சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்கவும், ஒழுக்கம் உள்ள சமுதாயமாக ஆக்கவும் இன்னும் சில வாரங்களில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்' என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சமீபத்தில் உருவான கலவரம் நான்கே நாட்களில் நாடு முழுவதும் பரவியது. இச்சம்பவங்களில் இதுவரை இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களில் நடந்த திருட்டுகள், கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அதேநேரம், ஏழை பணக்காரர் வித்தியாசமே இந்த கலவரங்களுக்குக் காரணம் என வலியுறுத்தும் சமூக நிபுணர்கள், கைது செய்யப்பட்டோருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் பட்சத்தில் அவர்கள் சமூகத்துக்கு மேலும் கேடு செய்வோராக மாறவே வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேமரூன் கூறியதாவது:இந்தக் கலவரங்கள் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. பிரிட்டனின் தற்போதைய இளைய சமுதாயம், சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ளது.
நடந்த முடிந்த கலவரங்கள் பணத்திற்காக நடக்கவில்லை. கலவரக்காரர்களில் பெரும்பான்மையோர் தகப்பன் இல்லாத சூழலில் வளர்ந்தவர்கள். அல்லது முன்னுதாரணமான ஆண் ஆளுமையைத் தெரிவு செய்து வளராதவர்கள்.ஏன் இவர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டனர்? அவர்களை வீட்டில் கவனிக்க ஆள் இல்லாமல் இருந்திருக்கலாம்.அதனால் அவர்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம். இந்த மோசமான குணங்களில் இருந்து அவர்களை மீட்டு, ஒழுக்கம் உள்ளவர்களாக ஆக்க சில நடவடிக்கைகள் தேவை.
அமைச்சரவையின் இரு மூத்த அமைச்சர்கள் இன்னும் சில வாரங்களில் இளைய சமுதாயத்தின் ஒழுக்க நெறிகளுக்கான புதிய கொள்கைகளை வகுப்பர். அவற்றில், 16 வயதில் உள்ள அனைவருக்கும் தேசிய மக்கள் சேவை பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் அவர்களுக்குப் போதுமான உடற்பயிற்சியும், சமூகத்தில் கலந்து பழகுவதற்கான பயிற்சியும், மக்களுக்கு உதவிகள் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.இது மட்டுமின்றி, கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் 1,20,000 குடும்பங்களின் குறைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் அக்குடும்பங்களின் இளைய தலைமுறையினர் கல்வியில் நாட்டம் செலுத்த வழி வகுக்கப்படும்.
அரசியல்வாதிகள், ஒழுக்கம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்துவதில் அதீத எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். தங்கள் பெயர் கெட்டு விடுமோ என்றோ அல்லது நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் நம்மை எதிர்ப்பரே என்று பயந்தோ எது சரி எது தவறு என்று வெளிப்படையாகச் சொல்வதற்குத் தயங்குகின்றனர். புதிய மனித உரிமைகள் மசோதா விரைவில் கொண்டு வரப்படும். அதன் மூலம் மனித உரிமைகளை தங்கள் வசதிக்கேற்ப திரிக்கும் போக்கு தடுத்து நிறுத்தப்படும்.இவ்வாறு கேமரூன் தெரிவித்தார்.
http://video-news-tamil.blogspot.com
http://video-news-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?