"ஆணாதிக்கம் என்று ஒன்று இருப்பதைப்போல பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது... ஆனால், அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை" என்று நண்பர் ஒருவர் வருத்தப்பட்டுக்கொண்டார்.
காலங்காலமாகப் பெண்களை அடிமைப்படுத்தியும் அவர்கள் சுதந்திரத்தை முடக்கியும் கட்டுப்படுத்தியும் வந்துள்ள ஆண் சமூகம் பெண்ணாதிக்கம் சொல்லைப் பயன்படுத்துவது எவ்வளவு குரூரமானது என்னும் கேள்வி என்னுள் எழுந்தாலும் நண்பர் என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொள்ள முயன்றேன்.
"இங்கு ஆதிக்கம் செலுத்துவதில், தவறுகள் செய்வதில் ஆண்/பெண் என்கிற பாகுபாடு இல்லாமல் பரஸ்பரம் சளைக்காமல் செய்கிறார்களே. கணவனும் மாமியாரும் சேர்ந்து மனைவியைக் கொடுமைப்படுத்தும் இதே ஊரில்தானே பொய்யான வரதட்சணைக் கொடுமை வழக்கில் கணவனையும் வயதான பெற்றோரையும் சிறையில் தள்ளுகிறார்கள். இதுபெண்ணாதிக்கம் இல்லையா?" என்று கேட்டார் நண்பர்.
பெண்ணின் அடிப்படையான தகுதி, உரிமைகள், சமூகத்திலும் குடும்பத்திலும் அவளுடைய இடம், பங்களிப்பு ஆகிய எல்லா அம்சங்களிலும் ஆணுக்கு இரண்டாம்பட்சமான நிலையில் பெண்ணை வைத்துவந்த சமூகம் ஆண் சமூகம். ஆணே மேலான நிலையில் இருக்குமாறு இங்கே அனைத்து விதிகளும் சூழலும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சமயம், சம்பிரதாயம், நெறிமுறைகள், சட்டங்கள் என யாவுமே ஆணை ஒரு படி தூக்கியே வைத்திருக்கின்றன. மத நூல்கள், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், பழமொழிகள், சட்ட நூல்கள் எனப் பல அம்சங்களை மேற்கோள் காட்டி இதை நிரூபிக்க முடியும்.
இப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ள சமூகத்தில் வளரும் பெண்ணும் இதே மனநிலையைக் கைக்கொண்டு சக பெண்களுக்கு எதிராகச் செயல்படுவதும் உண்டு. இதையும் ஆண்மையச் சிந்தனை, ஆணாதிக்கப் போக்கின் விளைவு என்றுதான் பார்க்க வேண்டும். அதுபோலவே, அதிகாரம் கைக்குக் கிடைத்ததும் சில பெண்கள் மோசமாக நடந்துகொள்வது பொதுவாக மனித சுபாவத்தில் உள்ள பிரச்சினையே தவிர அதுவும் பெண்ணாதிக்கம், பெண்ணின் பிரத்யேகமான குறை என்று சொல்லிவிட முடியாது.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளில் சில சமயம் பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதுதான் நண்பரின் வாதம். ஆனால் ஆணாதிக்கம் என்பதற்கு இணையான பெண்ணாதிக்கம் என்னும் சொல்லை அவர் பயன்படுத்துகிறார். பெண்களை இரண்டாந்தர மனிதர்களாக நடத்துவதற்குக் காரணமான ஒரு அணுகுமுறை ஆணாதிக்கச் சிந்தனை. போக்கிற்கு ஒப்பான ஒரு சொல்லைப் பெண்களின் குறைகளைச் சுட்டப் பயன்படுத்தக் கூடாது என்பதை அவருக்குப் புரியவைக்க முயன்றேன்.
எல்லா விதங்களிலும் பாதிப்பு
இங்கு குடும்ப வன்முறை தொடங்கி சமூக வன்முறை வரை உடல்ரீதியாக, மனரீதியாக ஆண்களைவிட பெண்களே எல்லா விதங்களிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வீடுகளிலும் பொது வெளியிலும் இருக்கும் நுட்பமான ஒடுக்குமுறைகள் ஒருபுறம் இருக்கட்டும். வேலைக்குச் செல்வதால் வீட்டிலும் அலுவலகத்திலுமாக இரட்டிப்பு வேலைச் சுமையைத் தாங்கும் நெருக்கடி இருக்கட்டும். பணியிடத்தில் சுமக்க நேரிடும் பழிபாவங்களும் சக ஊழியர்களான ஆண்களால் ஏற்படும் நேரடியானதும் மறைமுகமானதுமான பாலியல் தொல்லைகள் இருக்கட்டும். வெளிப்படையான சம்பவங்களைப் பார்த்தாலே பெண்களின் நிலையைப் புரிந்துகொள்ளலாம்.
ஆசிட் வீச்சு சம்பவங்களையே எடுத்துக்கொள்வோம். எவ்வளவு எழுதினாலும், கதறினாலும் ஆசிட் வீச்சுகள் தொடர்ந்துகொண்டேதானே இருக்கின்றன. பெண்களின் முகங்களில்தானே தொடர்ந்து ஆசிட் வீசுகிறார்கள். கத்தியால் குத்திக் கொலை செய்வதைவிடக் கொடூரமானது ஆசிட் வீச்சு. சமீபத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சுபா என்னும் பெண்ணிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது. "கோபம் இருந்துச்சுன்னா வேற ஏதாச்சும் செஞ்சிருக்கலாமில்லைங்ணா" என்று அவர் கேட்டபோது தலை குனிவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
ஒரு பெண்ணின் மீது விசப்படும் ஆசிட் அவள் உடல் மீது மட்டும் வீசப்படுவது அல்ல. அது அவளது தன்மானத்தின் மீது, தன்னம்பிக்கையின் மீது, சுயத்தின் மீது வீசப்படுவது. ஒரு பெண்ணை இதுபோல வேறு எப்படியும் அதிகபட்சமாக அவமானப்படுத்த முடியாது. அவள் ஆயுள் முழுவதும் தனது முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் வேதனைப்பட வேண்டும்; மறந்தும் கசப்பை மறந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டுச் செய்யும் குரோதத்தின் உச்சம் இது.
இதுபோல இன்னும் வகைப்படுத்தலாம். 'வாச்சாத்தி' தண்டனை அறிவிக்கப்பட்ட பின்பும் உடுமலை காவல் நிலையத்தில் அத்துமீறல் நடந்திருக்கிறதே. அத்துமீறல் நடக்கவில்லை என்று காவல் துறையினர் சொன்னாலும், அங்கு ஒரு பெண்ணுக்குரிய காவல் துறையின் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதானே. அத்துமீறல் நடக்கவில்லை என்பதை எப்படி நம்புவது?
உண்மையில் பெண்ணைப் 'பெண்'என்று தனி இனமாக பிரித்து, அனுதாபம்/ ஆதிக்கம்/ பாசம்/ வெறுப்பு இப்படி எதையுமே மிகையாகச் செலுத்துவதுமே தவறுதான். இதன் நீட்சிதான் காதல் விவகாரங்களிலும் எதிரொலிக்கிறது. பெண் என்றால் தேவதை /தெய்வம் என்று கற்பிதம் செய்துகொண்டு அளவுக்கு அதிகமாக அவர்களை நேசித்து, அளவுக்கு அதிகமாக அவர்களிடம் எதிர்பார்த்து, ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணும் ஒரு சராசரி மனுஷிதான் என்பதை உணரும்போது உடைந்து, பின்பு அவளை துரோகியாக, சாத்தானாகச் சித்தரிப்பது காதலில் வழக்கமாகிவிட்டது. பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள்.
அதேபோல் பெண்களும் ஆண்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கான காரணங்கள் தனிநபர்களின் பலவீனம், சுயநலம், மேம்போக்கான உணர்வுகள், சூழல் எனப் பல விதமாக இருக்கலாம். காரணத்தைப் புரிந்துகொண்டு மதிப்பிடுவதே யதார்த்தமாக இருக்கும். அதை விட்டுவிட்டு "இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்" என்று சொல்லும் ஆணின் குரல்தான் ஆசிட் வீச்சாகப் பரிணமிக்கிறது.
நம் சமூகத்தில் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குழு உருவானதே ஆண்களுக்கு அவமானம். உண்மையில் பெண்களை உயர்த்தியோ, ஒதுக்கியோ வைக்காமல் அவர்களை சக மனுஷியாக மதிப்பதே ஆண்கள் அவர்களுக்குச் செய்யும் பெரும் புண்ணியமாக இருக்கும். இந்த அணுகுமுறை இருந்தால் 'பெண் உரிமை' என்று தனியாகப் பேச வேண்டிய அவசியம் இருக்காது.
Keywords: பார்வை, பெண்ணாதிக்கம், ஆண்கள் அவதி, பெண்கள் தவறு, சமநிலை, சமூகம், சம உரிமை, பெண்ணுரிமை
Topics: பெண்கள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?