தரமான படங்களை தயாரித்து வந்த பிரகாஷ்ராஜ் முதன் முதலாக இயக்கிருக்கும் படம் தோனி ... படத்திற்கு இசைஞானியின் இசை மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது ... இன்றைய சூழலில் படிப்பு பிள்ளைகளுக்கு வரமாக இல்லாமல் சாபமாக மாறிவிட்டதே என ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன் படும் ஆதங்கமே " தோனி " ...
சுப்ரமணியம் ( பிரகாஷ்ராஜ் ) பத்திர பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்து கொண்டே ஊறுகாயும் விற்றுக்கொண்டு தாயில்லாத தன் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார் ... மகள் காவேரி ( ஸ்ரிதேஜா ) நன்றாக படித்தாலும் மகன் கார்த்திக் ( ஆகாஷ் பூரி ) படிப்பில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கிறான் ... மகனின் மார்க்குகளை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியை விட்டு நீக்க சொல்லவே மகனிடம் கிரிக்கெட்டை தூர போட்டு விட்டு படிக்க சொல்கிறார் பிரகாஷ்ராஜ் ...
ஒரு கட்டத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத மகனை தகப்பன் கோபத்தில் அடிக்க அவன் தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறான். இதன் பிறகு தன் தவறை உணரும் பிரகாஷ்ராஜ் மகனை கோமாவில் இருந்து மீட்டெடுப்பதோடு , கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மேல் அநியாயத்திற்கு சுமத்தப்படும் சுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதே கதை ...
தானே இயக்குனராக இருப்பதால் தன்னிடம் இருந்து அபரிபிதமான நடிப்பை பிரகாஷ்ராஜ் வாங்கியிக்கும் படம் தோனி ... ராதிகா ஆப்தேவிடம் தன் தவறை உணர்ந்து வருந்தும் போதும் , மகனின் படிப்பிற்காக பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சும் போதும் , கூனி குறுகி கடன் வாங்கும் போதும் , மகனை அடித்து விட்டோமே என அழும் போதும் ஒரு மிடில் கிளாஸ் தகப்பனாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் ... குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அழுது கொண்டே பேசும் காட்சி உருக வைக்கிறது ... சிறந்த நடிகருக்கான மற்றொரு விருது கிடைக்குமென நம்பலாம் ...
மகனாக ஆகாஷும் , மகளாக ஸ்ரிதேஜாவும் நல்ல பொருத்தம் ... அப்பாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஆகாசின் நடிப்பு நன்று ... காலனியில் குடியிருக்கும் நளினியாக வரும் ராதிகா ஆப்தே அழகாக இருப்பதோடு நன்றாகவும் நடித்திருக்கிறார் ... அவர் கால் கேர்ளாக மாறியதன் பின்னணியை எளிமையாக விளக்கிய விதமும் , அந்த காட்சியில் இவரின் நடிப்பும் அருமை ...
நாசர் , சாம்ஸ் , தலைவாசல் விஜய் , பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் கந்துவட்டி கனி பாயாக நடித்திருக்கும் முரளி ஷர்மா கவனிக்க வைக்கிறார் ... இவருக்கு சமுத்திரக்கனியின் பின்னணி குரலும் பொருத்தமாக இருக்கிறது ... படத்தின் வசனங்கள் நல்ல சார்ப் ... படிப்பை மட்டுமே வைத்து ஒருவனை மதிப்பிடும் அவலத்தை சாடுவதோடு மட்டுமல்லாமல் , விலைவாசி ஏறிக்கொண்டேயிருக்கிறது ஆனால் சம்பளம் ஏறவில்லையே என்ற நடுத்தர வர்க்கத்தினரின் ஆதங்கத்தையும் வசனங்களில் பதிவு செய்திருக்கிறார் த.சே.ஞானவேல் ...
இசைஞானி இசையில் " வாங்கும் பணத்துக்கும் " , " தாவி தாவி போகும் " பாடல்களும் அதற்கு நா.முத்துகுமாரின் வரிகளும் அருமை ... படம் முழுவதும் வசனங்களால் நிரம்பியிருந்தாலும் தேவைப்படும் இடங்களில் தன் இசையால் முத்திரை பதித்திருக்கிறார் இசைஞானி ... குறிப்பாக ஆஸ்பத்திரியிலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியிலும் , ஆபரேஷன் முடிந்து ஆகாஷ் கண் விழிக்கும் கட்சியிலும் பின்னணி இசை அருமை ...
பள்ளியிலிருந்து மகனின் பொருட்களை எடுக்கும் போது அவன் வாங்கிய பதக்கங்களை பார்த்து உருகும் காட்சியிலும் , ராதிகா ஆப்தே - பிரகாஷ் ராஜ் சமபந்தப்பட்ட காட்சிகளிலும் , தோனி , சச்சின் போன்றவர்கள் கிரிக்கெட் ஆட தடை செய்ய வேண்டும் என மற்ற பிளாட் காரர்களிடம் புலம்பும் இடத்திலும் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பிரகாஷ் ராஜ் ஜொலிக்கிறார் ...
படத்தின் முக்கிய ஆதாரமே ஆகாஷ் கிரிக்கெட் ஆடுவதில் திறமைசாலி என்பதே , ஆனால் அவரின் திறமையை கோச் , ஸ்கூல் ப்யூன் என்று ஒவ்வொருவராக பாராட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர் கிரிக்கெட் ஆடுவதாக ஒரு சீன் கூட இல்லை ... அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் ஆடும் ஒரே சீனில் கூட ஒரு பயிற்சி பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரனின் உடல்மொழி ஆகாஷிடம் சுத்தமாக இல்லாதது படத்தின் பெரிய குறை ...
தன் பிள்ளைகளின் திறமையையும் ,ஆசையையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளின் முன் தவம் கிடக்கும் பெற்றோர்களின் போக்கை பற்றி கொஞ்சம் கூட சொல்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களும் , பள்ளிகளும் மட்டுமே காரணம் என்பது போல அவர்களை மட்டுமே சாடியிருப்பது ஒருதலைப்பட்சமாக இருக்கிறது ... பள்ளிகள் வியாபாரத்தளங்களாக மாறியிருப்பினும் , குருவாக வணங்க வேண்டிய ஆசிரியரையே கொலை செய்யும் அளவிற்கு இன்றைய மாணவர் சமுதாயம் மாறிப்போனதற்கு படிப்பு பற்றிய பிரஷர் மட்டும் தான் காரணமா ? என்பதை சமூக ரீதியாக ஆராய வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது ...
இது போன்ற சில குறைகள் , மராத்திய படத்தின் ரீமேக் என்பதோடு ஏற்கனவே த்ரீ இடியட்சில் பார்த்த கரு என்ற போதிலும் பிரகாஷ்ராஜ் ஒரு இயக்குனராக தகப்பனின் பார்வையிலிருந்து இதை அழுத்தமாக சொல்லியிருக்கும் விதத்தை சற்றே நாடகத்தனமாக இருந்தாலும் பாராட்டலாம் ...
ஸ்கோர் கார்ட் - 42
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?