நாட்டில் உள்ள பெருநகரங்கள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் தற்போது மின்வெட்டு பெரும் பிரச்னையாக உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தேசிய அனல் மின்கழகத்திற்குச் சொந்தமான ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் ஓரிரு நாட்களுக்குத் தான் நிலக்கரி உள்ளது.
டில்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தற்போது மின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு நிலவுகிறது. பல மாநிலங்களில், நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இந்த மின்வெட்டு அடுத்து வரும் நாட்களில் மிகவும் மோசமாகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தமான ஐந்து மின் நிலையங்களில், அடுத்த ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளது. சில மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது பாதியளவுக்கு மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. தேசிய அனல்மின் கழகத்திற்கு சொந்தமான 13 நிலக்கரி சேமிப்பு கிடங்குகளில் இருந்த, நிலக்கரியின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்திய நிலக்கரி நிறுவனத்தில் இருந்து, மின் நிலையங்களுக்கு சப்ளை செய்யப்படும் நிலக்கரி அளவும் 20 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரியின் அளவு குறைவாக இருப்பதற்கு, நிலக்கரி உற்பத்தியாகும் சில பகுதிகளில் கனமழை பெய்வதும், கடந்த வாரத்தில் நிலக்கரி நிறுவன ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்தது மற்றும் ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை போராட்டத்தினால், நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது போன்றவையே காரணம்.
இது தொடர்பாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், ""நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் கடும் மழை பெய்வதால், சுரங்கப் பணிகள் பாதிக்கப்பட்டு, நிலக்கரி சப்ளை தடைபட்டுள்ளது. இருந்தாலும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அனல் மின் கழகம் கேட்டுக் கொண்டால், மேலும் நிலக்கரி அளிக்கப்படும்," என்றார்.
மற்ற மாநிலங்களில் தான் இந்தப் பிரச்னை என்றில்லை. நிலக்கரி அதிக அளவில் உற்பத்தியாகும் மேற்குவங்க மாநிலத்திலும், மின் உற்பத்தி நிலைமை மோசமாக உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து நிலக்கரியைப் பெறக்கூடிய, மாநில மின் நிறுவனங்கள் அதற்குரிய பணத்தைத் தராமல் அதிக அளவில் பாக்கி வைத்து உள்ளதால், நிலக்கரி சப்ளை நிறுத்தப்பட்டு, கடும் மின்வெட்டு அமலாகியுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா உட்பட அம் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தில், 875 மெகாவாட் குறைவாகக் கிடைப்பதால், மின் வெட்டின் தீவிரம் அதிகமாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறை பிரச்னை இல்லை என்றாலும், மத்திய அரசால் இயக்கப்படும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மாநிலத்திற்கு சப்ளையாகும் நிலக்கரி 30 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளதால், மற்ற மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்வதை நிறுத்த, முதல்வர் மோடி அரசு முடிவு செய்துள்ளது.
இதேபோல், தமிழக அனல் மின் நிலையங்களுக்கும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின்வெட்டு கூடுதலாக அமலாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
(dm)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், இந்தியா, சமூக பிரச்சனைகள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?