Friday 18 November 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் செமிபைனல் பிக்ஸ் செய்யப்பட்டதா?

 
 
 
கடந்த 1996ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. ஆனால் இந்த போட்டி 'பிக்ஸ்' செய்யப்பட்டிருக்கலாம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் பால்ய நண்பருமான வினோத் காம்பளி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 
கடந்த 1996ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்திய அணி, அதில் இலங்கையுடன் மோதியது.
 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் 2 வது பேட்டிங் செய்த இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள், கற்கள் ஆகியவற்றை ஆடுகளத்துக்குள் எரிந்து ரகளையில் ஈடுபட்டனர்.
 
ரசிகர்களின் ரகளை அதிகரித்ததால், வேறு வழியின்றி ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டியில் இலங்கை வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும் ஏமாற்றமடைந்த வினோத் காம்ப்ளி கண்ணீரோடு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
 
அந்த உலகக் கோப்பைக்கு பிறகு, இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட காம்ப்ளி மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்து வினோத் காம்பளி தற்போது பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அரையிறுதியில் வெற்றிப் பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னணியில் மேட்ச் பிக்சிங் இருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.
 
இது குறித்து ஸ்டார் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வினோத் காம்பளி கூறியதாவது,
 
'டாஸ்' வென்ற இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை தேர்வு செய்த போது அதிர்ச்சியடைந்தேன். சர்வதேச அளவில் நான் விளையாடிய கடைசி போட்டி என்பதால், அந்த போட்டியை என்னால் மறக்கவே முடியாது.
 
நான் ஒருபுறம் பேட்டிங் செய்ய, எதிர்புறத்தில் உள்ள பேட்ஸ்மேன்கள் வெற்றி இலக்கை எட்டிவிடலாம் என்று கூறிவிட்டு, வரிசையாக அவுட்டாகினர். அங்கு மறைமுகமாக என்ன நடந்தது என்று தெரியவில்லை.
 
இதன் பின்னணியில் ஏதோ ஒரு பிழை நடந்துள்ளது. அந்த போட்டிக்கு பிறகு நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் என்னால் இதுகுறித்து எதுவும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அப்போது அணி மேலாளாராக இருந்த வடேகருக்கு நிச்சயம் இது குறித்து தெரிந்திருக்கும், என்றார்.
 
காம்ப்ளியின் இந்தப் புகார் குறித்து வடேகர் கருத்து தெரிவிக்கையில்,
 
1996 உலக கோப்பையின் காலுறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால், இலங்கையை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று இந்திய அணி கருதியது. இதனால் அரையறுதியில் இலங்கையுடன் சாதரணமாக விளையாடி தோல்வியடைந்தோம். மற்றபடி அந்த தோல்வியின் பின்னணியில் எந்த பிழையும் நடந்ததாக தெரியவில்லை.
 
15 ஆண்டுகளுக்கு பிறகு வினோத் காம்ப்ளி திடீரென இந்த குற்றச்சாட்டை எழுப்பி இருப்பது ஏன் என்று தெரியவில்லை. நான் 4 ஆண்டுகள் அணி மேலாளராக பதவி வகித்த போது, வினோத் காம்ப்ளியுடன் பல முறை விருந்துகளில் பங்கேற்று உள்ளேன். இது குறித்து அப்போதே கூறியிருந்தால், நடவடிக்கை எடுத்திருப்பேன், என்றார்.
 
காம்ப்ளி எழுப்பியுள்ள குற்றச்சாட்டை விமர்சித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, அதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு கேட்டுள்ளார்.
 
இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சவரவ் கங்குலி கூறியதாவது,
 
15 ஆண்டுகளுக்கு பிறகு வினோத் காம்ப்ளி இந்த குற்றச்சாட்டை எழுப்பியது ஏன் என்று தெரியவில்லை. இது போன்ற பெரிய குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் தேவை.
 
காம்ப்ளி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரம் இருந்தால், அவர் அதனை வெளியே கொண்டு வர வேண்டும். இந்தியா 2வது பேட்டிங் செய்ததால் அரையிறுதியில் தோல்வி அடைந்தது என்ற காரணத்துக்காக அந்த போட்டி, 'பிக்சிங்' செய்யப்பட்டது என்று எடுத்துக் கொள்ள கூடாது, என்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger