தமிழர்கள் மீது அணு உலையைத் திணிக்க காங்கிரஸ் அரசு துடிக்கின்றது என்று தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காலை நடந்த பேச்சுவார்த்தையின்போது உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும், மக்கள் தான் முக்கியம் என்றும் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுநர் குழு என்றும், அணு உலைப் பணிகளை உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார்.
உலகநாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்குகளும், கட்டிடங்களும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்தது குறித்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இதனால் இந்தியா தலை குனிந்து நின்றது.
இதற்குக் காரணமான கல்மாடி போன்ற மலைவிழுங்கிகளை அமைச்சரவையிலேயே வைத்திருந்த மன்மோகன்சிங் இன்று கூடங்குளம் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அவர் மூக்கின் கீழேயே நடந்த உலக மகா ஊழல்களை உணராத உத்தமராக அவர் உள்ளார்.
அலைக்கற்றை ஊழலில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிகளை விழுங்கி எமகாதகர்கள் ஏப்பம் விட்டது உலகத்திற்கே கேட்டது. ஆனால் அருகிலிருந்த தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். இந்த மகா உத்தமர் தான் இப்போது, கூடங்குளம் பற்றி அடுத்த சத்தியம் செய்கிறார்.
கூடங்குளம் என்பது ஊழல் உலை மட்டுமல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் உலை வைக்கும் அணு உலை அது.
முதல் அணு உலையைக் கட்டும்போது எச்.சி.எல். என்ற நிறுவனம் ஒதுக்கீட்டுத் தொகையை 46 விழுக்காட்டுக்குத் தான் டெண்டர் கோரி ஒப்பந்தம் எடுத்தது.
கடல் மணலைக் கலந்து கட்டிடம் கட்டுகிறார்கள் என்று அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்தார். இப்படியெல்லாம் கண்ணெதிரேயே தில்லு முல்லு செய்து கட்டிய அணு உலை வரைபடத்திலும், விளம்பரத்திலும் வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். நடைமுறையில் அதுவும் ஒரு காமன்வெல்த் கலக்கல் கட்டிடம் தான்.
ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடை கட்டுவோம்.
ஈழத் தமிழர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அள்ளிப்போட்டுக் கொன்ற இதே அரசு இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்கும் ஆயுதத்தை நம் நடுவில் நிறுவுகிறது.
வெடித்த பின்னர் வேதனைகளைக் கொட்டக் கூட நாம் இருக்கமாட்டோம். நம்மைக் கொல்லத் துடிக்கும் இன எதிரிகளை இந்தத் தேர்தலிலும் அடையாளம் காண்போம். எங்கெங்கு காங்கிரஸ் கட்சி நிற்கிறதோ அங்கெல்லாம் அக்கட்சியை வேரடி மண்ணோடு சாய்ப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அரிமாவளவன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?