தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேமுதிகவுடன் கூட்டணி சேர இடதுசாரிகள் முடிவு செய்துள்ள நிலையில் இன்று அதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், புதிய தமிழகம் என அத்தனை கட்சிகளுமே தனியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக மட்டும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இடதுசாரி தலைவர்கள் திடீரென அறிவித்தனர். இதனால் புதிய அணி உருவாகும் சூழல் பிரகாசமாகியுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தினோம். திங்கள்கிழமை மீண்டும் பேசுவோம் என்றார்.
முன்னதாக சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் சிபிஐ தலைமையகத்தில் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில்தான் தேமுதிகவில் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னரே ஜி.ரா. தலைமையிலான குழு விஜயகாந்த்தை சந்தித்துப் பேசியது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போதும் ஜெயலலிதா முரண்டு பிடித்து வந்த நிலையில் விஜயகாந்த்தை சந்தித்து புதிய கூட்டணி குறித்து இந்தத் தலைவர்கள் பேசினர். இதன் பின்னரே ஜெயலலிதா இறங்கி வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஒரு வேளை தேமுதிக தலைமையில் இடதுசாரிகள் புதிய கூட்டணி அமைத்தால் அக்கூட்டணியில் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் இணையலாம் என்று தெரிகிறது.
இருப்பினும் இந்தத் தனிக் கூட்டணி, தனித்துப் போட்டி என்பதெல்லாம் உள்ளாட்சித் தேர்தலோடு ஏறக்கட்டப்பட்டு விடும் என்று தெரிகிறது. வருகிற லோக்சபா தேர்தலில் வழக்கம் போல மறுபடியும் அத்தனை பேரும் திமுக அல்லது அதிமுகவோடு போய் ஒட்டிக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது.ய
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?