Sunday, 9 October 2011

கோப்பை வெல்வது யார்?:மும்பை, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை: அரையிறுதியில் சாமர்சட் “அவுட்’


சென்னை: சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில், மும்பை அணி, சாமர்சட் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வேகத்தில் மிரட்டிய மலிங்கா, 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ், இங்கிலாந்தின் சாமர்சட் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன் சிங், பேட்டிங் தேர்வு செய்தார்.
பிளிஜார்டு அபாரம்:
மும்பை அணிக்கு பிளிஜார்டு, கன்வர் இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். கிர்பையின் முதல் ஓவரில் பிளிஜார்டு, மூன்று பவுண்டரிகள் அடித்தார். துவக்கத்தில் இருந்தே திணறிய கன்வர் (2) விரைவில் அவுட்டானார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய அம்பதி ராயுடு (19) நிலைக்கவில்லை.
மறுபுறம் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிளிஜார்டு, டிப்பிள் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, 6 ஓவரில் அணியின் ஸ்கோர் 50 ஐ கடந்தது. பிராங்க்ளின் 6 ரன்னில் மெர்வியின் சுழலில் வீழ்ந்தார். அரைசதம் கடந்த பிளிஜார்டு (54) கார்த்திக்கின் சுழலில் சிக்க, ரன்வேகம் மந்தமானது.
போலார்டு ஏமாற்றம்:
பின் வந்த போலார்டு, 2 சிக்சர் அடித்த திருப்தியுடன் 24 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் சதீஷ், சூர்யகுமார் அதிரடியில் ஈடுபட்டனர். இந்த ஜோடி தாமஸ் வீசிய 19 வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.
மலிங்கா "ஷாக்':
சற்று கடின இலக்கை விரட்டிய சாமர்சட் அணிக்கு மும்பை பவுலர் மலிங்கா, துவக்கத்திலேயே "ஷாக்' கொடுத்தார். இவரது முதல் ஓவரின், இரண்டாவது பந்தில் டிரிகோ "டக்' அவுட்டானார். அடுத்து, 2 பவுண்டரி அடித்து அதிரடியாக துவக்கிய மெர்வியை (10), நீடிக்கவிடவில்லை.
கீஸ்வெட்டர் ஆறுதல்:
இதன் பின் கீஸ்வெட்டர், ஹில்டிரத் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சாகர் ஓவரில் ஹில்டிரத்தும், சதீஷ் ஓவரில் கீஸ்வெட்டரும் பவுண்டரிகளாக விளாச, சாமர்சட் அணி சரிவில் இருந்து மெல்ல மீண்டது.
மூன்றாவது விக்கெட்டுக்கு 63 பந்தில், 83 ரன்கள் சேர்த்தநிலையில், ஹில்டிரத் (39) ஹர்பஜன் சுழலில் போல்டானார். கீஸ்வெட்டர் சர்வதேச "டுவென்டி-20′ அரங்கில் 11 வது அரைசதம் கடக்க, வெற்றி மெல்ல சாமர்சட் அணியின் பக்கம் திரும்பியது.
பிராங்க்ளின் திருப்பம்:
அகமது வீசிய போட்டியின் 17வது ஓவரில் கீஸ்வெட்டர், பட்லர் இணைந்து 16 ரன்கள் எடுக்க, "டென்ஷன்' எகிறியது. இந்நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பட்லர் (19), கீஸ்வெட்டர் (62) இருவரும், பிராங்ளின் ஓவரில் அவுட்டாக, சாமர்சட் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.
மும்பை வெற்றி:
மலிங்கா வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த இரு பந்துகளில் காம்ப்டன் (5), கார்த்திக் (0) போல்டாகினர். கடைசி 3 பந்தில் 3 ரன்கள் மட்டும் எடுத்தனர். சாமர்சட் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்தது.
10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதன் முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறியது. 4 விக்கெட் வீழ்த்திய, மும்பை அணியின் மலிங்கா, ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கோப்பை யாருக்கு?
இன்று நடக்கும் பைனலில் வெட்டோரியின் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இரு அணிகளும் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியவை என்பதால், கோப்பை வெல்ல கடுமையான போட்டியை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger