Tuesday, 6 December 2011

ஜெ. மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால் என்னை மிரட்டுகிறார்: ஸ்டாலின்

 
 
 
சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் முதல்வர் ஜெயலலிதா நிலத்தை அபகரித்துக் கொண்டிருப்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டால் சட்டத்துறை அமைச்சர் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரால் நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறாரே, அதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.
 
சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்த போது போலீசார் அதனை வாங்க மறுத்ததால், டாக்டர் ராணி நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து, நீதிபதி உடனடியாக காவல் துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கான அறிக்கையை வரும் 9ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
 
அதற்கு பதில் சொல்ல முடியாத அமைச்சர் தான் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அதனைச் சட்டப்படியே சந்திக்க தயாராக நான் இருக்கிறேன்.
 
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள தேயிலை எஸ்டேட் அருகே உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் பகுதி மக்கள் எஸ்டேட் வழியாகச் செல்லும் சாலையைத் தான் பயன்படுத்தி வந்தார்கள்.
 
ஆனால் ஜெயலலிதா அங்கே வந்து தங்க ஆரம்பித்த பிறகு, அந்த சாலையை மூடி விட்டதால், அதை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.
 
உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுக்குட்பட்டு சாலையைத் திறந்து விட உத்தரவிட்டும், அதனை ஏற்காததால், 19-3-2011 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குந்தகம் சர்மா, அனில் தவே ஆகியோர் 900 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டில், இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
இதைத் தான் நான் சுருக்கமாக நில அபகரிப்பு என்ற பெயரால் கழகத்தினர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் அதிமுக அரசு, இந்த நில அபகரிப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்குமா? என்று எனது பேட்டியில் கேட்டிருந்தேன்.
 
இதற்கு பதில் அமைச்சர் பரஞ்சோதி தான் சொல்லியிருக்கிறார். தற்போது நான் கேட்டுள்ள இந்த விளக்கங்களின் மீது அந்த அமைச்சரோ, முதலமைச்சரோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறார்களா? என்பது தான் இப்போதும் என் கேள்வி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger