பழி பாவங்கள் நம்மைச் சூழும்போது பிடிமானமற்ற நிராதரவான எண்ணம் நெஞ்சைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது. 'என் நியாயம் ஏன் எவருக்குமே கேட்கவில்லை?' என உலகே அதிரும் அளவுக்கு அலறத் தோன்றுகிறது.
'உன் கண்ணீர் ஒருவனையும் சட்டை செய் யாது' என உள்ளுணர்வு சொன்ன பிறகே, சுரணைக்கு சுதாரிப்பு வருகிறது. 'என் தரப்பு நியாயத்தை நிரூபிப்பேன். அநியாய பழிச் சுமையின் அவலத்தை நிச்சயம் எனக்கான நீதி அம்பலமாக்கும்' என எனக்கு நானே நம்பிக்கை சொல்லி எழுந்து நிற்கிறேன். ஆனாலும், 'நான் செய்தது நியாயம் இல்லை' என்பதை உலகம் ஒரேயடியாய்த் தீர்மானித்துவிட்டது. என்னுடைய ஒற்றைக் குரலால் அந்தத் தீர்மானிப்பை மாற்றுவது சாத்தியம் இல்லாதது. 'உலகத்தின் எண்ணப்படியே நான் குற்றவாளியாக இருந்துவிட்டுப் போகிறேன். இனி எனக்கு விடிவு இல்லை; நியாயம் இல்லை. சொந்தம் சுற்றம் என எதையுமே பார்க்காமல் மடியப்போகும் ஒருவனின் நிலைதான் எனக்கு!' என சோர்ந்து சுருண்டுவிட்டேன். 'சீக்கிரமே தூக்கில் போடுங்கள்' என என் அனுதினங்கள் அலறுகின்றன.
உலகத்தின் துயரமான தண்டனை புறக்கணிப்புதான். தோல்வியான கணங்களில் மிக நெருக்கமானவர்களின் புறக்கணிப்பு இரட்டிப்பாகிவிடுகிறது. யாருமற்ற நிலை யாருக்குமே வரக் கூடாது. தினமும் எழுந்து காலை, மதியம், மாலை சாப்பிட்டுவிட்டு கூண்டுக்குள் அடைந்து, தூங்கி எழும் வாழ்க்கையில் எமக்கான நிறைவு என்ன? எதற்காக இந்தக் காத்திருப்பு? நம்பிக்கைக் கீற்று எந்தக் கணத்திலும் ஏற்படப்போவது இல்லை என்பது தெரிந்தும் ஏன் இந்த எதிர்பார்ப்பு? கயிற்றுக்குள் தலை நுழைக் கும் கடைசிக் கணத்துக்காக எத்தனை காலம்தான் காத்திருப்பது? எம் கனவுகள் பொய்யாகிவிட்ட நிலையில் ஏன் இந்த வாழ்க்கை? ஒதிய மரம் பெருத்து உத்திரத் துக்கு ஆகப் போகிறதா என்ன? எதற்காக இந்தக் காத்திருப்பு? எத்தனை கொடூரம்!
இந்த மனநிலையில்தான் எங்களின் 21 வருடங்கள் கழிந்தன. இளமை தொலைத்து – இல்லறம் இழந்து – உறவுகள் முகம் மறந்து – உற்ற துணைக்கு யாருமற்று இத்தனைக் காலங்களை எப்படிக் கடந்தோம் என்பது மிச்சம் இருக்கும் எங்கள் உயிருக்கே வெளிச்சமான வினா. ஆனால், இன்றைக்கு கம்பிகளுக்குப் பின்னால் நம்பிக்கையோடு நிற்கிறோம். அமாவாசை இருட்டில் ஆகாயமே மின்னல் வடிவில் தீக்குச்சி உரசியதைப்போல், எங்கள் விழிகளுக்கு முன்னால் வெளிச்சம் தெரிகிறது. சிறு சிறு கணங்களில் அந்த வெளிச்சம் மறைந்தாலும், திரி நீளமான வெடி விட்டுவிட்டுப் புகைவதைப்போல் இடைவெளிகள் கடந்தும், அந்த வெளிச்சம் எங்களின் விழிகளைப் பற்றிக்கொள்கிறது.
'செப்டம்பர் – 9' எனத் தூக்குக்கு நாள் குறிக்கப்பட்ட வேளையிலும், எங்கள் மூவருடைய மூச்சும் இயல்பாகத்தான் இருந்தது. தமிழ்நாடே ஆர்த்தெழும் வேளையில், எங்கள் கழுத்தை எந்தக் கயிற்றாலும் இறுக்க முடியாது என்கிற நம்பிக்கை பிறந்திருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மிகப் பரபரப்பான சூழலில், எங்களின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு நடந்தது. மாபெரும் வழக்கறிஞர்களான ராம்ஜெத்மலானி, காலின் கான்சால்வேஸ் உள்ளிட் டவர்கள் நீதிப்பெருமான்கள் திரு.நாகப்பன், திரு.எம்.சத்திய நாராயணன் இருவரின் முன்னால் எங்களுக்காக நின்றார்கள். நீதிமன்றத்துக்கு வெளியே எங்களுக்காக தமிழ் உறவுகள் கணக்கிட முடியாத அளவுக்குக் கூடி இருந்ததை கம்பிகளுக்குள் இருந்தபடியே மனசால் பார்த்து சிலிர்த்தோம். எங்களுக்காகப் பேசிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அய்யா அவர்கள், "ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகள் 1999-ம் வருடத்துடன் முடிந்துவிட்டன.
மூன்று பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஆளுநர் 10 நாட்களில் தள்ளுபடி செய்துவிட்டார். அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்த உயர் நீதிமன்றம் கருணை மனுக்களை மீண்டும் பரிசீலனை நடத்தும்படி உத்தரவிட்டது. அதையடுத்து, இரண்டாவது முறை கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐந்து மாதங்களில் அது குறித்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் மூன்று பேரும் 2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். 11 ஆண்டுகள் கழித்து 28.7.11 அன்று குடியரசுத் தலைவர் அந்த மனுக்களை நிராகரித்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐந்து முறை குடியரசுத் தலைவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதித்து கருணை மனுவை நிராகரித்து இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. அரசியல் சாசனம் 21-ல் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிரானது. இந்த இடைப்பட்ட காலத்தில் மூவரும் எத்தகைய துயரங் களுக்கு ஆளாகி இருப்பார்கள். அனுதினமும் மரண வேதனையில் துடித்து இருப்பார்கள். அதனால், குடியரசுத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்!" என உரத்து முழங்க, எட்டு வார இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.
தூக்குக்குத் தயார் செய்யப்பட்ட பொம்மைகளைப் போல் (மனதளவில் தைரியம் இருந்தாலும் உடை, சாப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளில்) தனித் தனியே பிரித்து அமரவைக்கப்பட்டு இருந்த எங்களுக்கு இடைக்காலத் தடை குறித்த தகவல் வந்தது. தம்பி பேரறிவாளன், 'தமிழ் மக்கள் நம்மைக் காப்பாற்றிவிட்டனர் அண்ணா' எனக் கைகளை உயர்த்திச் சொன்னான். சாந்தன் பேரமைதியோடு தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றி பகர்ந்தார். எமக்காகப் போராடிய பெருமக்களை, உயிரையே எதிர்ப்புப் பத்திரமாக எழுதிக் கொடுத்த தங்கை செங்கொடியை, சட்டப் போராட்டம் நடத்திய உணர்வாளர்களை, குடும்பத்தில் ஒருவராக எம்மைப் பாவித்து உருகித் தவித்த தகையாளர்களை நேரில் பார்த்து நெஞ்சாரக் கட்டி அணைக்க முடியாத கம்பி வளையத்துக்குள் நாங்கள். கம்பிகளுக்குள் அடைபட்ட காரணத்துக்காக அன்றுதான் ஆதங்கப்பட்டோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் திசையில் எங்களால் கை கூப்பிக் கதறி அழ மட்டுமே முடிந்தது. சுருண்டு சோர்ந்திருந்த எங்கள் நரம்புகளில் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சிய பெருமக்களுக்கு நன்றிக்கடனாக நாங்கள் என்ன செய்யப்போகிறோம்?
அடுத்தடுத்தும் எமக்கான சட்டப் போராட்டங்கள் நீளுகிற நிலையில், எங்களைச் சந்திக்க வேலூருக்கு வந்தார் எமது உயிர் மீட்ட சக்தியான வர். நிமிடங்களை ஒதுக்கிக் கொடுக் கக்கூட அவகாசம் இல்லாமல், எந்நேர மும் பரபரப்பைக் கட்டிச் சுமக்கும் அந்தக் கடமையாளருக்கு எங்களைச் சந்திக்க எப்படி நேரம் கிடைத்ததோ? எங்களின் உயிர் மீது அவருக்கு அப்படி என்ன அக்கறையோ? சட்டத்தின் விதிகளைப் போல் அழுந்தப் படிந்த முக ரேகைகள் அவருடைய அறிவு முதிர்ச்சியின் அடையாளங்களாக இருந்தன. கை கூப்பிக் கும்பிடத் தோன்றியது.
"உங்களுக்கு எப்படி அய்யா நாங்கள் நன்றி செலுத்தப்போகிறோம்?" – எங்களின் கண்ணீர் வழியே வழிந்தது கேள்வி. மெல்லிய புன்னகையில், "கவலைப்படாதீர்கள்!" என்றார் ஒற்றைக் கையை உயர்த்தி. இந்தியாவின் சட்ட ஜாம்பவான் அவரிடத்தில் நாங்கள் என்ன கேட்க முடியும்? அவர் கேட்ட விவரங்களை மட்டும் விரிவாகச் சொன்னோம். பேரறிவாளனை இரக்கத்தோடு ஏறிட்டார். சாந்தனின் அமைதியை நியாயத்துக்கான அடையாளமாக எண்ணினார். "நான் இருக்கேன்" என்கிற நம்பிக்கையை எங்களுக்கான பெரும் பரிசாகக் கொடுத்துவிட்டுப் போனார். சிறைக்கு வெளியே பத்திரிகையாளர்கள் சிலர் சந்தித்தபோது, "சட்டம், நீதி, விசாரணை, விளக்கம் என்பதை எல்லாம் தாண்டி ஒருவரின் முகத்தைப் பார்த்தாலே அவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை என்னால் அடையாளம் கண்டுவிட முடியும். அந்த விதத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் நிரபராதிகள் என என்னால் சொல்ல முடியும்!" எனச் சொல்லி இருக்கிறார். அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் கண்ணீரை மட்டுமே கைமாறாகக் கொடுக்க முடியும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாங்கள் கைது செய்யப்பட்டோம். கைதான நாள் முதல் கயிற்றின் நிழலில் கதறிக்கிடக்கும் இன்றையநாள் வரை எமது வாழ்க்கை சோகச் சூறாவளியால் சூறையாடப்படுகிறது. விசாரணை என்கிற பெயரில் நாங்கள் சுமக்காத சித்ரவதைகள் இல்லை. உடலின் ஒவ்வோர் உறுப்பும் விசாரணை நடத்திய அதிகாரிகளிடத்தில் கை கூப்பிக் கதறின. பாதுகாப்பு என்கிற பெயரில் எமக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள், வாழ்வதற்கான ஆசையை அடியோடு வெறுக்கவைத்துவிட்டன. 20 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் தனிமைச் சிறையில்… தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலாக, கயிறு எங்களோடு கபடி ஆடுகிறது. ஏற்கெனவே, பல தடவை தூக்குக்குத் தேதி குறிக்கப்பட்டு கண்ணியில் சிக்கிய காடைக் குருவிகளாக எங்களை நிறுத்திப் பார்த்திருக்கிறது விதி. (சட்ட விதி என நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டாலும் எமக்கு சரிதான். தீர்த்துக்கட்டுவதுதான் தீர்ப்பு என்கிற நிலையில் தலையெழுத்து என்கிற விதியும், சட்டம் என்கிற விதியும் எமக்கு ஒரே விதமாகத்தானே இருக் கின்றன!) பின்னர் கடைசி நேரத்தில் தடைஆணைப் பெறப்பட்டு, எங்களின் உயிர்கள் தப்பித்தன.
தூக்கா..? தண்டனை நீக்கா? என்கிற பட்டிமன்றத்தில் எங்களின் வாழ்க்கை அடிக்கடி படபடக்கிறது. சாவின் விளிம்புக்குப் போய்த் திரும்புகிற நிலையை எத்தனை முறைதான் எதிர்கொள்வது? பிராய்லர் கோழி அடுத்த நாள் வரை தன் உயிரை பத்திரப்படுத்திக் கொள்வதைப்போல், ஒவ்வொரு முறையும் பதுங்கித் தப்புகிறது எங்களின் உயிர். சட்டம் என்கிற கத்தி எங்களின் கழுத்துகளைக் குறிபார்த்தபடியே கூர் தீட்டப்படுகிறது. நிராகரிக்கப்படுவதைவிட காத்திருப்பில் இருப்பதுதான் நம் வாழ்க்கையை இன்னமும் கடினம் ஆக்குகிறது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மூன்று வருடங்களைக் காத்திருப்பிலேயே கடந்து இருந்தால்கூட, நிச்சயம் தூக்கை ரத்து செய்து தண்டனைக் குறைப்பு செய்ய முடியும். இதற்கு உதாரணமான பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. ஆனால், 12 வருடங்களுக்கும் மேலாகக் காத்திருப்பிலேயே கழிகிற எங்களின் வாழ்க்கைக்கு மட்டும் எவரிடத்திலுமே பதில் இல்லாதுபோனது ஏன்? எமக்கான போராட்டங்கள் நிரந்தர விடுதலையை நோக்கி எமை அழைத்துச் செல்லும் என எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நம்புகிறோம்; ஏங்குகிறோம். காரணம், கயிறைவிட 'காத்திருப்பு'தான் எங்களை அதிகம் இறுக்குகிறது!
காயங்கள் ஆறாது
ஜூனியர் விகடன்
http://kathaludan.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?