Thursday 11 August 2011

இட்லி-தோசை-பொங���கல்-வடை-சட்னி-சா���்பார்-04-08-2011



04-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இப்பவாச்சும் போனாரே..!

வீட்டுக்குப் போகவே மாட்டாரா என்று எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, சொந்தக் கட்சிக்காரர்களையே ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா..!

குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்கும்போது எடியூரப்பா நடத்திய ஓரங்க நாடகத்தை இந்திய அரசியல் வட்டாரமே புருவத்தை உயர்த்திக் கவனித்த்து. அதற்காகவே முதல்வர் பதவிக்கு இவரைவிட்டால் வேறு யாரும் லாயக்கில்லை என்று நினைத்து அகமகிழ்ந்திருந்தார்கள் பாஜக தலைவர்கள்.

அனைத்தையும் மிகச் சுலபமாக தானே கெடுத்துக் கொண்டார் எடியூரப்பா. காரணம் கருணாநிதியை போலவே பதவி பாசம், பணப் பாசம், பிள்ளைகள் மீதிருந்த பாசம். பதவியை வைத்து பணம் செய்யும் வித்தையைக் கற்று, அதனை மிகச் சரியாக தனது பிள்ளைகளுக்கே கிடைக்கும்படியாக செய்த மோடி மஸ்தான் வித்தை, சரியான சமயத்தில் அவருக்கே வினை வைத்துவிட்டது.


ஊழல்கள் அம்பலமானவுடன் இனிமேலும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸை நாம் எதிர்க்க முடியும் என்ற சங்கடத்துடன் எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி முனங்கியுள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள். இதற்காகவே மானாவரியாக திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர் அவர்கள்.

கோபத்தில் வெங்கையா நாயுடுவின் லேப்டாப்பை பிடுங்கி எறிந்து உடைத்தேவிட்டாராம் எடியூரப்பா. உடன் தடுக்கப் பாய்ந்த ஒரு அமைச்சரை அடித்திருக்கிறார்.. "நான் நினைச்சா ஒருத்தன்கூட உசிரோட டெல்லி போய்ச் சேர மாட்டீங்க.." என்று உயர்மட்டத் தலைவர்களையே அன்பாக மிரட்டியிருக்கிறார். ஆனாலும் அத்தனையையும் பொறுத்துக் கொண்டு புதிய முதல்வரை தேர்வு செய்திருக்கும் ராஜ்நாத் சிங் மற்றும் அருண் ஜெட்லியை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.

ஜனநாயக முறையில் எம்.எல்.ஏ.க்களிடையே ஓட்டெடுப்பு நடத்திதான் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்து வந்திருப்பவர் சதானந்தா கவுடா. மொத்தமுள்ள 121 எம்.எல்.ஏ.க்களில் இவருக்கு ஆதரவளித்தவர்கள் 62 பேர். 56 பேர் ஆனந்த்குமாரின் ஆதரவாளர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்திருக்கிறார்கள். இதற்கே கூட்டத்தில் பெரும் அடிதடியே நடந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரி.. சண்டைல கிழியாத சட்டை எங்கேயிருக்கு..? 6 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கும் சதானந்த கெளடாவின் தேர்வு அரசியல் சட்டப்படி சரிதான் என்றாலும், உண்மையான ஜனநாயகத்திற்கு விரோதமானது.

சதானந்த கெளடா இப்போது சிக்மளூர் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். அவர் முதல்வர் பதவியேற்றவுடன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போகிறார். உடனேயே அந்த்த் தொகுதிக்கு மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டும்.. யார் வீட்டுக் காசு..? ரொம்ப பீல் பண்ணாதீங்க மக்களே..! இந்தக் கொடுமையைச் செய்யாத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லை..! ஸோ.. இன்னொரு அல்வான்னு நினைச்சுக்குங்க..!


இயக்குநர்கள் சங்கத்தின் தடாலடி முடிவு..!

புலிக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள். இத்தனை நாட்களாக இயக்குநர்கள் சங்கத்தில், இயக்குநர்கள் சொல்வதைத்தான் இணை, துணை, உதவி இயக்குநர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டதால் முதல் செயற்குழுக் கூட்டத்திலேயே தாங்கள் நினைத்த்தை சாதித்துவிட்டார்கள் உதவி இயக்குநர்கள்.

இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கான நுழைவுக் கட்டணம் 5,000 ரூபாயாக 25,000 ரூபாயாக உயர்த்தியிருந்தனர் முந்தைய சங்க நிர்வாகிகள். தற்போது புதிய நிர்வாக அமைப்பில் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருமே உதவி இயக்குநர்கள் அணியினர்தான் என்பதால் அவர்களே ஒரு தீர்மானம் கொண்டு வந்து தங்களுக்கான நுழைவுக் கட்டணம் திரும்பவும் 5,000 ரூபாய்தான் என்று நிறைவேற்றிவிட்டார்கள்.

இயக்குநர்கள் சங்கத்தில் இன்னொரு சுவாரசியம்.. சென்ற ஆண்டு நடந்த சங்கத்தின் பொதுக்குழுவில் பாரதிராஜாவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதற்காக 'நேசம் புதுசு' படத்தின் இயக்குநர் வேல்முருகனை இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார்கள். இதற்காக வேல்முருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின்பும், போராட்டத்திற்குப் பின்பும் சங்க விஷயங்கள் அம்பலத்திற்கு வர வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு வழக்கு வாபஸ் பெறப்பட்டு வேல்முருகன் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது.

அதே வேல்முருகன்தான் தற்போது சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவர்.. சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.  பதவியேற்பு விழாவில் இவருக்குத்தான் அதிக கை தட்டல்..! இப்போது தினமும் சங்க அலுவலகத்திற்கு வந்து பொறுப்பாகப் பணியாற்றுகிறாராம்..! இனி 2 ஆண்டுகளுக்கு சங்கத்தை வழி நடத்தப் போவது இவராகத்தான் இருக்கும் என்கிறார்கள் சங்கத்தின் நிலவரம் தெரிந்தவர்கள்..!


சக்சேனாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு..!

15 நாட்களாக அமைதியாக இருந்த தாத்தா இன்று வாய் திறந்து சக்சேனாவுக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
 
சக்சேனாவின் கைது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்கிறார் கருணாநிதி. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவசரம், அவசரமாக மிச்சம் மீதியிருந்த தொகையைக் கொடுத்து கேஸ் பைசல் செய்யப்பட்டதை மட்டும் கவனமாக மறைத்தோ அல்லது மறந்தோவிட்ட தாத்தா, சக்சேனாவின் கைதை மட்டும் வன்மையாக கண்டித்திருக்கிறார்.


இதை மட்டும்தானே இவரால் செய்ய முடியும்..! சென்ற ஆட்சிக் காலத்திலும் இது ஒன்றைத்தான் இவர் செய்து கொண்டிருந்தார். ஆனால் "நான் காலையில் இருந்து ராத்திரிவரைக்கும் நாட்டு மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தேன்.." என்று வாய் கிழிய புழுகிக் கொண்டிருந்தார். செக்கர்ஸ் ஹோட்டல் தாக்கப்பட்டபோது நிருபர்கள் கேட்டதற்கு பதிலே சொல்லாமல் மெளனம் காத்த உத்தமத் தலைவராச்சே..!

சக்சேனாவை அவ்வளவு சுலபத்தில் ஆத்தா விட மாட்டார் என்றே நினைக்கிறேன். ஆத்தாவின் குறி கலாநிதி மாறன்தான். சக்சேனாவை வைத்துதான் அவரை இழுக்க வேண்டும் என்பதால் எப்படியும் வழக்குகள் வந்து குவிய, குவிய உடனடி கைதுகள் நிச்சயம் நடக்கும்.

இதுதான் சமயம் என்று மிகக் கச்சிதமாக நேமிக்சந்த் ஐபக்கூட புகார் மனுவைக் கொடுத்து மீதிப் பணத்தை வசூல் செய்துவிட்டார். அடுத்து புகார் தர வேண்டிய அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதனை போலீஸ் தரப்பிலும், ஜெயலலிதா ஆதரவு திரை பிரபலங்கள் தரப்பிலும் நெருக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.  என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் ராமநாதன்.  அவர் தைரியமாக வந்து புகார் கொடுத்தால், நிச்சயம் கலாநிதி மாறன் புரசைவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தே தீர வேண்டும்..!

சக்சேனா மீது குவிந்த வழக்குகள் எதைப் பற்றியும் குறிப்பிடாத தினகரன் பத்திரிகை, கடைசியாக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுடன் சிக்கியிருக்கும் விஷயத்தைப் பற்றி மட்டும் விலாவாரியாக குறிப்பிட்டிருப்பது ஏன் என்றும் புரியவில்லை.


9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

வருடாவருடம் சென்னையில் ICAF அமைப்பு நடத்தும் சர்வதேசத் திரைப்பட விழா இந்த வருமும் 9-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை திரைப்பட விழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், கூடுதலாக ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரிலும் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாம். ஃபிலிம் சேம்பர் தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் அதற்குப் பதிலாக ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்கு டிரான்ஸ்பராம்.

சென்ற ஆண்டு நடந்த துவக்க விழா மற்றும் இறுதி நாள் விழாக்களில் தமிழ்ச் சினிமாக்களின் முன்னாள் ஹீரோயின்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த்தாக சமீபத்தில் நடந்த அந்த அமைப்பின் செயற்குழுவில் பல பெரிசுகளும் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்..! இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு பழைய நடிகைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நரைத்த முடியுடனும், தள்ளாடி நடந்து வரும் நிலையில் இருக்கும் சினிமா ரசிகர்களுமாக சேர்ந்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்களாம்..!

ஆகவே.. இந்த ஆண்டு நிகழ்ச்சி அந்த அளவுக்கு கலர்புல்லாக இருக்காது என்றே நினைக்கிறேன். எஸ்.வி.சேகர் இந்த முறையும் மறைமுகமாக துணைத் தலைவராகப் பணியாற்றுவார். அவர் நேரடியாக சம்பந்தப்பட்டால் விழா நல்லபடியாக நடக்குமா என்று தெரியாது..
 
அதேபோல் சென்ற ஆண்டு தமிழக அரசிடம் 25 லட்சம் ரூபாய் டொனேஷன் கேட்டு கிடைக்காமல் வருந்தினார்கள் நிகழ்ச்சியை நடத்தியவர்கள். இந்த முறையும் கேட்க இருக்கிறார்களாம். சென்ற ஆண்டாவது கேட்க முடிந்தது. இப்போது அப்படி கேட்பதற்கு அனுமதியாவது கிடைக்குமா என்பது சந்தேகமே..!

 
இம்மார்ட்டல்ஸ்(Immortals) டிரெயிலர்

வரவிருக்கும் ஆங்கிலப் படங்களின் டிரெயிலர்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே வந்தபோது இந்தத் திரைப்படம் கண்ணில்பட்டது. 300 திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களின் அடுத்தப் படைப்பு இதுவாம்.

டிரெயிலரே 300 படம் போலவேதான் உள்ளது. கதையும் அப்படித்தான் இருக்கிறது. இந்தப் படம் பற்றிய விக்கிபீடியாவின் தளத்தில் படித்துப் பாருங்கள். 


கொசுறு நியூஸ் : இந்தப் படத்தின் ஹீரோயின் நம்ம ப்ரீடா பிண்டோ..!



 
காதல் படுத்திய பாடு..!

காதல், காதல் என்கிறார்களே.. அந்த வார்த்தை இங்கே என்ன பாடுபடுகிறது என்று பாருங்கள்..!

அந்த அம்மாவுக்கு இள வயதில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் நடிக்க வந்த புதிதில் உடன் துணைக்கு தாயாரும் ஷூட்டிங்கிற்கு வந்து கொண்டிருந்தார். படத்தில் துணை இயக்குநராக, டயலாக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பணியில் இருந்தவர் ஒரு துடிப்பான இளைஞர்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும்போது அந்தப் பெண்ணின் அம்மாவுக்கும், துணை இயக்குநரான அந்த இளைஞருக்குமிடையில் காதல் தீயாய் பற்றிக் கொண்டது. விஷயம் அந்தப் பெண்ணின் அப்பாவுக்குத் தெரிய வர, "நீ மகளைப் பார்த்துக்கிட்ட லட்சணம் போதும். இடத்தைக் காலி பண்ணு.." என்று சொல்லி அன்பாக, மனைவியை அன்பான காதலருடனேயே அனுப்பி வைத்துவிட்டார்.

துணை இயக்குநரும், நடிகையின் அம்மாவும் ஈருடல், ஓருடலானார்கள். துணை இயக்குநர் தனது வீட்டாரை மறந்து, உற்ற நண்பர்களைத் துறந்து அட்வைஸ் செய்த இயக்குநரையும் பகைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனாலும் இளைஞர் தொழிலில் கெட்டி.. குடும்பமும் களை கட்டிச் சென்று கொண்டிருந்த்து. மனைவி வந்த நேரத்தில்தான் தனக்கு வாய்ப்புகள் வருகிறது என்றெண்ணி தொழிலில் தீவிரமாகி வெற்றி பெற்றார்.

இப்போதுதான் அவருக்கு இடியாப்பச் சிக்கல் துவங்கியது. மீடியாக்கள் அவரை பேட்டியெடுக்கத் துவங்க, தனது மனைவியாக தன்னைவிட வயதில் மூத்த இவரை அடையாளம் காட்ட முடியாத சூழல்.. அதே சமயம் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாமல் தத்தளித்தார்.

இந்தச் சங்கடத்துடனேயே சில வருடங்களை சில வெற்றிகளுடன் தாண்டியவர், ஒரு கட்டத்தில் நின்று நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார்.
 
தனது குடும்பத்தினரின் வற்புறுத்தல், மீடியாக்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் கிண்டல்கள்.. இதனால் தனது எதிர்கால வாழ்க்கைக்காக மனைவியைப் பிரிய முடிவெடுத்தார். முதலில் ஒரு நாள்விட்டு ஒரு நாள் வீட்டுக்குச் சென்றார். பின்பு 3 நாட்களுக்கு ஒரு முறை. அடுத்து வாரத்துக்கு ஒரு முறை, கடைசியாக மாத்த்திற்கு ஒரு நாளாகச் சென்று.. இறுதியில் "இனி இந்தப் பக்கமே வர மாட்டேன். எவ்வளவு வேணுமோ வாங்கிக்க.. இந்தா ஆளை விடு.." என்று ஆம்பளைத்தனமாகச் சொல்லி எஸ்கேப்பாகிவிட்டார்.

தனது முட்டாள்தனமான காதலால் குடும்பம், உறவுகளே இல்லாமல் போன   வேதனையில் அந்தப் பெண்மணி தற்போது பரிதாபத்தில்...! கல்யாணமாகி குழந்தை பெற்றுவிட்ட மகளே, தனது தாய் என்று சொல்லாமல், தெரிந்தவர் என்று சொல்லி உதவும் நிலையில் வாழ்க்கையின் விரக்தியில் உள்ளார்.

வெற்றி பெற்ற ஆண் மகனோ அமர்க்களமாக மணமுடித்து சந்தோஷமாக வாழ்கிறார். இதில் யார் மீது தவறு..?


நியூயார்க் மாகாணத்தில் ஒரு சந்தோஷம்..!

கடந்த ஜூன் 24-ம் தேதி இரவு 11.15 மணிக்கு நியூயார்க் மாகாண கவர்னர் கியூமோ கையெழுத்திட்ட அந்த பிரகடனத்திற்குப் பிறகு அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதியளிக்கும் 6-வது மாநிலமாக நியூயார்க் மாகாணம் உருவெடுத்துள்ளது.

இதற்காகவே காத்திருந்தாற்போல் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் சென்ற மாதத்தில் நியூயார்க் மாகாணத்தில் நடந்தேறியுள்ளது. பல்வேறு எதிர்ப்புகள், ஆதரவுகள் என்று பலத்த சர்ச்சைகளுக்கிடையில்தான் இந்த அனுமதி கிடைத்திருக்கிறது.


மாநில செனட்டில் 33 பேர் ஆதரவளித்தும் 29 பேர் எதிர்த்து ஓட்டளித்து மயிரிழையில்தான் தப்பியுள்ளது இந்தச் சட்டம். ஆனாலும் தங்களது திருமணத்திற்காக இத்தனை ஆண்டுகளாக காத்திருந்த காதலர்கள்தான் கண்ணீர்க் கடலில் மிதந்துள்ளார்கள்.

கனெக்டிக்கட், மசாசூட்ஸ், வெர்மான்ட், நியூ ஹாம்ஸையர், அயோவா ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு 6-வது மாநிலம் நியூயார்க் மாகாணம்தானாம். 2 வருடத்திற்கு முன்பு நடந்த ஓட்டெடுப்பில்  சுதந்திர கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களித்ததால் தோற்றுப் போயிருந்தது இந்தச் சட்டம்.  தற்போது  4 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மனம் மாறி குடியரசுக் கட்சியினருடன் இணைந்து வாக்களிக்க மசோதா நிறைவேறியுள்ளது.

 

ஜூன் 24-ல் சட்டம் அறிவிக்கப்பட்டாலும் 30 நாட்கள் கழித்து ஜூலை 25-ல்தான் அமலுக்கு வந்துள்ளது. அன்றைக்கே பல திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டம் அனுமதியளித்தாலும், மற்ற சாதாரண தம்பதிகளுக்கான சில சலுகைகள், சட்டத் திட்டங்கள் தற்போதைக்கு இவர்களுக்கு வழங்கப்படாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நாகரிகத்தில், தனி மனித உரிமையில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் வெறும் 6 மாநிலங்களில் மட்டுமே அமலில் இருக்கும் இச்சட்டம் இந்தியாவிற்கு எப்போது வருமோ..?

 
சன் டிவியின் புதிய சேனல்கள் லிஸ்ட்

ஆட்சி மாற்றம் நடந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் ராஜ்ஜியத்தில் நாங்கள்தான் ராஜா என்பதைப் போல தொழிலில் தொலைக்காட்சி உலகத்தில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்கிறார்கள் மாறன்கள்.

ஏற்கெனவே இருக்கின்ற சேனல்களையே பார்ப்பதற்கு முடியாமல் இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதியன்று கூடுதலாக 13 சேனல்களுக்கு அனுமதி பெற்றுள்ளார்கள் மாறன்கள்.

அந்த 13 சேனல்களுக்கும் அப்லிங், டவுன்லிங் உடன் அனுமதி பெற ஒரே நாளில் மட்டும் 50 கோடி ரூபாயை செலவழித்துள்ளார்கள்.

வரவிருக்கும் புதிய சேனல்களின் பெயர்கள் இது :

1.ஜெமினி ஆக்சன்

2.ஜெமினி லைஃப்

3.ஜெமினி டிவி ஹெச்டி

4.கே டிவி ஹெச்டி

5.கொச்சு டிவி

6.சன் ஆக்சன்

7.சன் லைஃப்

8.சன் மியூஸிக் ஹெச்டி

9.சன் நியூஸ் ஆங்கிலம்

10.சன் டிவி ஹெச்டி

11. சன் டிவி ஆர்-1

12 சூரியன் டிவி நியூஸ்

13. சூரியன் ஆக்சன்

கூந்தல் உள்ள மாமி அள்ளியும் முடிவாள். கொண்டையும் போடுவாள். இல்லாதவள் எதுக்காக வயிறு எரிய வேண்டும்..!?

உண்மைதான். இருந்தாலும் சுமங்கலி கேபிளில் கேட்காமலேயே அனைத்து மொழி சன் குரூப் சேனல்களையும் நம்மிடம் தள்ளிவிடும் சன் நிர்வாகம், இந்த 13 சேனல்களையும் சேர்த்துக் கொடுத்தால் சுமங்கலியில் இடம் பெற்றிருக்கும் மற்ற சேனல்களெல்லாம் எங்கே போகும்..?

 
தற்போதைய தேவை விடுதலை மட்டுமே..!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழக அரசின் அனைத்துவித உதவிகளும் வழங்கப்படும் என்றும், கூடுதலாக மாதந்தோறும் ஓய்வூதியமாக 1000 ரூபாயும் தரப்படும் என்றும் ஜெயல்லிதா அறிவித்திருக்கிறார்.

இதையெல்லாம்விட அடிப்படையாகவும், முதலாவதாகவும் அவர் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. அது என்னவெனில், அந்த மக்களை முகாம்களை விட்டு வெளியேற்றி தமிழகத்து மக்களோடு, மக்களாக கலந்திருக்கச் செய்ய வேண்டும்..! வெளிநாடுகளுக்கு உறவினர்களிடத்தில் செல்ல விரும்பும் தமிழ் ஈழத்து மக்களுக்கு தமிழக அரசே விமான டிக்கெட் எடுத்து அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்..! பல்வேறு முகாம்களில் இருக்கும் அவர்களது ஆண் சொந்தங்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் தங்க வைக்க வேண்டும்.. !

முகாமில் இருக்கும் குடும்பங்களுக்கு 1000 ரூபாயெல்லாம் எந்த மூலைக்கு..? ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 7500 ரூபாய் நிதியுதவியாகத் தரப்பட வேண்டும்..! அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் ப்ரீ சீட் தரப்பட வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கும் 1 சதவிகிதமாவது ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.. இப்படிச் செய்தால்தான் ஈழத் தமிழன், தமிழகத்து தமிழன் என்ற மனப்பான்மையும் இல்லாமல் போய் நாமெல்லோரும் தமிழர்கள் என்ற மனப்பான்மை வளரும்..!

 
தொண்டை புற்றுநோயை வெற்றி கொண்டவர்..!

இந்தச் செய்தியைப் படித்தவுடன் ஒரு கணம் அதிர்ச்சியாகித்தான் போனேன். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம்..!

சென்ற ஆண்டு ஜீலை மாதம்தான் அவருக்கு தொண்டை புற்று நோய் பாதிப்பு இருப்பதாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ ரெக்கார்டுபடி 4-வது ஸ்டேஜில் டக்ளஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு கடுமையான சிகிச்சை முறைகள், மருத்து சிகிச்சைக்குப் பின்பு தற்போது தான் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தாலும், அவர் எப்போதும் மருத்துவர் கண்காணிப்பில்தான் இருந்தாக வேண்டும் என்று பத்திரிகைகளில் பல்வேறு மருத்துவர்களும் எச்சரித்திருக்கிறார்கள்..!

மனுஷனுக்கு 65 வயசாமே.. நம்ப முடியலை. அவருடைய காதல் மனைவியும், நடிகையுமான கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸுக்கு வயது 40.  இத்தம்பதிகளுக்கு இரு குழந்தைகளும் உண்டு. எனக்கு விவரம் தெரிந்து டக்ளஸின் நடிப்பில் பேஸிக் இன்ஸ்டிக்ட்டை பார்த்து அசந்ததுவிட்டேன். அதற்கு முன்பேயே டிஸ்குளோயரை பார்த்திருந்தாலும் அது மறந்துவிட்டது.. அதற்குப் பிறகு பார்த்த டிராபிக் படம்தான் அவருடைய நடிப்பில் நான் பார்த்து, எனக்கு மிகவும் பிடித்த படம்.

அதில் போதை மருந்துக்கு ஆட்பட்டு லாட்ஜில் இருக்கும் தனது மகளைத் தேடி தெருத்தெருவாக அலையும் காட்சியில் அவர் முகம் காட்டும் எக்ஸ்பிரஷன்.. இப்போதும் மறக்க முடியவில்லை..! ஒரிஜினல் அப்பாவாக தன்னை அந்தப் படத்தில் நிறுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்..!

மனைவியின் அன்பு, பிள்ளைகளின் பாசம், ரசிகர்களின் வேண்டுதல்கள் என்று எல்லாமே தன்னை மீட்டெடுத்த்ததாக தொலைக்காட்சி பேட்டியொன்றில் உருகியிருக்கிறார் டக்ளஸ்..! அவர் நீண்ட ஆயுளைப் பெறட்டும்..! 

"ஐயோ" என்ற உணர்வு எனக்குள்ளும் ஏற்பட்டதற்குக் காரணம், என் தந்தை இதே தொண்டை புற்று நோயால்தான் மரணமடைந்தார்.


விடுதலையின் பராக்கிரமங்கள்..!

சமீபத்தில் நடந்த சின்னத்திரை இயக்குநர்கள் சங்கக் கூட்டத்தில் சங்கத் தலைவர் விடுதலையின் பராக்கிரமங்களைக் கேள்விப்பட்டு கதி கலங்கி போய்விட்டார்கள் உறுப்பினர்கள்.

"என்னை அடிக்க வந்தார்.. ஆளை காட்டி என்னை அடிச்சு துரத்தச் சொன்னாரு.. வாடா.. போடான்னு அவமரியாதையா பேசினாரு. அதுனாலதான் போன தடவை நான் சங்கத்தின் செயலாளராக ஜெயித்தவுடன் அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.." என்றார் இயக்குநர் கவிதாபாரதி.

"என்னை குடும்பத்தோட கோவில்ல போய் பிச்சையெடுக்கச் சொன்னாரு விடுதலை.. இத்தனைக்கும் விடுதலை என்னோட 15 வருட குடும்ப நண்பர்.." என்று வருத்தப்பட்டார் இயக்குநரும், கதாசிரியருமான ராஜ்பிரபு.

"நீ இனிமே சீரியல் டைரக்ட் பண்ணக் கூடாது.. ஏன்.. தமிழ்நாட்டுலேயே இருக்கக் கூடாது.. நாளைக்கே நீ ஊரைவிட்டு ஓடணும். இல்லை அடிச்சுத் துரத்துவேன்னு மிரட்டினாரு. இவர் யார் ஸார் என்னை ஊரை விட்டுப் போகச் சொல்ல..? நான் டைரக்ஷன் செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்கு இவருக்கு என்ன அதிகாரம் இருக்கு..?" என்று பொங்கித் தீர்த்தார் இயக்குநர் சி.ஜெ.பாஸ்கர்.

"பல நடிகர்களை, துணை இயக்குநர்களை சங்க அலுவலகத்திற்கு அழைத்து ஆள் வைத்து அடித்தார் விடுதலை. அவரே அடிக்கவும் செய்திருக்கிறார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு பின்பு அது தீர்க்கப்பட்டது.." என்று குற்றம்சாட்டினார் கவிதாபாரதி.

"எல்லாவற்றுக்கும் மேலாக சங்கப் பணத்தில் ஊழல் செய்தார் விடுதலை.." என்று நேருக்கு நேராகவே குற்றம் சுமத்தினார் கவிதாபாரதி. "பையனூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திரை ஊரில் சின்னத்திரையினருக்காக கட்டப்படவிருக்கும் குடியிருப்பை கட்டப் போகும் மலேசிய நிறுவனத்தினருக்கு சங்க நிர்வாகிகளின் அனுமதி இல்லாமல் 49 லட்சம் ரூபாயை தூக்கிக் கொடுத்துவிட்டார். இப்போது நாங்கள் அது பற்றி கேட்டதற்கு 12 லட்சத்தை திருப்பி வாங்கித் தருகிறேன் என்றவர், மீதி 37 லட்சம் திரும்பி வராது என்கிறார். அது அந்தப் பகுதியை செப்பனிட்ட வேலைக்கு சரியாகிவிட்டதாக அந்த நிறுவனம் சொல்வதாகச் சொல்கிறார்.

இதில் ஒரு காமெடி என்னவெனில், பெப்ஸி அமைப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்த மரம், செடி, கொடி, மண்ணை அகற்ற வெளியில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாயை பெப்ஸி பெற்றுக் கொண்டு அனைத்தையும் அள்ளிக் கொள்ளும்படி அனுமதி கொடுத்த்து. அவர்களும் அதனை செய்துவிட்டார்கள். ஆனால் சின்னத்திரை சங்கத்தில், விடுதலைதான் அப்படியே உல்டாவாக அதையெல்லாம் எடுத்திட்டுப் போறதுக்காக 39 லட்சம் ரூபாயை தானமாக அளித்திருக்கிறார். யார் வீட்டுக் காசு இது..?" என்றார் ஆக்ரோஷம் குறையாத கவிதாபாரதி.

"சி.ஜெ.பாஸ்கர் விவகாரத்தில் யாரைக் கேட்டு தன்னிச்சையாக முடிவெடுத்தீர்கள். உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்த்து யார்..?" என்று கோபக்கனலைக் கக்கினார் யார் கண்ணன். "சி.ஜெ.பாஸ்கருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பாமல், அவரிடம் கருத்து கேட்காமல் எப்படி நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்..?" என்றார் யார் கண்ணன்.

"என் மீது எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கையைவிட விடுதலையை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு நடிகை குஷ்பூ என்னைப் பற்றி பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமென்ன..? யார் அவருக்கு என் மீதான புகார்கள் பற்றி தகவல்களைக் கொடுத்தது..? குஷ்பூவுக்கும் இந்தச் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்..?" என்று மீண்டும் வந்து பொங்கினார் சி.ஜெ.பாஸ்கர்.

இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டது சங்கத்தின் செயலாளர் எஸ்.வி.சோலைராஜாவின் பேச்சு. "செகரட்டரின்னு நீங்க ஒருத்தர் எதுக்கு ஸார் இருந்தீங்க..? நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க.. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டாமா?" என்று துணை இயக்குநர்கள் கோரஸாக எழுந்து கேட்க, "நான் என்னங்க செய்யறது..? எனக்கு என் உயிர் மேல பயம்.. விடுதலைகிட்ட கேட்டால் என்னையும் ஆளை வைச்சு அடிப்பாருன்னு நினைச்சு பயந்துதான் அமைதியா இருந்தேன்.." என்றார்.. இதைக் கேட்டுவிட்டு பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த விடுதலையே சிரித்துவிட்டார்..! மகா காமெடி..!

அரசியல்வியாதிகளின் உடன்பிறப்பான ஊழல், சகல துறைகளிலும் கண்ணை மூடிக் கொண்டு நுழைந்துவிட்டது. சென்ற கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவரது செல்லப் பிள்ளை போல இருந்த விடுதலையின் செயல்கள் அவருக்கு கொஞ்சமும் மரியாதை அளிப்பதாக இல்லை என்று அனைவருமே அவரைக் கண்டிக்க.. எல்லாவற்றுக்கும் "ஸாரி. மன்னிச்சுக்குங்க.." என்று ஒற்றை வரியில் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டார்.

ஆனாலும் யார் கண்ணன் விடவில்லை. இந்த மாதம் 14-ம் தேதி நடக்கும் சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல், பணம் கையாடல் செய்த குற்றத்திற்காக இயக்குநர் விடுதலைக்கு தேர்தலில் நிற்க தடை என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டார்..!

அரசியல்வியாதிகளை தொழிலாளர்களின் சங்கத்திற்கு தலைவராக்கினால் இதுதான் நடக்கும்..!

பிரிட்டனின் இளம் வயது தாத்தா..!

நிரந்தரமான வேலையில்லாத பிரிட்டனைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவர்தான், அந்த நாட்டில் மிக இளம் வயது தாத்தா என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறாராம்.

இவருடைய 14-வது வயதில் பிறந்த இவரது மகளான தற்போதைய பள்ளி மாணவி, தனது 15-வது வயதில் சக மாணவனுடனான உறவின் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கிறாராம்..!


"அவள் ரொம்பச் சின்னப் பொண்ணு. ஆனா குழந்தையை வளர்க்கும் பக்குவம் அவளுக்கு இருக்கு. இந்த விஷயத்துக்காக நான் அவளை வெறுக்கப் போவதில்லை. ஏன்னா நான் செஞ்சதைத்தானே அவளும் செஞ்சிருக்கா..?" என்கிறார் இந்தத் தாத்தா.

தற்போதைக்கு நிரந்தரமான வேலையில்லாத இந்த்த் தாத்தா கிடைக்கின்ற வேலையையெல்லாம் செய்யும் ஆல் இன் ஆல் ராசாவாம். அவருடைய அக்கம்பக்கத்தினர் எல்லோரும் அவரை அரை லூஸு என்பதை போலவே பார்க்கிறார்கள். பேசுகிறார்கள்..!

எப்போதும் பணம், பணம் என்பது பற்றியே பேசும் இந்தத் தாத்தா, தனது மகளின் இந்த பிரசவ செய்தியைக்கூட கார்டியன் பத்திரிகைக்கு சொல்லி ஆயிரக்கணக்கான பவுண்டுகளை பெற்றிருப்பதாக அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்கள்..!

மகளின் தாயான தனது முன்னாள் காதலியுடனும் இல்லாமல், வேறொரு பெண்ணின் மூலம் மேலும் 2 பிள்ளைகளுக்கு அப்பனாகவும் இருக்கின்ற இந்த்த் தாத்தாவின் அம்மாவும், பாட்டியுமே இன்னும் உயிரோடு இருக்கிறார்களாம். "எப்படியோ எங்க்க் குடும்பத்துக்கு இப்படியொரு பெருமை கிடைச்சிருக்கே. இதுவே போதும்.." என்கிறார் இந்தத் தாத்தா.

நானும்தான் இருக்கேன்..!?


ஹினா ரப்பானி ஹவுரின் இந்திய விஸிட்..!

இந்த அம்மையாரைப் பற்றி எழுதாமல் இட்லி-வடையை முடித்தேன் என்றால் ஊசிப் போன வடையைச் சாப்பிட வரும் எலியார்கூட வர மாட்டார் என்பதனால் எனது தளத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம்..!


2 குழந்தைகளுக்குத் தாய் என்றாலும், அழகான.. போட்டோகிராபி முகம் என்பதால் இந்திய மீடியாக்கள்விட்ட ஜொள்ளு, சிந்து நதியைக் கடந்து அவர்கள் நாட்டு பஞ்சாப்புக்குள்ளேயே நுழைந்திருக்கும். அழகு சாதனக் குறிப்பு எழுதுவதுபோல் தனது அழகு பற்றியே எழுதியிருந்த இந்திய மீடியாக்களை ஹினாவே கடிந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் நமக்கு அதெல்லாம் முக்கியமா என்ன..?

அமெரிக்காவுடனான உறவு பல்லாங்குழி ஆடி, இப்போது சீனாவின் பெருஞ்சுவர் ஓரமாகப் பதுங்கி முதல் வாரம் பிரதமர், அடுத்த வாரம் அமைச்சர், அதற்கடுத்த வாரம் ஐ.எஸ்.ஐ. தலைவர் என்று பீஜிங்கிற்கு படையெடுக்கும் சூழலில் இப்படியொரு அம்மணியை வெளியுறவுத் துறைக்கு நியமிக்க அந்த நாட்டு பிரதமருக்கு எப்படி தைரியம் வந்த்து என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் உலக மகா ஜொள்ளரான ஒரு ஜனாதிபதியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு..! பாக் பிரதமர் கிலானி ரொம்ப தைரியசாலிதான்..!



இந்த நேரத்தில் பேஸ்புக்கில் ஒரு கமெண்ட் படித்தேன்.  காமெடியாக இருந்தது..!

"எஸ்.எம். கிருஷ்ணா மச்சக்கார மனுஷன்யா.. கன்னடத்துக் கிளி சரோஜாதேவியை பொண்ணு பார்க்கப் போனதுல இருந்து, 80 வயசுலேயும்  இந்த ஹனியையும் பார்க்குறாருய்யா மனுஷன்.." என்று யாரோ ஒருவர் எழுதியிருந்தார்.

இந்த உலகத்தில் பொறாமைல நம்மள யாராச்சும் மிஞ்ச முடியுமா..?


படித்ததில் பிடித்தது..!


"நான் உங்களிடத்திலே சொல்ல விரும்புகின்றேன். பல ஆண்டுகளுக்கு முன்னாலே... கலைஞர் என்னை மன்னிப்பார் என்று கருதுகின்றேன். கலைஞரை, 'கருணாநிதி' என்றுதான் அப்போதெல்லாம் நான் சொல்லிப் பழக்கம். நான் 1955-56 வரையிலேகூட 'கருணாநிதி வந்தார்'.. 'போனார்..' என்றுதான் சொல்வேன். 'கலைஞர்' என்று சொல்ல மாட்டேன். அண்ணா  'கருணாநிதி வந்தாரா..?' என்று கேட்பார். நானும் 'கருணாநிதி வந்தார்' என்று சொல்வேன். நானாவது மரியாதையாக 'கருணாநிதி வந்தார்' என்று சொல்வேன். எங்களோடு இருந்த சம்பத், 'கருணாநிதி வந்தான்' என்பான். அந்த அளவுக்கு ஒரு காலம்.

அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்து கலைஞர் அவர்களை கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது, கட்சியிலே அன்றைக்கு கலைஞரைவிட மூத்தவராக இருந்த நான்கு பேரில் - நெடுஞ்செழியன் அவர்கள் அந்த உரிமை கொண்டாடி, அந்த உரிமை கிடைக்காத காரணத்தால் கட்சித் தோழர்கள், முன்னணியிலே உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், அந்தப் பொறுப்பு கலைஞருக்கு வந்துவிட்டது என்ற காரணத்தினால் மாறுபாடு கொண்டிருந்தார்.

அந்தச் சூழ்நிலையிலே நான் நாவலர் நெடுஞ்செழியனுடைய நண்பர். நானும் அவரும் ஒன்றாக மூன்றாண்டு காலம் படித்தவர்கள். இன்னும் சொல்லப் போனால், எனக்கு ஜாதி புத்தி இருக்குமானால் எனக்கு அவர் சொந்தக்காரர். ஆனால், அந்த ஜாதி புத்தி இல்லாத அளவுக்கு, இளமையிலேயே பயிற்சி பெற்றுவிட்டேன். இருந்தாலும்கூட பழக்கம். அவர்(நெடுஞ்செழியன்) வருத்தப்படுகிறார் என்ற காரணத்தால்தான் நான் பேசுகிறபோது 'கலைஞரை நான் தலைவராக ஏற்பதில்லை..' என்றுகூட பேசினேன். 'தளபதியாக வேண்டுமானால் ஏற்பேனே தவிர, கட்சிக்குக்கூட தலைவராக ஏற்பேனே தவிர, என்னுடைய தலைவராக ஏற்க மாட்டேன்…' என்று பேசினேன்.

- கோவை தி.மு.க. பொதுக்குழுவில் பேராசிரியர் க.அன்பழகன் பேசியது.

பார்த்ததில் பிடித்தது..!



நடிப்பைச் சொல்லித் தர்றாங்களாம்பா..!

உன்னைத் தேடி வருவேன் படத்திற்காக சுரேஷ், சாதனா

படம் உதவிக்கு நன்றி : திரு.ஸ்டில்ஸ் ரவி


http://tollywwod.blogspot.com/




  • http://tollywwod.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger