இலங்கையில் கொழும்பின் புறநகர்பகுதியான களனிப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 8 பிச்சைக்காரர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
2010 இலும் சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமியின் விருது விழாவை முன்னிட்டு நகரை அழகுபடுத்தும் அரசின் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், கொழும்பு நகரில் இருந்த பிச்சைக்காரர்கள் பலர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பிச்சைக் காரர்கள் எல்லாம் மர்மமான முறையில், பெரும் கற்களை தலையில் போட்டும், கூரிய ஆயுதங்களால் குத்தியும் கோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதையும் மனித உரிமை அமைப்புகள் விசனத்துடன் கண்டித்திருந்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்ட பின்னர், பொலிஸ் காவலில் இருக்கும் போதே கொல்லப்பட்டதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமையில், பரந்துபட்ட சமூகப் பிரச்சனைகளுக்கு கொலைகள் தான் தீர்வு என்ற போக்கு இலங்கைச் சமூகத்தில் ஏற்படுவதாகவே தெரிவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், தெருவோரம் வசிப்பவர்கள் போன்றோரின் சமூகப் பிரச்சனைகள் உள்ளூர் ஊடகங்களில் பெருமளவு கண்டு கொள்ளப்படுவதில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மொஹமட் மஹீஸ் சுட்டிக்காட்டினார்.
குற்றக் கும்பல்களா, அதிகாரத்தில் இருப்பவர்களா இவ்வாறான கொலைகளின் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு சுட்டிக்காட்ட முடியாதிருப்பதாக கூறிய விரிவுரையாளர் மஹீஸ், சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கின்ற இவ்வாறான மக்களை பாதுகாப்பதற்கான, பராமரிப்பதற்கான சட்ட ரீதியான, நிறுவன ரீதியான ஏற்பாடுகள் இலங்கைச் சமூகத்தில் போதுமான அளவில் இல்லையென்றும் தெரிவித்தார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?