Saturday 15 October 2011

மு.க.அழகிரி கோட்டையில் ஜெயிக்க போவது யாரு ?

 
 
மு.க.அழகிரியின் கோட்டையான மதுரையில் திமுக வேட்பாளராக பாக்கியநாதனும், அதிமுக வேட்பாளராக மாஜி எம்பியான ராஜன் செல்லப்பாவும், விஜயகாந்த் கட்சியான தேமுதிக சார்பாக கவியரசும், காங்கிரஸ் கட்சி சார்பாக சிலுவையும், மதிமுக சார்பாக பாஸ்கர சேதுபதி மற்றும் சுயேட்சை உள்பட 28 வேட்பாளர்கள் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
 
மு.க.அழகிரியின் விருப்பப்படி பாக்கியநாதனும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் கே.ராமச்சந்திரனம், கலைஞர் சார்பாக பொன்.முத்துராமலிகமும் சீட்டு கேட்க, சில நாட்கள் இழுபறிக்கு பின்னர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பாக்கியநாதன் களம் இறக்கப்பட்டார். களம் இறக்கிய கையோடு மு.க.அழகிரி, இன்று வரை பாக்கியநாதன் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அழகிரி வராதது பாக்கியநாதன், பாக்கியமில்லாத வேட்பாளராக களத்தில் உள்ளார்.
 
 
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, ஆரம்பம் முதலே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்பதால், தொகுதிக்குள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்து பொந்துகளில் வாக்கு சேகரித்தார். ஆரம்பம் முதலே முன்னணியில் இருப்பதால், பிரச்சாரத்திலும் முன்னணியில் இருக்கிறார் ராஜன் செல்லப்பா. செல்லும் வேட்பாளராக இருக்கிறார் செல்லப்பா.
 
 
 
 
 
 
 
ஜெயலலிதாவிடம் விஜயகாந்த் கேட்ட முதல் மாநகராட்சி மதுரை என்பதாலோ என்னவோ, ஜெயலலிதா அவரை கழட்டி விட்டார். ஜெயலலிதா கழட்டி விட்ட நிலையில், விஜயகாந்த் தான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால், தன்னுடைய கட்சியில் ஆரம்ப கால மன்ற நிர்வாகியான கவியரசை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
 
 
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மதுரைக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். மதுரையில் தேமுதிக வெற்றி பெற்றால் 2016ல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக நான் ஆவேன் என்று விஜயகாந்த் சந்து பொந்தெல்லாம் வாக்கு கேட்டு சென்னை திரும்பியபோது, ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை இரண்டாம் இடம் தேமுதிகவுக்கு கிடைத்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் விஜயகாந்த். இதனால் இரண்டாம் இடத்துக்கு தவியா தவித்து வருகிறார் கவியரசு.
 
 
காங்கிரஸ் கட்சியில் களம் இறங்கியுள்ளார் சிட்டிங் கவுன்சிலர் சிலுவை. வார்டுக்கே நின்றால் தோற்கும் நிலையில் இருக்கும் சிலுவையை, நூறு வார்டு கொண்ட மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் களம் இறக்கியிருப்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கவுரவத்தை சேர்ப்பாரா என்று அக்கட்சியினர் எதிர்பாக்கின்றனர். பல வார்டுகளுக்கு வேட்பாளர் கிடைக்காத நிலையில், மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்பாளர் கிடைத்தது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கவுரவத்தோடு களம் இறங்கியுள்ளார் சிலுவை.
 
 
கட்சி இருக்கோ, இல்லையோ தேர்தல் களத்தில் இருக்கிறேன் என்று கோவில் மாநகர் முழுவதும் தனது கம்பீர குரலை பாய்ச்சிய வைகோ, மதுரைக்கு தான் வரும்போதெல்லாம் பாதுகாப்பாக அணிவகுக்கும் தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதிக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்டு பம்பரமாக சுற்றி வந்தார் வைகோ.
 
 
இதில் திமுக அதிமுக நேரடியாக மோதினாலும், தேமுதிக வேட்பாளரைப் பற்றிதான் மதுரை மாநகராட்சி தேர்தலில் பட்டி மன்றமே நடக்கிறது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger