பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை ஜெயலலிதா உயர்த்தியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா அரசின் இந்த திடீர் அறிவிப்பை கேட்டு மதிமுக பொதுச் செயலாளர் கூறியதாவது,
தமிழக அரசு பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை திடீர் என்று உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது. மக்கள் நலனுக்காக மதிமுக தொடர்ந்து போராடும் என்றார்.
ராமதாஸ் கண்டனம்:
பால் விலை மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் தவறான கொள்கைகளால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றுள்ளன. இந்த நிலையில் பேருந்து கட்டணம், பால் விலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் உயர்த்தி ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை தமிழக அரசு நொறுக்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்வரை அமைதி காத்த ஜெயலலிதா இப்போது அனைத்துக்குமான விலைகளை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை ஏமாற்றியிருக்கிறார். எனவே,மக்களைப் பாதிக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. பேருந்து கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்-ஞானதேசிகன்:
பால் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏழை மக்களை பாதிக்கும் வகையில் பால்விலை, பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. மத்திய அரசிடம் கேட்ட நிதியை தராததால் தான் இந்த விலை உயர்வு என்று சொல்வது தவறான கருத்து.
ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தையும், நிதி ஆதாரத்தையும் சிக்கனமாக கையாளுவது அந்த மாநில அரசின் பொறுப்பு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களுக்கு அதிகமான நிதியை இப்போது தந்து கொண்டிருக்கிறது. சுகாதாரத்துறை, கட்டுமான துறை, ஊரகத் துறை மற்றும் நகர மேம்பாட்டிற்காக அதிகமான நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக நலனுக்காகவும், சிறுபான்மை யினருக்காகவும் என பல்வேறு துறைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சி அல்லாத மாநிலங்களுக்கு என எந்தவித வேறுபாடும் காட்டுவதில்லை. இந்த குற்றச்சாட்டு தவறானது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.
கிருஷ்ணசாமி கண்டனம்:
பால் விலை மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசின் வரலாற்றிலேயே இப்படி ஒரு நேரத்தில் பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதில்லை. அதிமுக அரசின் இந்த அறிவிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முடிக்கிவிடும். எனவே பால் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வையும், விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் மின் கட்டண உயர்வையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று புதிய தமிழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?