காஷ்மீர் பிரிந்து போகட்டும் என்று கூறிய பிரசாந்த் பூஷணுக்கு அடி உதை தராமல், மலர் மாலையா போடுவார்கள்? என்று கேட்டுள்ள பால் தாக்கரே, அவரை தாக்கியவர்களைப் பாராட்டியுள்ளார்.
அன்னா ஹசாரே குழுவில் முக்கிய உறுப்பினராகவும், உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் ஆகவும் உள்ள பிரசாந்த் பூஷண், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அந்த மாநில மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதில் பிரிந்து போக விரும்பினால் போகட்டும் என்றும் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த 3 பேர், உச்சநீதிமன்றத்துக்கு உள்ளேயே பிரசாந்த் பூஷணைத் தாக்கினர்.
இந்த தாக்குதலைப் பலரும் கண்டித்த நிலையில், பிரசாந்த் பூஷண் தாக்கப்பட்டதற்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது கட்சி பத்திரிகையான சாம்னா'வில் எழுதியுள்ளதாவது:
சபாஷ்... நாட்டை துண்டாட நினைத்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இப்படித்தான் பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கூறி வருவது போல் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினால் பிரசாந்த் பூஷணுக்கு மலர் மாலையா போடுவார்கள்?
காஷ்மீர் இந்தியாவின் கிரீடம். அதை வெட்டி அப்புறப்படுத்துவது போல் பிரசாந்த் பூஷன் எப்படி பேசலாம்? அங்கு ராணும் இருப்பதால்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டு வருகிறது.
பிரசாந்த் பூஷண் மீதான தாக்குதலை கண்டித்த அன்னா ஹசாரே அவர் பேசிய கருத்துக்காக அவரை கண்டிக்காதது ஏன்? அன்னாவிடம் ஒரு தீப்பந்தம் இருப்பது உண்மைதான். ஆனால் நாட்டையே எரிக்கப் பார்ப்பதை சும்மா வேடிக்கை பார்க்க முடியாது," என்று கூறியுள்ளார் தாக்கரே.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?