சென்னை, அக்.19–
மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தமிழக பா.ஜனதா அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ், மற்றும் ஜி.கே.எஸ். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:–
மராட்டியம், அரியானா ஆகிய இரு மாநிலங்களிலுமே பா.ஜனதாவை தனிப்பெரும் கட்சியாக மக்கள் அங்கீகரித்து விட்டனர்.
மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தாலும் மத்தியில் ஆளும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் அறிவித்து கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட பிரிவால் மக்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். அவ்வளவுதான்.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்ய சென்றோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழரான தமிழ்செல்வன் வெற்றி முகத்தில் இருக்கிறார்.
தேர்தல் நடைபெற்ற இருமாநிலங்களிலும் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் மோடி ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தமிழகத்திலும் எதிரொலிக்கும். இந்த வெற்றிகள் தொடரும்.
தீபாவளி பரிசாக மக்கள் இந்த வெற்றியை மோடி அரசுக்கு வழங்கி இருக்கிறார்கள். மோடி அரசும் 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் டீசல் லிட்டர் ரூ.3.50 குறைத்து பொருளாதார சீர்திருத்தத்தை தொடங்கி மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்கி இருக்கிறது.
சென்னை நகரம் ஒருநாள் மழையிலேயே தடுமாறுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?