Monday 26 September 2011

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்



சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

அதே தஞ்சையில் இன்று மற்றொரு காவியம் கல்லில் படைக்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழர்களின் நினைவாகவும், அவர்களுக்காகத் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 20 இளம் தியாகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், தமிழக - தமிழீழ வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்களைக் கொண்ட மண்டபம் ஒன்றும் எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப-ஓவிய நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் உள்ள விளார் கிராமத்தின் நுழைவில் பான்செக்கூர் கல்லூரிக்கு எதிரில் மிகப்பெரிய நினைவு முற்றம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்த வேலைகள் தொடங்கப்பட்டன. மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆந்திர மாநிலத்தின் குப்பம் ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 8 மாதங்களாக இரவு பகல் பார்க்காமல் சிற்பங்களைச் செதுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராசராசன் எழுப்பிய கற்கோவிலுக்குப் பயன்படுத்திய அதே இரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் பொருட்செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

முத்துக்குமார் உட்பட 20 ஈகிகளுக்கும் முள்ளிவாய்க்கால் மக்களுக்கும் கையில் பாவை விளக்கு ஏந்தி தமிழ்த்தாய் அஞ்சலி செலுத்துவது போன்று அமைக்கப்பட்டுள்ள சிற்பம் மிகப்பெரியது. 60 டன் எடைக்கு மேல் உள்ள ஒரே கல்லில் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 15 அடி உயரம் உள்ள எழில் மிக்க மேடையில் தூக்கி வைக்கப்பட்டு தொலை தூரத்தில் உள்ளவர்களையும் கவர்ந்து ஈர்க்கிறது.

பற்றி எரியும் நெருப்பில் கருகிய முத்துக்குமார் உட்பட 20 தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிற்பம் 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டதாகும். 3 அடி உயரம் உள்ள கருங்கல் மேடை மீது இந்தச் சிற்பம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. காண்போரின் கண்களைக் குளமாக்கும் வகையில் இந்த ஒப்பற்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் அவலக் காட்சிகளை ஓவியர் வீரசந்தானம் கல்லில் வரைந்து கொடுக்க சிற்பிகள் அதற்கு உயிர்வடிவம் கொடுத்து வருகிறார்கள். இரவு பகலாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

ஓவிய மண்டபத்தை அமைக்கும் பணியும் துவங்கப்பட இருக்கிறது. தமிழகம்-தமிழீழம் ஆகிய இரு நாடுகளிலும் நடைபெற்ற மறக்க முடியாத வரலாற்று நிகழ்ச்சிகளை ஓவியங்களாகத் தீட்டும் பணியினை தமிழகத்தின் சிறந்த ஓவியர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

உலகமெலாம் உள்ள தமிழர்கள் வந்து வழிபடும் புனித இடமாக இந்த கற்கோவில் உருவாகிறது. உலகத் தமிழர்கள் பலரும், தமிழகத் தமிழர்களும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிதிக்கு வாரி வழங்கி வருகிறார்கள். ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேலும் அழியாமல் நின்று முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தையும், முத்துக்குமார் போன்ற ஈகிகளின் உன்னதத் தியாகத்தையும் வருங்காலத் தலைமுறையினருக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கக்கூடிய இந்த நினைவு முற்றத்தை செவ்வனே கட்டியெழுப்ப ஒவ்வொரு தமிழரும் தங்களின் பங்களிப்பைச் செய்யவேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

உலகத் தமிழர் பேரமைப்பினால் உருவாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நினைவு முற்றத்தைக் கட்டி எழுப்பும் பணியில் இதில் அங்கம் வகிக்கும் அத்தனை அமைப்புகளும், தமிழகம் பூராவும் உள்ள தமிழ் அமைப்புகளும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger