சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டடுள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தாமல் பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான எந்த வழியையும் நாட விடாமல் தங்களை கியூ பிரிவு போலிசார் தடுக்கின்றனர்
என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களை விடுவித்து மற்ற முகாம்களில் உள்ள தங்கள் உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் அவர்கள் ஈடுபடும் போதெல்லாம் விரைவில் உங்களை விடுதலை செய்கிறோம் என்று மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு செய்கிறது. அவர்கள் போராட்டத்தை கைவிட்ட பிறகு அளித்த உறுதி மொழியை மறந்து விடுகிறது.
இப்படி தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்த இவர்கள் இப்போது மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனவே தமிழக அரசு அவர்களின் நியாயமான, சட்டப்பூர்வமான கோரிக்கையை மனிதாபிமானத்தோடு பரிசீலித்து அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?