பூந்தமல்லி, அக். 19–
டெல்லியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு போதை பொருட்கள் கடத்திய முக்கிய குற்றவாளியை போலீசார் பிடித்தனர். அப்போது சென்னை பூந்தமல்லியில் கூட்டாளிகள் சிலர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து டெல்லி போலீசார் மாறுவேடத்தில் பூந்தமல்லி பகுதியில் கண் காணிப்பில் ஈடுபட்டனர். பூந்தமல்லி மல்லீஸ்வரர் நகரில் உள்ள வீட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து டெல்லி போலீசார் பூந்தமல்லி போலீசாருடன் இணைந்து குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அங்கு 18 கிலோ ஹெராயின் பதுக்கி வைத்திருந்த கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மயில்பெருமாள், இலங்கையைச் சேர்ந்த ரபீக், அவரது மகன் ஜோஷிக் ஆகியோரை கைது செய்தனர்.
பதுக்கி வைத்திருந்த ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.40 கோடி ஆகும்.
கைதான 3 பேரிடமும் போதை பொருள் கடத்தலில் உள்ளவர்களின் பின்னணி மற்றும் டெல்லியில் கைதான குற்றவாளியுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே அவர்கள் 3 பேரையும் டெல்லி போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?