ஐதராபாத்: ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் அடுத்த ஆண்டு (ஏப்., 4- மே. 27) நடக்கும். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டுதோறும் உள்ளூர் "டுவென்டி-20′ தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடருக்கான தேதி, துவக்க விழா நடக்கும் இடம் ஆகியவை நேற்று அறிவிக்கப்பட்டது.
ஐதராபாத்தில் ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டம், அதன் தலைவர் ராஜிவ் சுக்லா தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு பின் ராஜிவ் சுக்லா கூறியது:
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டது. இதில் விளையாடிய வீரர்களுக்கு உரிய தீர்வு காணப்படும். இவர்கள் மீண்டும் கொச்சி அணியிலோ அல்லது வேறு அணியில் விளையாடுவார்களா என்ற முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கவில்லை. மீண்டும் அவர்களை எடுப்பது பற்றி இன்று விவாதிக்கவில்லை. அடுத்த முறை இதுபற்றி விவாதிப்போம்.
ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் களைப்படைகின்றனர் என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. வீரர்களின் சோர்வினை தடுக்க, அணியின் பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் வீரர்கள் போட்டி முடிந்த பின்பு "பார்ட்டி'யில் கலந்து கொள்வதற்கு தடைவிக்க வேண்டும் என ஐ.பி.எல்., அணி உரிமையாளர்களிடம் பேச உள்ளோம்.
இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.
பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் கூறுகையில்,""அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., போட்டிகள் சென்னையில் துவங்கும். ஏப்., 3ம் தேதி சென்னையில் இதன் துவக்க விழா நடக்கும். வீரர்களை ஏலத்தில் எடுப்பது போன்ற முடிவுகள் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும்,"என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?