரம் செய்வார், சீட்டு கம்பெனி நடத்தி மக்களின் பணத்தை ஏமாற்றுவார் இல்லை ரயிலை கவுப்பார். இந்த பட வில்லன் பயங்கிரம் இவை எல்லாவற்றையும் செய்கிறார்!. பாம் வைக்கும் வெளிநாட்டு தீவிரவாதி யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இந்த படத்திலும் அவர்களேதீவிரவாதிகளாக வருகிறார்கள். அவரை சப்போர்ட் செய்ய குங்கும போட்டு இட்டுக்கொண்டு ஒரு மந்திரி வந்தால் சமய உணர்வு பாதிக்கப்படாது என்ற ஃபார்முலாவை தவறாமல் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.


மசாலா படத்துக்கு உண்டான கேமரா, இசை என்று படம் சரியான எண்டர்டெயினர். தியேட்டர் காரர்கள் நினைத்தால் இன்னும் கொஞ்சம் சரியாக படத்தை எடிட் செய்யலாம்.
கொடுத்த காசுக்கு ஏமாற்றவில்லை. குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கலாம், விஜய்யை கிண்டல் பண்ணலாம்.

இட்லிவடை மார்க் - 6/10
முதலில் "Thanks Jaya TV" என்று வருகிறது :-)
நாளை ஏழாம் அறிவு விமர்சனம்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?