புதுடில்லி: டில்லி ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி மீண்டும் ஒரு முறை பரிதாபமாக வீழ்ந்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, நேற்று டில்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.
"டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், "பேட்டிங்' தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
துவக்கம் மோசம்:
இங்கிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. பிரவீண் குமார் பந்தில் குக் "டக்' அவுட்டானார். கடந்த போட்டியில் ஏமாற்றிய கீஸ்வெட்டர், இம்முறையும் வினய் குமார் பந்தில் "டக்' அவுட்டாக, ரன் கணக்கை துவக்கும் முன், 2 விக்கெட்டுகளை இழந்தது.
டிராட் அதிரடி:
பின் டிராட், பீட்டர்சன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். பிரவீண் ஓவரில் டிராட், "ஹாட்ரிக்' பவுண்டரி விளாச, பீட்டர்சன் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க, 17 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளாச முயன்ற டிராட் (36), வினய் குமார் வேகத்தில் சிக்கினார்.
பீட்டர்சன் ஏமாற்றம்:
அடுத்து பீட்டர்சனுடன் இணைந்த போபரா, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ஒன்றும், இரண்டுமாக ரன் சேர்க்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. உமேஷ் யாதவ் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய போபரா (36) அஷ்வின் சுழலில் வீழ்ந்தார். மறுமுனையில் ஜடேஜா ஓவரில், அடுத்தடுத்து சிக்சர் அடித்து அசத்திய பீட்டர்சன் (46) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
வினய் மிரட்டல்:
பேர்ஸ்டவ், சமித் படேல் ஜோடி இந்திய அணியினரின் பவுலிங்கை, சிரமமின்றி சமாளித்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தினால், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 260க்கு மேல் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜடேஜா, அஷ்வின் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்திய, சமித் படேல், ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ரன்களை (42) எடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டவும் (35) பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணியின் ரன்வேகம் சரிந்தது.
மீண்டும் பந்துவீச வந்த வினய் குமார், இம்முறை சுவான் (7), பிரஸ்னனை (12) ஒரே ஓவரில் அவுட்டாக்கினார். டெர்ன்பக் (3) ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணி 48.2 ஓவரில், 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் வேகத்தில் அசத்திய வினய் குமார், நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
ரகானே சொதப்பல்:
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, மீண்டும் ஏமாற்றமான துவக்கம் கிடைத்தது. கடந்த போட்டியில் ஏமாற்றிய பார்த்திவ் படேல் (12), இம்முறையும் சொதப்பினார். அஜின்கியா ரகானே (14) மறுபடியும் கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்.
"சூப்பர்' ஜோடி:
பிறகு வந்த காம்பிர், விராத் கோஹ்லி இருவரும் சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சொந்த மண்ணில் விளையாடிய இவர்கள், இங்கிலாந்து அணியின் பவுலிங்கை எவ்வித சிரமம் இன்றி எதிர்கொள்ள, இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
கோஹ்லி சதம்:
ஸ்டீவன் பின் ஓவரில் காம்பிர், மூன்று பவுண்டரி விளாசினார். விராத் கோஹ்லி தன்பங்கிற்கு டெர்ன்பக் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க, இங்கிலாந்து கேப்டன் குக் எடுத்த, எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர், தனது 26வது அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் தனது 7வது சதம் அடித்தார்.
"சூப்பர்' வெற்றி:
இவர்களது "மிரட்டல்' ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியை நோக்கி விரைவாக முன்னேறியது. டெர்ன்பக் பந்தில் விராத் கோஹ்லி, பவுண்டரி அடிக்க, இந்திய அணி 36.4 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்து, "சூப்பர்' வெற்றி பெற்றது. மூன்றாவது விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்த விராத் கோஹ்லி (112), காம்பிர் (84) ஜோடி, கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தது. இதையடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.
மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் 20ம் தேதி மொகாலியில் நடக்க உள்ளது.
முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், நேற்று அதிக ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொத்தமுள்ள 48 ஆயிரம் எண்ணிக்கையில் 20,250 ரசிகர்கள் மட்டும் வந்திருந்தனர். 15 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக ததரப்பட்டது. அவர்களும் போட்டியை காண வராதது அதிர்ச்சியாக இருந்தது.
இதுகுறித்து டில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""கடந்த 20 ஆண்டுகளில் போட்டி நடக்கும் போதெல்லாம், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. நேற்று அப்படிஇல்லை. ரசிகர்கள் குறைவாகவே வந்திருந்தனர்," என்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக, இந்தியாவின் விராத் கோஹ்லி, காம்பிர் ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு, அதிக ரன்கள் (209*) சேர்த்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் சித்து, அசார் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து இருந்தது.
* தவிர, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில், மூன்றாவது விக்கெட்டுக்கு சச்சின், அசார் எடுத்த 175 ரன்கள் என்ற இலக்கையும், இந்த ஜோடி முறியடித்தது.
* 15 ஆண்டுகளுக்குப் பின் இந்திய வீரர் ஒருவர் (கோஹ்லி), டில்லி மைதானத்தில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 1996ல் இலங்கைக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், சச்சின் சதம் அடித்து இருந்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?