Friday 18 November 2011

ஒருங்குபட்ட ஏற்��ாடுகளின் கீழ் மாவீரர் நாள்!



தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் ஆகும். இக் காலகட்டம் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற கொள்கை நிலையினை உயிர்ப்போடு பேணி அந்த உயரிய இலட்சியத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படும் தீர்மானகரமான காலகட்டம்.

இந்த இலட்சியப்பயணத்தில் நம்மை வழிநடாத்துபவர்கள் நமது மாவீரர்களே.

தமது தன்னலமற்ற ஈகத்தால், அளப்பெரும் வீரத்தால் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து நமது தாயக மண்ணில் ஆகுதியாகிப் போனவர்கள் நமது மாவீரர்கள்.

தியாகதீபம் திலீபனின் வார்த்தைகளில் கூறுவதாயின் மலரும் தமிழீழத்தை வானத்தில் இருந்து பார்ப்பதாக நமக்குக் கூறிவிட்டு நம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டவர்கள் இம் மாவீரர்கள்.

இம் மாவீரர்களை மையமாகக் கொண்டுதான் ஈழத்தமிழர் தேசம் ஒன்றுபட்ட தேசமாக விளங்க முடியும்.

இவர்கள் விட்டுச் சென்ற இலட்சியச்சுவடுகள்தான் நமக்கான வழிகாட்டிகள்.

நமது மாவீர்களின் இலட்சியத்தை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கிடையே கொள்கையளவில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது.

அணுகுமுறைகள் சார்ந்து நமக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக செயற்பட முடியாமலும் போயிருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரு ஜனநாயகச் சூழலில் மிக இயல்பானவை.

நமக்கிடையே இருக்கக்கூடிய எவ்விதமான அணுகுமுறை வேறுபாடுகளும்; நமக்கிடையிலான உரையாடலுக்கூடாகக் கையாளப்படக்கூடியவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் ஒருவரையொருவர் மதிக்கவும் அங்கீகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் இவ் வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை இரு பிரிவுகளாக நடாத்துவது தொடர்பான தகவல்கள் நம்மையும் நமது மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளன.

பல மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இவ் விடயத்தில் தலையிடுமாறும் ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஆவன செய்யுமாறும் தொடர்ச்சியான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.

இருந்த போதும் நமது மாவீரர் குடும்பநலன் பேணும் அமைச்சின் ஊடாக ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பினை விடுத்ததைத் தவிர நாம் மேலதிகச் செயற்பாடுகளில் இதுவரை ஈடுபடவில்லை.

இதற்கு ஒரு முக்கிமான காரணம் இருந்தது.

மாவீரர் நாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் நிலைமை திடீரெனத் தோற்றம் பெற்றதொன்றல்ல. விடுதலை அமைப்பின் இரண்டு கட்டமைப்புக்கள் தாம் ஒன்றாகச் செயற்படுவது தொடர்பாக நீண்டகாலம் பேச்சுக்களில் ஈடுபட்டு அதில் வெற்றியடைய முடியாமல் போனமையின் எதிர்மறைப் பெறுபேறாகவே இந் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இவ் இரண்டு கட்டமைப்புக்களிலும் ஒன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறது என்பது ஊர் அறிந்த விடயம்.

இச் சூழலில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான முறையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல் சாத்தியம்தானா எனும் கேள்வி எமக்கிடையே இருந்தது.

இருந்த போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் எனும் வகையில் நாம் நமது கடமைகளை மேற்கொள்ளுதல் அவசியமானது என நாம் உணரும் காரணத்தினாலும், இவ் விடயத்தில் மாவீரர் குடும்பங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஒருங்குபட்ட முறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு வழிகோலும் வகையிலுமான பேச்சுக்களில் உடனடியாக ஈடுபடுவதென நாடு கடந்த தமிழீழ அரசாங்ககத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இப் பேச்சுக்களை நடாத்துவதற்கென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் பேணும் அமைச்சினால் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பிரதிநிகள் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள்.

முரண்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர்களுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு, இம் முரண்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, இரண்டு பகுதியினருக்கும் ஏற்புடையதான ஒரு பொது ஏற்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நமது பிரதிநிதிகள் ஈடுபடுவார்கள்.

நமது இம் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவீரர் நாள் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பகிரங்கமாகக் கோருகிறது.

இம் முயற்சிக்கான ஆதரவினை வழங்குமாறு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள பொது அமைப்புக்களையும் ஊடகங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.

நமது மாவீரர்களின் கனவை நனவாக்கும் நோக்கம் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரோக்கியமாக அடுத்த கட்டம் நோக்கி நகர்வது ஈழத் தமிழர் தேசத்தின் ஒருமைப்பாட்டான செயற்பாடுகளில் இருந்தே கட்டியமைக்கப்படக் கூடியது.

இதனை உணர்ந்து நாம் அனைவரும் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை மட்டுமல்ல மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கமாகவும் அமையும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
http://www.tgte.org/


http://kathaludan.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger