ஐதராபாத்: ஒருநாள் தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 126 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது. அஷ்வின், ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 174 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிமுகப்படுத்திய, ஒருநாள் போட்டிக்கான புதிய விதிமுறைகள் முதன் முறையாக பின்பற்றப்பட்டன. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:
இந்திய அணி துவக்கத்தில் திணறியது. பார்த்திவ் படேல் (9) "ரன்-அவுட்' ஆனார். படுமந்தமாக ஆடிய ரகானே (15) சோபிக்கவில்லை. காம்பிர் (32) விராத் கோஹ்லி (37) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர்.
ரெய்னா அபாரம்:
பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி தூள் கிளப்பியது. துவக்கத்தில் நிதானமாக ஆடிய ரெய்னா, பின் அதிரடிக்கு மாறினார். பிரஸ்னன் வீசிய ஆட்டத்தின் 38வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், ஒருநாள் அரங்கில் தனது 18வது அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது, ரெய்னா 61 ரன்களுக்கு(2 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டானார்.
தோனி அரைசதம்:
அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்த தோனி, பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அவ்வப்போது "பவுண்டரி' அடித்து நம்பிக்கை அளித்த தோனி, ஒருநாள் அரங்கில் தனது 42வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜடேஜா, சமீத் படேல் வீசிய ஆட்டத்தின் 45வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு "சிக்சர்' அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜடேஜா (27), ரன்-அவுட்' ஆனார்.
சவாலான இலக்கு:
அடுத்து வந்த அஷ்வினும் (8), "ரன்-அவுட்' ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய தோனி, அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்தது. தோனி 87 ரன்களுடன் (ஒரு சிக்சர், 10 பவுண்டரி)அவுட்டாகாமல் இருந்தார்.
குக் அரைசதம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கீஸ்வெட்டர் (7) ஏமாற்றினார். அஷ்வின் "த்ரோவில்' கெவின் பீட்டர்சன்(19) "ரன் அவுட்' ஆனார். பின் இணைந்த அலெஸ்டர் குக், ஜோனாதன் டிராட் ஜோடி போராடியது. குக், ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதம் அடித்தார்.
"சுழல்' ஜாலம்:
மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது, ஜடேஜா சுழலில் குக் (60) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (26), ஜடேஜாவிடம் பறிகொடுத்தார். அடுத்து வந்த ரவி போபரா (8), அஷ்வின் சுழலில் சிக்கினார். பயிற்சி ஆட்டத்தில் அதிவேக சதம் அடித்த பேர்ஸ்டோவ் (3), ஜடேஜா பந்தில் வெளியேறினார்.
சுலப வெற்றி:
அடுத்து வந்த டிம் பிரஸ்னன் (4), அஷ்வின் சுழலில் "ஸ்டம்பிங்' ஆனார். உமேஷ் யாதவ் வேகத்தில் சுவான் (8), சமித் படேல் (16) நடையை கட்டினர். கடைசியாக களமிறங்கிய டெர்ன்பாக் (2), அஷ்வினிடம் சரணடைய, இங்கிலாந்து அணி 36.1 ஓவரில் 174 ரன்களுக்கு சுருண்டு, மோசமான தோல்வி அடைந்தது.
சுழலில் அசத்திய அஷ்வின், ரவிந்திர ஜடேஜா தலா 3, வேகத்தில் மிரட்டிய உமேஷ் யாதவ் 2, பிரவீண் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி டில்லியில் நடக்கவுள்ளது.
மிகப் பெரிய வெற்றி
நேற்று 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2008ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில், இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அப்பாடா…!
சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு "டுவென்டி-20′ போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது. மொத்தம் 10 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சந்தித்த தோல்விக்கு பின், தற்போது தான் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. நீ…ண்ட இடைவெளிக்கு பின் வெற்றியை ருசித்துள்ள கேப்டன் தோனி, முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். வரும் போட்டிகளிலும் இவரது வெற்றிநடை தொடரட்டும்.
ரெய்னா "3000′
நேற்று இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, 7வது ரன் எடுத்த போது ஒருநாள் அரங்கில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 61 ரன்கள் எடுத்த இவர், இதுவரை 126 ஒருநாள் போட்டிகளில் 3 சதம், 18 அரைசதம் உட்பட 3,054 ரன்கள் எடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?