2ஜி விவகாரத்தில் சக அமைச்ராலேயே விமர்சனத்துக்குள்ளாகியுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தான் பதவியிலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்தார். அவரை பொறுமையுடன் இருக்குமாறு சோனியா வேண்டி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
தான் பதவி விலக விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
2ஜி விவகாரத்தில் நடந்த முறைகேடுகளைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தது. பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பின்னரே இது அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ப.சிதம்பரம்.
இதையடுத்து அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் அவசரம் அவசரமாக ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமரசம் பேசினார். தனது ஆதரவையும் அவருக்குத் தெரிவித்தார். அதேபோல பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ப.சிதம்பரத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இந்தநிலையில் 2ஜி ஊழல் தொடர்பாக ப.சிதம்பரத்திற்கு எல்லாமே தெரியும் என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார். இதனால் மேலும் சலசலப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திடீரென சந்தித்தார் ப.சிதம்பரம்.அப்போது தான் பதவி விலக விரும்புவதாக அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு சோனியா காந்தி அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ப.சிதம்பரத்தை சமாதானப்படுத்திய அவர் இதுகுறித்து எந்த முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமரையும் தொடர்பு கொண்டு தனது விலகல் விருப்பத்தை ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, தன்னை வந்து சந்திக்குமாறு பிரணாப் முகர்ஜிக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக நியூயார்க் போயிருந்த பிரணாப் முகர்ஜி இன்று நாடு திரும்பினார். இன்னும் சற்று நேரத்தில் அவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?