கவிதை பேசும் விழிகள் முழுக்க கனவுகளோடு பறந்து திரிந்த மட்டக்களப்பு இளம் புறா புனிதவதிக்கும், உணவு மறந்து - உறவு மறந்து தாயகக் கனவுடன் தலைநிமிர்ந்து நடந்த பெண் போராளிகளுக்கும் இடையிலான நட்பும் பாசமும் அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ''உச்சிதனை முகர்ந்தால்'' திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.
புனித நதி போன்று கம்பீரமாக நகர்ந்து கொண்டிருந்த புனிதவதியின் வாழ்க்கை, 2009 மார்ச் முதல் தேதி எப்படி சிதைந்து போகிறது என்பதை உருக்கமாகச் சொல்கிறது உச்சிதனை முகர்ந்தால்.
இந்தப் படத்தைப் பார்க்கும் எவரையும் அந்தப் புனித நதியின் பயணம் இளகவைக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.
இனவெறி இலங்கையால் சிதைத்துச் சீரழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிக் குழந்தைகளின் அடையாளம் புனிதவதி. தாய்த் தமிழகத்திலிருந்து 26 வது மைலில் என்ன நடந்தது என்பதை அதிர்ச்சியோடு சித்தரிக்கின்ற நேரடி சாட்சியமாக தமிழ் மக்களைச் சந்திக்க இருக்கிறாள், 13 வயது மட்டக்களப்பு பள்ளி மாணவி ஒய். புனிதவதி.
கள்ளங்கபடமில்லாத அந்தச் சிட்டுக்குருவியின் சிறகுகள் சிறுகச் சிறுக உதிர்ந்து போவதைச் சித்தரிக்கும் கண்ணீர்க் கவிதை, உச்சிதனை முகர்ந்தால்.
சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா, லட்சுமி ராமகிருஷ்ணன், லாவண்யா, ஈழத்து மைக்கேல் ஜாக்சன் பிரேம்கோபால் - என்று நீளும் நட்சத்திரக் கூட்டத்துக்கு இடையில், ஒய். புனிதவதியாக நடித்திருக்கும் சிறுமி நீநிகா துருவ நட்சத்திரம் போன்று மின்னுகிறாள்.
நீர் - நிலம் - காற்று என்கிற மூன்று இயற்கைச் சக்திகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து அமைக்கப்பட்டிருக்கிறது நீநிகா என்கிற அவளது திரையுலகப் பெயர்.
இவர்களோடு இன்னொரு கதாபாத்திரமாக வரும் அமுதன் என்கிற நாய், ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வு கூட தமிழனுக்கு இல்லாது போய்விட்டதோ என்கிற தன்னிரக்கத்தைத் தூண்டி விடுகிறது.
படத்தில் வருகிற அத்தனை கதாபாத்திரங்களோடும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறது, அந்த ஐந்தறிவு அற்புதம் - அமுதன்.
இந்தப் படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது, டி. இமானின் ஈடு இணையற்ற இசை. காசி ஆனந்தன் எழுதி இமானின் இசையமைப்பில் இமானே பாடியிருக்கும் - இருப்பாய் தமிழா நெருப்பாய் - பாடல் ஏற்கெனவே பலரது அலைபேசிகளில் காலர் டியூன். [ஏர்டெல் - 5432112140152, ஏர்செல் - 882068, பிஎஸ்என்எல் & ஐடியா - 2538006]. அதைப் போன்றே இன்னொரு பாடலான "உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி" பாடலும் இப்போதே பிரபலமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. [ஏர்டெல் - 5432112140154, ஏர்செல் - 882074, பிஎஸ்என்எல் & ஐடியா - 2538007].
அந்தப் பாடலில் இடம்பெறும் - "பனிச்சங்கேணி நண்டு வாங்கிவந்து கறியாக்கிக் கடிக்கணும்... பதுங்கு குழிக்குள்ளும் நிலவொளியில் நான் புத்தகம் படிக்கணும்" என்ற காசி ஆனந்தனின் வரிகள் ஒரு கவிதையைப் போல காட்சியாக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பி. கண்ணன் மற்றும் அழகிய மணவாளனின் ஒளிப்பதிவு, பி. லெனின் மற்றும் மாருதியின் படத்தொகுப்பு, தமிழருவி மணியனின் வசனங்கள், காசி ஆனந்தன் மற்றும் கதிர்மொழியின் பாடல்கள் - என்று ஒவ்வொரு அம்சமும் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளன.
நடனக் காட்சிகளில் அஜய்ராஜும், சண்டைக்காட்சியில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜனும், ஒலி வடிவமைப்பில் எம். ரவியும், கலை இயக்கத்தில் விஜயகோபாலும் முத்திரை பதித்துள்ளனர்.
தணிக்கைக் குழு இந்தத் திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்களுடன் தீபாவளிக்கு மோதும் உச்சிதனை முகர்ந்தால் படத்தை உச்சி முகர்ந்து உவகையுடன் வரவேற்கவேண்டியது மிக மிக அவசியம்.
நல்லபடங்கள் வருவதில்லை, அப்படியே வந்தாலும் தமிழர் அவலத்தைச் சித்தரிப்பதில்லை - என்பது நமது நீண்டநாள் ஆதங்கம். அந்த ஆதங்கத்தைத் தீர்க்கும் வகையில் வெளியாகிறது, உச்சிதனை முகர்ந்தால்.
முதல் ஐந்தாறு நாட்களுக்குள் இந்தப் படத்துக்கு நாம் கொடுக்கும் வரவேற்பு தான் இது போன்ற முயற்சிகள் தொடர வழிவகுக்கும். திரையரங்குகளுக்குக் குடும்பத்துடன் சென்று முதல் வாரத்திலேயே இந்தப் படத்தைப் பார்த்தாக வேண்டும் என்று உறுதியேற்பது நமது கடமை.
உச்சிதனை முகர்ந்தால் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இந்தப் படத் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்ட நோர்வே வாழ் தமிழர்கள் ஸ்டீவன் புஷ்பராஜா, ஸ்ரீபாலசுந்தரம், சிவகணேஷ் தில்லையம்பலம், ரமணன் கந்தையா, விஜயசங்கர் அசோகன் ஆகியோர் சென்னை வர இருக்கின்றனர்.
http://kathaludan.blogspot.com
http://kathaludan.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?