மும்பை, அக். 19–
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. சம்பள பிரச்சினை தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலால் 4–வது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டனர்.
அந்த அணி 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது.
தர்மசாலாவில் நடந்த 4–வது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் நாடு திரும்பினர். போட்டியை பாதியில் ரத்து செய்ததற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டு இருந்தது.
வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் இந்த செயலால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்து உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்து இருந்தார்.
ரூ.400 கோடி வரை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்டஈடு கேட்கும் என்று தெரிகிறது. வருகிற 21–ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.
மேலும் வெஸ்ட்இண்டீஸ் அணியுடனான நேரடி போட்டித் தொடரை 5 ஆண்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வாரியத்தின் உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். இதுபற்றியும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?