தூக்குக் கயிற்றின் முன்பு முருகன் உள்ளிட்ட மூவர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ராவும் தனது தந்தையைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது 20 வயதாகும் அரித்ரா, லண்டனில் வசித்து வருகிறார். இவர் பிறந்தது வேலூர் சிறையில். அன்று முதல் இன்று வரை பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அரித்ரா.
நேற்று அவர் தனது தந்தையைக் காப்பாற்ற நடந்து வரும் போராட்டங்களில் தானும் பங்கேற்க விரும்புவதாக தமிழ்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கண்ணீருடன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒரு பெண்ணாக, உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் மகள், மகன் தங்களது தந்தையை இழந்து வாடும் பிரிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
தந்தை, தாய் இல்லாமல் வாழும் எந்தக் குழந்தையும் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
இன்று அதே நிலையில்தான் நான் உள்ளேன். பெற்றோர் இருந்தும் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாத அவல நிலையில் உள்ளேன். உங்களது மகள் தந்தையை இழந்து வாடுவதைப் போல நானும் தந்தையை இழந்து வாடப் போகிறேன் என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
எனது தாயாருக்கு கருணை காட்டி, மனம் இரங்கி, மன்னித்து ஆயுள் தண்டனையாக மாற்றி எனக்கு அருள் புரிந்தீர்கள். இன்று அதேபோல எனது தந்தைக்கும் மனம் இரங்கி, அவரை மன்னித்து எனக்காக அவரது உயிரைக் காப்பாற்றுங்கள். எனது அப்பாவுடன் நான் சேர்ந்து வாழ அனுமதி கொடுங்கள். எனது தந்தையை மன்னியுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார் அரித்ரா.
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?