சென்ற இடுகையில் திரு ஞானியைப்பற்றி சில கருத்துக்கள் கூறி இருந்தேன். அது தவறு என அல்ட்டிமேட் ரைட்டர் சாரு என்னை கடிந்து கொண்டார். ஞானி அவர்களும் அது தவறு என விளக்கியுள்ளார்.
தவறுக்கு வருந்துகிறேன்.
நூலக விவகாரம் குறித்தும் ,சாரு குறித்து ஞானி சொன்னாதாக நம்பப்படும் கருத்து குறித்துன் ஞானி அளித்த விளக்கமும் , நூலகம் குறித்த என் கேள்வியும் , அவர் பதிலும் உங்கள் பார்வைக்கு.
*************************************************************
திரு ஞானி விளக்கம்
அன்புள்ள பிச்சைக்காரனுக்கு
வணக்கம்.
சாரு நிவேதிதாவுக்கு இண்ட்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பெயரை நான் சூட்ட்டவில்லை. சில வலைப்பூக்களில் அவர் அவ்வாறு வர்ணிக்கப்பட்டதையே நான் குறிப்பிட்டிருந்தேன். இதற்காக என் மீது ஏற்பட்ட கோபத்தில் அவர் நான் ஜெயல்லிதாவிடமிருந்து சூட்கேஸ்கள் வாங்குவதாக எழுதினார். பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தபோது , தன் கருத்து தவறானது என்றும் அதற்காக வருத்தப்படுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். சாருவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டென்றாலும், இருவரும் ஒருவர் மற்றவரிடம் விரோத பாவத்தில் இருந்ததில்லை. சிநேகமாகவே இருந்துவருகிறோம்.
அண்ணா நூலகம் பற்றி நான் எழுதியதை நீங்கள் படிக்கவில்லை என்று தோன்றுகிறது.
நவம்பர் 3 அன்று பேஸ் புக்கில் நான் எழுதியது இதுதான் : "கோட்டூர்புரத்திலிருந்து அண்ணா நூலகத்தை எழும்பூருக்கு மாற்றும் ஜெயலலிதாவின் முடிவு தேவையற்றது. தவறானது. அராஜகமானது. தமிழகம் தொடர்ந்து கருணாநிதி-ஜெயலலிதா தனிச் சண்டையால் சீரழிக்கப்படுகிறது. ராணி மேரி கல்லூரியை இடித்து புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா திட்டமிட்டபோது கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் ஒதுக்கி புரோகிதர்களுடன் பூமி பூஜை நடத்தினார். ஆட்சி மாறியதும் கருணாநிதி அதே இடத்தில் அண்ணா நூலகத்தைக் கட்டினார். ஜெயலலிதாவின் திட்டத்தை முறியடிப்பதுதான் கருணாநிதியின் அசல் நோக்கம்.
200 கோடி செலவில் சென்னையிலேயே ஒரு நூலகம் கட்டுவதற்கு பதில் 30 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களுக்கு தலா 7 கோடி கொடுத்தால் அவை சிறப்பான நூலகங்களாகியிருக்கும். தமிழகம் முழுவதும் பயன் கிட்டியிருக்கும். ஆனால் கருணாநிதியின் நோக்கம் போட்டி அரசியல்தான். ஜெயலலிதாவுடையதும் அதுவே. இருவரின் வழிமுறைகள் மட்டுமே வேறு. கருணாநிதி சாமர்த்தியமாக செய்வார். ஜெயலலிதா ஆணவமாக செய்வார். அண்ணா நூலகத்தைப் பொறுத்த மட்டில் அது சிறப்பாக இருப்பதாலும் அப்பகுதிக் கல்வி வளாகங்கள் இருப்பதாலும் அதை கோட்டூர்புரத்திலிருந்து மாற்றத் தேவையில்லை என்பதே என் கருத்து. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை ஓமந்த்தூரார் தோட்டத்தில் கருணாநிதி கட்டிய சட்டசபை கட்டடத்தில் ஜெயலலிதா அமைக்கப் போகும் பொது மருத்துவமனையுடன் சேர்த்து வைத்துவிடலாம். எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எல்லாரும் கோட்டூர்புரம் நூலகம் வாசலில் கூடி " ஆக்குப்பை வால்ஸ்டீர்ட்" போல " நூலகத்தை வசப்படுத்துவோம்" போராட்டம் நடத்த வேண்டும்."
தவிர, கருணாநிதி அண்ணா நூலகத்தைக் கட்டும்போதே நான் அதை எதிர்த்தேன். அந்தப் பணம் மாவட்ட நூலகங்களுக்கு செலவிடப்படவேண்டுமென்று அப்போதே ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன். நான் எழுதுவதை முழுமையாக படித்துவிட்டு முரண்படுங்கள். திட்டுங்கள். எனக்கு அதில் அவமானம் எதுவும் இல்லை. நான் என் கருத்துகளில் உறுதியாக இருப்பவன். என்னைப் படிக்காமலே திட்டுவது, திட்டுபவர்களுக்குத்தான் அவமானமானது.
அன்புடன் ஞாநி
***********************************************
அன்புள்ள ஞாநி சார் அவர்களுக்கு ,
வணக்கம்
நூலக பிரச்னை மற்ற அரசியல் பிரச்னைகள் போல் அன்று . இது நேரடியாக இளைஞர்களை , குறிப்பாக வேலை தேடும் இளைஞர்களை பாதிக்க கூடியது . போட்டி தேர்வுக்கு தயார் ஆவதற்கு நூலகங்களைதான் நம்பி இருக்கிறார்கள் . சென்னையில் மட்டுமே அனைத்து நூலகங்களையும் அமைத்தால் கிராமத்து இளைஞர்கள் என்ன செய்வார்கள் . இன்னொரு கேள்வி , வெளியூர் இளைஞர்கள் வந்து செல்ல வசதியான இடம் கன்னிமரா அமைந்துள்ள எக்மோர் பகுதிதான் . எனவே அதன் அருகில் அண்ணா நூலகம் மாற்றப்பட்டால் நல்லதுதானே ? சென்னை வாழ் இளைஞர்களுக்கே கூட அருகருகில் நூலகங்கள் இருப்பதுதானே வசதி ?
எனவே இட மாற்றத்தை துரிதமாக நடத்த சொல்லி போராடுவதுதானே அறிவுடமை ? அல்லது இதே நூலகத்தை கிராமம் ஒன்றுக்கோ , திருமழிசை , வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் போன்ற பகுதிகளுக்கு மாற்றுவதுதானே பலனளிப்பதாக இருக்கும் . ரிச் கெட் ரிச்செர் . புவர் கெட் புவரர் என்ற முதலாளித்துவ போக்கிற்கு இடதுசாரி அறிஞரான நீங்கள் ஆதரவளிப்பது வினோதம் .
மற்றபடி உங்களை மிகவும் மதிக்க கூடியவர்கள் நாங்கள் . தவறாக எழுதியதற்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க இருக்கிறேன் .
அன்புடன் ,
பிச்சைக்காரன்
*******************************************************************
திரு ஞானி அவர்கள் விளக்கம்
1.சென்னையில் புதிய நூலகம் அமைப்பதை நான் ஆதரிக்கவே இல்லை
.2, மாவட்ட நூலகங்களை மேம்படுத்தவே சொல்லுகிறேன்.
3.கருணாநிதி அரசியல் காரணத்துக்காக அமைத்தாலும், அந்த நூலகம் நன்றாகவே உள்ளது. எல்லா நூலகங்களும் நகரின் ஒரே பகுதியில் இருக்கத் தேவையில்லை.தவிர சென்னை பெரிதாக் வளர்ந்துவிட்டது. கோட்டூர்புர நூலகம் தரமணி கல்வி வளாகப் பகுதிக்கு, தென் சென்னைக்கும் பயன் தருகிறது. அங்கே படிப்பவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் அல்ல. பாலிடெக்னிக், கேட்டரிங் முதலியவற்றிலெல்லாம் அடித்தள மாணவர்கள் உண்டு. எல்லா நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டில் வரும் பின்தங்கிய வகுப்பினர் உண்டு.
4.கன்னிமாராவை மேம்படுத்தினாலே போதும். புதிதாக கட்டடம் தேவையில்லை.
5.நூலகத்தை இடம் மாற்றுவதாக ஜெயலலிதா சொல்வதை நம்பமுடியாது. செம்மொழி நூலகத்தை சட்டமன்றத்திலிருந்து அகற்றினார். ஆனால் அதற்கு இன்னும் புது இடமும் தரப்படவில்லை. நூலக புத்தகங்கள் எல்லாம் கோடவுனில் உள்ளன. இயங்கிக் கொண்டிருந்த நூலகம் ஜெயலலிதாவால் முடக்கப்பட்டுவிட்டது.
அன்புடன்
ஞாநி
http://famousstills.blogspot.com
http://tamil-shortnews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?