சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் இதை சுந்தர்.சி மறுத்தார். ஆனால் வடிவேலுதான் இந்தப் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தற்போது செய்திகள் கூறுகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்தார் வடிவேலு. அவரது முக்கிய தாக்குதலாக விஜயகாந்த் அமைந்தார். அதிமுகவை அப்படியே விட்டு விட்டு தேமுதிகவையும், விஜயகாந்த்தையும் போட்டு தாளித்து விட்டார் வடிவேலு.
ஆனால் துரதிரஷ்டவசமாக திமுக பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் வடிவேலு நிலைமை கவலைக்கிடமாகி விட்டது. விஜயகாந்த்தைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கருதி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வடிவேலுவை தங்களது படங்களில் புக் செய்ய தயங்குவதாக தெரிகிறது. இதனால் விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு போன்றவர்களின் காமெடியை மட்டுமே பார்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வடிவேலுவின் காமெடி இல்லாமல் தமிழ்ப் படங்கள் கிட்டத்தட்ட வறட்சியாகவே உள்ளது என்பது வடிவேலு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான தமிழ் திரையுலக ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.
இந்த நிலையில்தான் சுந்தர்.சி படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை உடனடியாக சுந்தர்.சி மறுத்து விட்டார். அப்படியெல்லாம் திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார்.
ஆனால் வடிவேலுவை சுந்தர்.சி அணுகியது உண்மைதான் என்கிறார்கள். வடிவேலுதான் இப்படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டாராம். தற்போது பல்வேறு கெட்டப்களில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகி வருகிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ள இந்த காலகட்டத்தி்ல் அந்தப் படத்திற்காகத்தான் தயாராகி வருகிறாராம் வடிவேலு. அந்தப் படத்தை முடித்து விட்டு, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி விட்டு பின்னர் மீண்டும் காமெடி வேடங்களில் முழு வீச்சில் நடிக்க அவர் தயாராகி வருகிறாராம். இதனால்தான் சுந்தர்.சி படத்தை வேண்டாம் என்று அவர் கூறி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால்தான் கோபத்தில், வடிவேலுவை எனது படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் இல்லை என்று சுந்தர்.சி கூறியதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?