இனி எந்தக் காலத்திலும் தீயசக்திகள் தமிழகத்தை கொள்ளையடிக்க முடியாத வகையில், மக்கள் பணியாற்றுவோம் என்பது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க., தனது 39 ஆண்டு வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, அகவை 40ல் அடியெடுத்து வைப்பதை எண்ணி, மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்து மக்களெல்லாம் ஒருசேர கிளர்ந்தெழுந்து, கருணாநிதியை தூக்கி எறிய கண்டுபிடித்த பேராயுதம் தான் அ.தி.மு.க.,மக்களுக்காகவே மக்களே உருவாக்கி, மக்கள் திலகத்தை தலைமை ஏற்கச் செய்து, ஆட்சி அமைக்க உருவாக்கிய மக்கள் புரட்சிக் கட்சி அ.தி.மு.க., எனவே தான், 1972ம் ஆண்டு துவக்கப்பட்ட ஆறே மாதத்தில் 1973ம் ஆண்டில், திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலை சந்தித்து, வெற்றி பெற முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, 1977ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர்., அமோக வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்தார்.
கட்சி, துவக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் ஆதிக்க சக்தியை, குடும்ப ஆதிக்கத்தை, கொள்ளைக் கும்பலின் அராஜகத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்த்தது என்றால் அது இந்திய அரசியல் வரலாற்றில் அ.தி.மு.க., மட்டும் தான்.விலையில்லா அரிசி, முதியோருக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய், தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவ, மாணவியருக்கு லேப்-டாப், ஏழைகளுக்கு ஆடு, மாடுகள் ஆகியவற்றை வழங்குகிறோம். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமிழக அரசு கேபிள் "டிவி' இணைப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.
தி.மு.க.,வினராலும், சமூகவிரோத சக்திகளாலும் அபகரிக்கப்பட்ட ஏழை, எளியோரின் நிலங்கள் சட்டப்படி மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் மகத்தான பணி, நாடே வியக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சி தொடர, நாம் அனைவரும் அ.தி.மு.க., தோன்றிய இந்த பொன்னாளில் உறுதி மேற்கொள்ள வேண்டும்.
இனி எந்தக் காலத்திலும் தீயசக்திகள் தமிழகத்தை கொள்ளையடிக்க முடியாத வகையில், மக்கள் பணியாற்றுவோம் என்பது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
http://kathaludan.blogspot.com
http://kathaludan.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?