திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சி 3-வது வார்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஸ்டாலின். இவர் நேற்று பேரளம் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு மதியம் உணவருந்துவதற்காக அங்கு உள்ள கடை வீதிக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பேரளம் கடை வீதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
வேட்பாளர் ஸ்டாலின் காரையும் சோதனை போட்டனர். காரில் உரிமம் பெறாத துப்பாக்கி, காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், 3 செல்போன்கள் மற்றும் 2 அடி உயரம் உள்ள 3 இரும்பு கம்பிகள் இருந்தன.இதுகுறித்து போலீசார் ஸ்டாலினிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்டாலின் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.
உடனே போலீசார் ஸ்டாலின், அவரது நண்பர் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜோதிபாசு, டிரைவர் செந்தில் ஆகியோரை கைது செய்தனர். கார், மது பாட்டில்கள், துப்பாக்கி ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. கைதான 3 பேரும் திருவாரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவருடன் காரில் வந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ராஜீவ் காந்தி, சதீஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?