Saturday, April 05, 2025

Tuesday, 18 October 2011

போருக்குப் பின்��ரான பேச்சுவார்த���தைகள் தமிழர்களுக்குத் தீர்வைத் ���ருமா?



காலம் காலமாக ஆளும் இலங்கை அரசுகளுடன் தமிழர் தரப்புக்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றனர். தந்தை செல்வா முதல் சம்பந்தன் வரை தமிழர்களின் தரப்புக்களாக நின்று நடத்தி வரும் அத்தனை பேச்சுக்களிலும் இலங்கை அரசுகள் ஏமாற்று நாடகத்தை மாத்திரமே அரங்கேற்றி வருகின்றன.

அவை தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. காலம் தோறும் தமிழ்த் தரப்புக்கள் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு நடத்தி வரும் பேச்சுக்களை பேரினவாத ஒடுக்குமுறை அரசியலால் அரச தரப்புக்கள் அணுகி வருகின்றன. இலங்கையை சிங்களக் கட்சிகள் ஒவ்வொன்றும் மாறி மாறி ஆண்ட பொழுதும் தமிழர் தரப்புக்களை அவை ஏமாற்றுவதில் அல்லது தோல்வியுறச் செய்வதில் ஒரே கொள்கைகையும் வெளிப்பாட்டையும் காட்டி வருகின்றன. தமிழர் தரப்புக்களைப் பொறுத்தவரையில் பேச்சுவார்த்தைகள் என்பது ஏமாற்று நாடகம் என்பதோடு தமிழர் அரசியலை அழித்து தோலியுற வைக்கும் தந்திரோபாயத்தைக் கொண்ட சூழச்சியாகவும் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.

அண்மைய காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் முக்கியம் வாய்ந்த நிலையில் கருதப்பட்ட பொழுதும் தமிழ் மக்களால் எதிர்பார்க்கத்தக்க எந்த விளைவுகளையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் இதுவரையான பெறுபெறு. இந்தப் பேச்சுவார்த்தை ஈழப்பேராட்டத்தில் பெரும் துயரை விளைவித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்ற பேரவலத்திற்குப் பின்னர் இடம்பெறுகிறது. ஈழத் தமிழனம் தனது விடுதலைக்காகவும ; உரிமைக்காகவும் போராடிய நிலையில் வல்லாதிக்க உலகநாடுகள் பலவற்றின் ஆயுத ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளுடன் மிக மூர்க்கத்தனமான போரை அரசு நடத்தியது. லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றும் காயப்படுத்தியும் நடத்தப்பட்ட போருக்கு மனிதாபிமானப் போர் என்றும் தமிழ் மக்களை மீட்கும் போர் என்றும் பெயர் சூடட்டி நடத்தி முடித்தி வெற்றி விழாக்களையும் அரசு நடத்துகிறது.

யுத்தம் நடத்தி முடித்தவுடன் தமிழர் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களுக்கான தீர்வு முன் வைக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு தியாகங்களுடன் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற முத்திரையை குத்தி அந்தப் போராட்டத்தை அழித்த அரசாங்கம் போர் முடிந்த பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன் வைப்போம் என்று குறிப்பிட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜப்ச பல்வேறு தருணங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார். போரை நடத்த இந்தியா உட்பட்ட நாடுகள் இலங்கை அரசுக்கு வலுவாக முண்டு கொடுத்ததுடன் போருக்குப் பின்னர் தமிழர்களுக்கு தீர்வை முன் வைக்க வேண்டும் என்றும் அதற்கான பேச்சுவார்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அடிக்கடி நினைவூட்டி வருகிறது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சிரனை தீர்க்கப்பட வேண்டும் என்று வெறுமையாக இந்தியா சொல்வதுதான் இலங்கை அரசை உரிமை மறுப்பரசியலை செய்ய இன்னும் உந்தி விடுகிறது. ஈழத் தமிழர்கள் ஏன் போராடினார்கள்? ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசும் சிங்களக் கட்சிகளும் இழைத்தவை என்ன? பல்லாயிரக்கணக்கான போராளிகள் உயிரை தியாகம் செய்து போராடியது ஏன்? லட்சக்கக்கான மக்கள் பலிகளுக்குள்ளால் கடந்தது ஏன்? என்ற கேள்விகள் பேச்சுவர்ர்த்தைத் தருணங்களில் நினைவுக்கு வருவதோடு ஈழத் தமிழர்கள் என்ற அடையாளப்படுத்தலையும் அவர்களுக்கு என்ன உரிமை தேவைப்படுகின்றது என்பதையும் அவர்கள் விரும்புவது எதை என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றன.

ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடும் தாக்குதலும் பங்களிப்பும் இருக்கிறது என்பதோடு இந்தியாவிற்குள் தமிழகம் என்ற மாநிலத்தில் ஈழத் தமிழர்களின் உறவுகள் ஏழரை லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்ற வகையிலும் இந்தியா ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் தலையிட வைக்கப்படுகிறது. வெறுமனே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்கிற அர்த்தத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு நினைவூட்டுகிறோம் என்றும் இந்தியாவுக்கு இலங்கைத் தமிழர்களில் அக்கறை இருக்கிறது என்றும் சொல்லிச் சொல்லியே காலம் கடந்து அரசியல் செய்யப்படுகிறது.

இன்று இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் இலங்கை அரைசோடு பேசுங்கள் என்று தமிழர் தரப்பிடம் சொல்லுகின்றன. அரசுகள் எப்பொழுதும் அரசுகளாகவே இருக்கின்றன என்ற பொழுதும் ஈழப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்ட சூழலில் தமிழர் தரப்பாக இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையை எதிர்கொள்ள வேண்டிய நிலமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. அன்றைய டட்லி அரசிலிருந்து இன்றைய மகிந்த அரசு வரை ஒரு வார்த்தையை தன்னும் உன்மையுணர்வுடன் பேசியிருக்காத சூழலில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தமிழர் தரப்பாய் இந்தப் பேச்சுவார்த்தைகளை எதிர் கொள்ளுகின்றன. ஈழப் போராட்டத்தில் யுத்தத்தைப்போலவே பேச்சுவார்த்தைகளும் தமிழர்களை பலியாக்கியிருக்கின்றன. நம்பிக்கையீனங்களை உருவாக்கி தோல்வியின் சமன்பாடுகளால் போராட்டத்தை முடக்குகின்றன.

ஈழத்தின் அரசியல் போராளியாக 'தமிழர்களுக்கு தனிநாடு ஒன்றே தீர்வு' என்று இலங்கை அரசியலில் பட்டுணர்ந்து போராட்டத்திற்கு விதையிட்ட தந்தை செல்வா பேச்சுவார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டவர். டட்லி செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம் என்ற இந்தப் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் அன்றைய காலத்தில் ஈழத் தமிழர்களை ஏமாற்றி காலத்தை கழித்த பொழுது தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைதான் உருவாகப் போகிறது என்று அவர் முன் மொழிந்தார். ஒரு காலத்தில் முழு இலங்கத்தைத்தீவையும் ஆண்ட தமிழர்களுக்கு வரலாறு கொடுத்த அனுபவங்கள்தான் ஈழத்து நிலைப்பாடுகளை உருவாக்கியிருக்கின்றன. ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழர்களாக வாழ வேண்டும் என்கிற அந்த வாழ்வுரிமையை மறுக்கும் சிங்கள அரசுகளுடன் தமிழர்கள் கொதித்துப் போராட முற்படும் பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்த வரலாற்றின் தொட்ர்ச்சியாக உலக சூழலில் ஒடுக்கப்படும் இனத்தின் வெளிப்பாடுகளாக ஈழத்தில் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டமும் சில கட்டப் பேச்சுக்களை சந்தித்திருக்கின்றன. போராட்டத்தின் உக்கிரத்தையும் அதன் வெளிப்பட்டையயும் அதன் நியாயத்தையும் புரிந்த பொழுதும் உரிமையற்ற மக்களின் உணர்வுகளை புரியாத தீர்வுகள்தான் இந்தப் பேச்சு வார்ததைகளில் முன் வைக்கப்பட்டன. ஈழத்து மக்களின் பாதுகாப்பிற்கு மறான எந்தத் தீர்வுகளையும் போராளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தனி ஈழத்திற்காக நான்கு கட்டம் போர்களை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் சந்திரிகா அரசோடும் மகிந்த அரசோடும் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. காலப்பரிமாணமும் போராடும் இனத்தின் உக்கிர வெளிப்பாடும் முன் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் தமிழர்களை புரிந்து கொள்ள வேண்டிய தருணங்களாகவும் காலமாகவும் சந்தர்ப்பமாகவும் முன் வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உச்ச கட்ட வளர்ச்சியைப் பெற்று ஈழ நிழல் அரசொன்றை நடத்திய மூன்றாம் சமாதான காலத்தில் அதாவது நான்காவது ஈழப் போர் தொடங்கு முன்பான பேச்சுவார்த்தைகள் ஈழப் போராட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. முழுமையான தியாகத்தோடு ஈழத்து மக்களின் முழுமையான வெளிப்பாடாக தனி ஈழம் கோரிப் போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலான நிலப் பகுதியை தமது வசப்படுத்தி வைத்திருந்ததோடு படைத்துறையில் பல்வேறு பரிமாணங்ககளையும் பெற்றிருந்தார்கள். சிவில் நிர்வாக அலகை உருவாக்கி ஈழத்து மக்களின் எதிர்கால வாழ்வுக்கான திட்டங்களையும் அமைவுகளையும் வரைந்திருந்தார்கள். ஈழத்து மக்களின் வரலாற்றில் ஈழப் போராட்ட வரலாற்றில் இவை முக்கியமானது. இன்றைய அழிவுச் சூழலில் கடந்த கால மாதிரிகள் பற்றிய நினைவுகள் ஒட்டு மொத்த ஈழத்திற்கு வேண்டியவை என்பதை மீள அவசியப்படுத்துகிறது.

போரில் இழப்புக்களை சந்தித்த அரசு விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அதனைத் தொடர்ந்து அமுலுக்கு வந்த சமாதானத்தையும் ஒரு போர் ஓய்வுக்காலமாகவும் படையெடுப்புக்குத் தயாராகும் காலமாகவும் பயன்படுத்தியது. சிங்கள அரசுகளின் பேச்சுவார்த்தைகளையும் சமாதானம்மீதான எதிர்வினைகளையும் காலம் காலமாக கண்டு வந்த புலிகள் சமாதான காலத்தில் தம்மையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அரசிற்கு போர் அணுகுமுறைகளில் இருந்த நம்பிக்கையும் விருப்பமும் சமாதானத்தின்மீது இருக்கவில்லை. அதனால் எப்பொழுதும் மறுத்துப் போரிடும் ஒரு நிலையில் புலிகள் தயாராகவே இருந்தார்கள். சமாதான காலத்திலும் படுகொலைகளும் போரும் யுத்த நிறுத்த மீறல்களும் நடைபெற்றிருக்கின்றன. புலிகளின் கட்டமைப்பு, செயற்பாடுகள், உட்பட தலைமைகள் தொடர்பாக தகவ்லளை சேகரிக்கும் பணியில் அரசும் படைகளும் தீவிரமாக செயல்பட்டிருக்கின்றன.

பேச்சுவார்தைகளின் பொழுது ஈழத் தமிழர்களின் இறமையுள்ள தீர்வை கோரியே புலிகள் நகர்ந்தார்கள். அதுவே ஈழப் போராட்டத்தின் இலட்சியமுமாக இருக்கிறது. இலங்கை அரசோ ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை அவர்களிடத்தில் கொடுக்க ஒரு பொழுதும் தயாராக இருந்ததில்லை. போர் அணுகுமுறைகளில் ஈழத் தமிழர்களை எச்சரித்து அவர்கள் உரிமையை மட்டுமல்ல எதையும் கேட்க முடியாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டமிருந்தது. பேச்சுவார்த்தை என்று புலிகளுடன் பேசி நாட்டை பிரித்துக் கொடுக்க முடியாது என்று சிங்களக் கட்சிகள் எதிர்க்கூச்சலிட்டன. ஈழத் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் தனித்துவத்தையும் கோருவதை பயங்கரவாதம் என்று; பிரிவினை வாதம் என்றும் சொல்லி உரிமை மறுப்பை மிக இலகுவாக மேற்கொண்டார்கள்.

மனிதாபிமானத்தையும் உரிமையும் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளும் நிராகரித்திருந்தன. சமாதானத்தின் எல்லாக் கதவைகளும் உடைக்கப்பட்டு சமாதானத்தின் முழு வெளியும் நிராகரிக்கப்பட்டு போர் தொடங்கப்பட்டது. போர் வழிகள் எப்பொழுது திறக்கப்படும் என்றிருந்த அரசு மாவிலாற்றில் ஆரம்பித்து மாத்தளன் வரை போரை நீடித்தது. போரை நிறுத்துங்கள்! மனித உயிர்களை காப்பாற்றுங்கள்!! பேச்சுவார்தையில் ஈடுபடுங்கள்!!! சமாதான வழிக்குச் செல்லுங்கள்! என்ற குரல்களை நிராகரித்து போரின் மூலம் முழு நிலத்தையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தை மாத்திரம் அரசாங்கம் கொண்டிருந்தது. இதை வெளிப்படையாகவே அறிவித்துப் போரை நடத்தியது. ஈழத்துப் போராட்ட வரலாற்றில் அதிக இழப்புக்களையும் அதிக எதிர்பார்ப்புக்களையும் நான்காம் கட்டப் போர் உருவாக்கியிருந்தது. புலிகள் இயக்கத்தின் உச்ச கட்ட வளர்ச்சியை அழிக்க அரசு உச்ச கட்டப் போர் என்பதை மிகவும் கொடூரமாக மேற் கொண்டது. புலிகளின் வளர்ச்சிக்கும் பலத்திற்கும் ஈடாக பல நாடுகளின் படைகள் களம் இறங்கியிருக்கின்றன. ஒரு சமாதானமும் அதுடன் இணைந்த பேச்சுவார்த்தைகளும் ஈழத்து மக்கள்மீது கொடும் போராக வெடித்தது. ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் என்பது மபெரும் அழிவின் பின்னர் மாபெரும் படுகொலையின் பின்னர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அத்தகைய அவலத்தை பெருக்கிய முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்ததைகளில் அரசு எந்த நல்லெண்ணத்தையும் இதுவரையில் காட்டவில்லை என்பது மீண்டும் தமிழர்களை பேரினவாத அரசியலின் தொடக்க புள்ளிக்குள் தள்ளுகிறது. வெறும் அறிமுகங்களாகவும் சம்பிரதாயங்களாகவும் பேச்சுவார்ததைகள் அடுத்தடுத்து நடக்கின்றன. எந்த நன்மையும் இல்லாமல் எந்த மாற்றமும் இல்லாமல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் இடையிடையே நடந்து கொண்டிருக்க தமிழர்கள்மீது புதிய புதிய அடக்குமுறைகளையும் நிலப்பறிப்புக்களையும் அரசு நிகழ்த்துகின்றது. நான்காம் ஈழப்போரிற்கு முன்பாக இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஏ-9 பாதையை திறந்து யாழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரியவேளை அதை அரசு மறுத்திருந்தது. இப்பொழுது கூட்டமைப்பு தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கூடாது என்றும் போரில் காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

பேச்சுவார்த்தைகளின் தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகளும் மனித உயிர் சார்ந்த பிரச்சினைகளும்கூட மிக இயல்பாக புறக்கணிக்கப்படுகின்றன. அரசாங்கமோ தொடர்ந்தும் சிங்களக்குடியேற்றத்தை உற்சாகமாகச் செய்து கொண்டிருக்கிறது. காணாமல் போனவர்கள் பற்றிய விபரத்தை வெளியிடுவதாக வாக்களித்துவிட்டு விபரங்களைக் கேட்டுச் சென்ற மக்களை விரட்டியடித்தது. இன்றைய ஈழத்தில் காணாமல்போனவர்களை தேடும் மக்களின் பிரச்சினைகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஈழத் தமிழல்களிளை பெரும் கண்ணீர் கடலுக்குள் தள்ளியிருக்கிறது. உயிர்ப்பிரச்சினையாகவும் மனப்பிரச்சினையாகவும் நீடிக்கும் இந்த விவகாரத்தில் அரசு இரக்கமற்று பந்தாடுகிறது. வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை குழப்பும் சூழல் உருவாக்கப்பட்டு பேச்சைத் தொடர்கிற நம்பிக்கை இன்மையை உருவாக்கி அதில் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணிகளில் ஈழப்போராட்டத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்ற பேச்சுவார்த்தைகள் எந்தளவு முக்கியம் பெறுகின்றது என்ற கேள்வி இருக்கிறது. தனி நாடு கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தி வந்த போராட்டத்தை சிதைத்த அரசுடன் இன்று எத்தகைய பேச்சை நடத்தி என்ன பலன்? என்ற கேள்விகள் எழுகின்றன. வரலாற்றில் இதற்கு முன்பும் பல பேச்சுக்கள் நடந்திருக்கின்றன. இதனால் அரசுடனான பேச்சுக்களில் ஏதும் நம்பிக்கை தரும் மாற்றங்கள் ஏற்படுமா? என்றும் கேள்வி எழுகிறது. இந்தியாவும் அமரிக்காவும் கூட்டமைப்புடன் பேசுங்கள் என்று சொல்லுவதைப்போல முன்பு ஒரு காலத்தில் புலிகளுடன் பேசுங்கள் என்று சொல்லி புலிகளை சிதை;து ஈழப்போராட்டத்தில் உலகம் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. இப்பொழுது கூட்டமைப்புடன் பேசுங்கள் தீர்வை முன் வையுங்கள் என்பது நிலவைக் காட்;டி சோறு ஊட்டுகிற மாதிரியான அரசியலாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்படியிருக்க தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பு என்ன செய்ய இயலும் என்பதும் அப்பால் என்ன செய்ய வேண்டும் என்பதும் இங்கு முக்கியமானது. ஈழப்போராட்டம் என்பது நெடும் பயணத்தைக் கொண்ட ஒரு போராட்டம். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழப்போராட்டத்தின் ஒரு பகுதி அரசியலையே முன்னெடுக்கிறது. இந்த நெடும் பயணத்தில் தமிழ் மக்கள் ஜனநாயக அரசியல் என்ற வாக்கு அரசியலில் கூட்டமைப்பை தெரிவு செய்திருப்பது என்பது இன்றைய காலத்தில் தமிழர் தாயகத்தில் நடக்கும் ஆக்கரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து அதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதோடு; போலி ஜனநாயக அரசியல் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்காத வகையில் நகர்த்திச் செல்லவும் இது அவசியமாகிறது.

ஈழப்போராட்டத்திற்கு வித்திட்ட காரணிகளான பேரினவாத அரசியலும் நிலப்பறிப்புக்களும் உரிமை மறுப்புக்களும் அடக்குமுறையும் படுகொலைகளும் இன்னும் பல காரணிகளும் இன்னும் சூழ்நிலைகள் ; ஊட்டி வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் மறுபடியும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வு குறித்து தெளி;வான ஏமாற்று நாடகங்கள் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றன. இந்நிலையில் கூட்டமைப்பு இலங்கை அரசையும் உலகத்தையும் நம்புவதைவிட சொந்த மக்களிடத்தில் நம்பிக்கை மிக்க அரசியலுக்குள்ளால் பயணிக்க வேண்டும். ஈழத்து அரசியலை மக்களிடத்தில் ஆழமாக பரப்ப வேண்டும். இன்று இலங்கை அரசு பேச்சுவார்த்தை என்ற போர்வையில் முன்னெடுக்கும் போலி அரசியலே அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கப் போகிறது. அதிகாரப் பரவாலாக்கம் என்பது இலங்கை அரசால் ஏமாற்றப்படும் ஒரு தீர்வாகவும் ஈழப்போராட்டத்தின் நியாயத்தை மறைக்கும் சர்வதேசத்தின் தந்திரமாகவும் அடிப்படையில் கனவுலக சமாதானமாகவும் இருக்கிற பொழுது ஈழத்து மக்களிடத்தில் வரலாற்றுப் பயணத்தின் அவசியமும் வாழ்வுரிமையின் தேவையின் நிர்பந்தமும் வலியுறுத்துப்படுகின்றன.

தீபச்செல்வன்
deebachelvan@gmail.com

http://kathaludan.blogspot.com



  • http://kathaludan.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger