ஜனவரி 2008 சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்த விவாதம்...
பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன்: தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மொழி, பண்பாடு, கலாசாரம், உறவு முறை ஆகிய அனைத்திலும் கலாசார சீரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது. தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறையை கொண்டுவர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சன் டி.வி., ஜெயா டி.வி., ராஜ் டி.வி., விஜய் டி.வி., முதல்-அமைச்சர் பெயரை தாங்கி வரும் கலைஞர் டி.வி. போன்ற தொலைக்காட்சிகளில் வரும் ஜோடி நம்பர் ஒன், ஜில்லுன்னு ஒரு காதல், மானாட மயிலாட போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் ஆபாசங்களும், வன்முறைகளும் நிறைந்துள்ளன.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி:- இதையெல்லாம் நீங்கள் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்திருக்கிறீர்கள்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- உறுப்பினர் வேல்முருகனும் படத்தில் நடித்திருக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம், நாட்டியம் தான் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை. அதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொதுமக்கள் தான் பார்த்து முடிவு செய்கிறார்கள்.
வேல்முருகன்:- அந்த நிகழ்ச்சியில் நடுவராக வரும் நடிகை நமீதா அரைகுறை உடையில் தான் வருகிறார். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட ஒரு விழாவில் நடிகை சுரேயா (ஸ்ரேயா என்பதை அவர் அப்படித்தான் உச்சரித்தார். அதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.) மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வந்துள்ளார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நடிகை ஸ்ரேயா விழாவில் வந்த விதம் குறித்து குறிப்பிட்டார். நடிகைகள் எல்லாம் இப்படித்தான் டிரஸ் போட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர முடியாது. அறிவுரை வேண்டுமானால் அவர்களுக்கு கூறலாம். எந்த உடை போட வேண்டும் என்று நடிகைகள் தான் முடிவு செய்கிறார்கள். அதை அரசு முடிவு செய்வதில்லை.
வேல்முருகன்:- இந்த ஆபாசங்களை எல்லாம் ஏன் தணிக்கைத்துறை கண்டிப்பதில்லை.
அமைச்சர் துரைமுருகன்:- ஆபாசத்திற்கு எந்தவித அளவுகோலும் கிடையாது. இத்தனை `இஞ்ச்' தான் இடுப்பு தெரிய வேண்டும். இத்தனை இஞ்சுக்கு பிரா போடலாம், இத்தனை இஞ்சுக்கு பாவாடை போடலாம் என்றெல்லாம் அளவு எதுவும் இல்லை. ஆபாசம் என்பது அவரவர் மனதை பொறுத்தது தான். வேல்முருகன் நடித்த படத்தையும் பார்த்தோம். அதிலும் தான் ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் நடனம் வருகிறது.(இதனை இடுப்பை ஆட்டிக் காட்டியபடி கூறினார். இதனை பார்த்த அனைவரும் சிரித்தனர்.)
ஜி.கே.மணி:- ஆபாசம் அவரவர் மனதில் தான் இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதற்காக அரைகுறை ஆடை உடுத்தி ரோட்டில் போக முடியுமா? இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். திரைப்படங்கள், பொது இடங்களில் இதுபோல் ஆபாசமாக உடை உடுத்தி வருவது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். எவ்வளவு கற்பழிப்புகள் நடக்கிறது என்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் வருகிறது. இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் என்ன? சமுதாயத்தை நல்வழிப்படுத்தத்தான் இந்த கருத்தை தெரிவிக்கிறோம்.
வேல்முருகன்:- ஆங்கில கலப்பில்லாமல் ஒரு படம் வருகிறது என்பதால் தான் அதில் நான் நடித்தேன். ஆபாசத்தை விதைப்பதற்கு அல்ல. ``கட்டிப்புடி, கட்டிப்புடிடா'', ``எப்படி, எப்படி, சமைஞ்சது எப்படி'' என்ற பாடல்களெல்லாம் எப்படி அனுமதிக்கப்பட்டது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை முறை வேண்டும். இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பண்பாடு, கலாசாரம் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று தான் கூறுகிறோம்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நாகரிகத்தை காப்பாற்ற நாளை முதல் வேல்முருகன் வேட்டி-சட்டை அணிந்து வந்தால் நல்லது.
வேல்முருகன்:- இதனை நான் விளையாட்டுக்காகவோ, சிரிப்புக்காகவோ சொல்லவில்லை.
அமைச்சர் பொன்முடி:- ஆடை அணிவது நாகரிகத்தின் வெளிப்படுதல் தான். முன்பு பெண்கள் புடவை அணிந்து வந்தனர். இப்போது சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். அதற்கு வசதியான உடைகளை அணிந்து வருகிறார்கள். அதற்காக கலாசாரம் அழிந்துவிட்டது என்று கூற முடியுமா? கலாசாரத்தை காக்கத்தான் சமத்துவ பொங்கல் என்று கலாசார திருவிழாவை நடத்தும்படி முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.
ஏர் உழுபவன் கோவணம் கட்டிக்கொண்டு தான் உழுகிறான், அதற்காக அதை ஆபாசம் என்று கூறமுடியுமா? காலத்திற்கேற்ப மாறுவது இயற்கை. வேல்முருகன் கூறுவதை நான் முழுமையாக மறுக்கவில்லை. இதனால் கலாசாரம் சீரழிகிறது என்று மிகைப்படுத்தி கூறுவதை ஏற்க முடியாது.
வேல்முருகன்:- நான் ஒட்டுமொத்த திரைப்படங்களையும் குறை கூறவில்லை. 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறது என்று தான் கூறுகிறேன். அதேபோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி.ரேட் (மக்கள் பார்க்கும் விகிதம்) அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட ஆபாச காட்சிகளை திணிக்கிறார்கள். நம்மை கேட்க யாருக்கும் நாதியில்லை என்று சென்று கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சரிடம் கூறினால் இதற்கும் நியாயம் கிடைக்கும், வழி பிறக்கும் என்று தான் கூறுகிறேன். இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். ஒரு மாணவன் படம் பார்த்துவிட்டு கொலை செய்தேன் என்கிறான். எனவே இதுபோன்ற ஆபாசம், வன்முறை ஆகியவற்றை தடுத்து நிறுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் வரி பணத்தில் நடை பெற்ற விவாதம்...
( http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_2784.html )
இன்றைய செய்தி : இப்பேர்பட்ட வேல்முருகனை பாமகவில் இருந்து இன்று நீக்கிவிட்டார்கள் !.
பொதுவாக சூரனை தான் முருகன் சூரசம்ஹாரம் செய்வார் ஆனால் இன்று வேல்முருகனை ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!. ராமதாஸுக்கு கோவிந்தா கோவிந்தா
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?