தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களின் அன்றாட செலவினங்களான பால் மற்றும் பஸ் கட்டண உயர்வை அ.தி.மு.க. அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்தி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அ.தி.மு.க. அரசை தலைமை தாங்கும் முதலமைச்சரும் ஒரு பெண், அவர் தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு பதில், பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூபாய் 6.25 காசு உயர்த்தி, ஒரு லிட்டர் பாலின் விலை ரூபாய் 17.75 காசில் இருந்து, ரூபாய் 24ஆக உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை கொடுப்பதை தே.மு.தி.க. ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கொடுத்து விட்டு, மக்களிடம் இருந்து ரூபாய் 6.25 காசு வசூலித்துக் கொள்வது என்ன நியாயம்?. பால் கொள்முதலுக்கு உயர்த்தி வழங்கக்கூடிய 2 ரூபாயை அரசு மானியமாக வழங்கலாம்.
நடுத்தர மற்றும் ஏழை, எளிய, பாமர மக்கள் போக்குவரத்திற்கு அரசு பேருந்துகளைதான் நம்பியிருக்கிறார்கள். சுமார் 75 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது ஆகும்.
மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் எல்லாம் முடங்கிக்கிடக்கின்ற வேளையில் மின்சார ஆணையத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்த அரசு பரிந்துரைத்து இருப்பதும் கண்டிக்கத்தக்கது.
மக்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வந்ததே தங்களின் துயரை துடைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையோடு, மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த அரசு செயல்படுகிறது. இது மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது. எனவே உயர்த்தப்பட்ட பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?