Saturday 15 October 2011

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

(dm)


Filed under: Hot News Tagged: சமூக பிரச்சனைகள், தமிழ்நாடு செய்திகள்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger