கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு அணு மின் உலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும், ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிற அணுமின் உலைகளையும் விரைந்து மூட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை சென்னை பெரியார் திடலில் நடந்தது.
விழாவில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 185 பேருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
உள்ளாட்சித் தேர்தலில் சொந்தச் சின்னம் இல்லாத நிலையிலும், போதிய பொருளாதார வலிமையற்ற நிலையிலும், ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாகவும் நூற்றுக்கணக்கானோர் வெற்றி பெற்றுள்ளனர். அனைவருக்கும் இக் கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததுக் கொள்கிறது.
பரமக்குடி சம்பவம்-ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்:
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் தமிழகக் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான வெறியாட்டத்தில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், படுகொலையானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
நார்வே அரசின் அறிக்கை:
தமிழ் இனத்திற்கும், தமிழீழத்திற்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை உறுதிப்படுத்தியுள்ள நார்வே அரசின் அறிக்கை தொடர்பாக, இந்திய அரசு அனைத்துலக சமூகத்திற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் மீதான மரண தண்டனையை விலக்குவதற்கு தமிழக அரசு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
அணு உலைகளை மூட வேண்டும்:
இந்திய அரசு அணு மின் உலையை நிறுவுவதில் தீவிரம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை. எனவே, கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அணு மின் உலைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிற அணுமின் உலைகளையும் விரைந்து மூட வேண்டும் என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
http://kathaludan.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?