நிர்வாக சேவை அதிகாரிகளைக் கிள்ளுக்கீரையாக உதாசீனப்படுத்தி மிரட்டுகின்ற பொலிஸாருக்காக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கின்றார் அமைச்சர் டக்ளஸ். இதுதான் இன்றைய வடமாகாண சிவில் நிர்வாகத்தின் இலட்சணம்.இவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார் நேற்று மாலை புன்னாலைக் கட்டுவன் ஈவினையில் இடம்பெற்ற உதவி வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
நேற்று முன்தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் உதவி அரச அதிபர்களையும், பிரதேச செயலாளர்களையும் அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளான இவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொது மக்களை எப்படி இவர்கள் பாதுகாப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். நேற்று மாலை புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் து.லோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய சரவணபவன் எம்.பி. மேலும் கூறியதாவது:
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின் மக்கள் முன் செல்லும் துணிவில்லாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அரசும் இணைந்து உருவாக்கிய மாயைதான் கிறீஸ் பூதங்கள். மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கிய இவர்கள், மீண்டும் மக்கள் முன் செல்லும் ஓர் உபாயமாகவே இன்று விழிப்புக்குழுவை உருவாக்க முனைகின்றனர். இந்த விழிப்புக்குழுக்கள் அரசுக்கு வக்காலத்து வாங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலேயே அமைக்கப்படுகின்றன.
முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பிலேயே இவை இயங்கவுள்ளன. அங்கே ஜனநாயகத்தையும் சிவில் நிர்வாகத்தையும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் விரைவில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலை மையமாகக் கொண்டே இந்த விழிப்புக்குழுக்களை அமைக்கத் தயாராகி வருகின்றனர். இந்த விடயத்தில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். பிரதேச செயலாளர்களும் உதவி அரச அதிபர்களும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படாத இந்த விழிப்புக்குழுக்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்றும் சரவணபவன் கூறினார்.
இந்த நிகழ்வின்போது புன்னாலைக்கட்டுவன், ஈவினை கிராமத்தில் வலது குறைந்தவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் சக்கர நாற்காலிகளையும் வறுமை நிலையில் உள்ள பெண்மணி ஒருவருக்குத் தையல் இயந்திரம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இந்த நிகழ்வில் வலி. தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஷ், தமிழரசுக் கட்சி மானிப்பாய் இணைச் செயலாளர் பா.கஜதீபன் மற்றும் செல்வரட்ணம், அரசரட்ணம் ஆகியோரும் உரையாற்றினர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?