வன்னியில் இறுதிப் போரின்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைபெற்று வந்த வைத்தியசாலைகளை மீண்டும் மீண்டும் இராணுவத்தினர் இலக்கு வைத்துத் தாக்கினர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித் திருந்த நிலையில், போரின் போது இலங்கையில் மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தற்போது அறிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர் என்று செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில் வைத்தியசாலையில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் அது கூறுகின்றது.
போர் நடைபெற்றுவந்த வடக்கில் கடைசியாக இருந்த ஒரே வைத்தியசாலை அதுதான். இரண்டு தடவைகள் அந்த வைத்தியசாலை மீது ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. அத்தோடு அந்த வைத்தியசாலை அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. நோயாளர்கள் சனசமூக நிலையம் ஒன்றுக் மாற்றப்பட்டனர். அங்கு தண்ணீர் விநியோகம் என்பது அறவே கிடையாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"மருத்துவ உதவி ஆபத்தில்" என்ற தலைப்பில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு நேற்று ஜெனீவாவில் விடுத்த 24 பக்க அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் மீதான தாக்குதல சம்பவங்கள் லிபியா, சிறிலங்கா தொடக்கம் சோமாலிய வரை அதிகரித்துள்ளன என்று அறிக்கை கூறுகின்றது.
இலங்கை மற்றும் சோமாலியாவில் வைத்தியசாலைகள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டன. லிபியாவில் அம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டன. கொலம்பியாவில் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் காயமடைந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சோதனைச்சாவடிகளில் பல மணிநேரம் நிறுத்தி வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டன என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் வெஸ் டக்கோர்ட் தெரிவித்தார்.
2008 முதல் 2010 வரையில் மருத்துவர்கள், தாதியர், அம்புலன்ஸ்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீது சுமார் 600 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகின்றது. இலங்கை, லிபயா, ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா மற்றும் கொலம்பியா உள்ளிட்ட 16 நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்த புள்ளிவிபரத் தரவுகள் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
சிலவேளைகளில் தற்செயலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் அதிகமான சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே மருத்துவ அல்லது சுகாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
யுத்த வலயத்தில் கடமையாற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சகல தரப்பினரினதும் தலையாய கடமை எனவும், ஜெனீவா பிரகடனத்திலும் இந்த விடயம் குறிப்படப்பட்டுள்ளதாகவும் கூறும் அறிக்கை, இந்தப் பிரடகனம் நடைமுறைக்கு வந்து 150 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அண்மைக் காலமாக அது அடிக்கடி மீறப்பட்டு வருவதாகவும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு குற்றஞ்சாட்டி உள்ளது.
போர்களத்தில் மருத்துவ சேவையின் அவசியத்தை எவரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை எனவும் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் மருத்துவ நிலைகள் மீதோ அல்லது மருத்துவப் பணியாளர்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் பெரும் எதிர்ப்பு கிளம்பும் எனினும், தற்போது துன்பியல் நிகழ்வாக அவ்வாறு எதிர்ப்பு காட்டப்படுவதில்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://veryhotstills.blogspot.com/
http://veryhotstills.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?