தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேயார் 24 வாக்குகள் வித்தியாசத்திலும், பவர் ஸ்டார் சீனிவாசன் படு தோல்வியும் அடைந்தனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஜாம்பவான்களான எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டியிட்டனர். இவர்களுடன் டாக்டர் கே.சீனிவாசன் என்பவரும் போட்டியில் குதித்தார். இதனால் திரையுலக தயாரிப்பாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'பவர் ஸ்டார்' என்ற அடை மொழியுடன் தமிழ்த் திரையுலகில் நடமாடி வரும் சீனிவாசன், லத்திகா என்ற 'பிரமாண்ட வெற்றிப் படத்தை' எடுத்து, ஹீரோவாகவும் நடித்தவர். இவரும் போட்டியில் குதித்ததால் போட்டி களை கட்டியது.
நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை நடந்த விறுவிறுப்பான வாக்குப் பதிவில் கலந்து கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 68 சதவீத வாக்குகள் வரை பதிவாகின.
பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் அதிகாரியாக இப்ராகிம் ராவுத்தர் செயல்பட்டார்.
மொத்த ஓட்டுக்களில் பதிவான 641 ஓட்டுக்களில் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு 324 வாக்குகள் கிடைத்தன. கேயாருக்கு 300 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் 24 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
50 ஓட்டுக்களைக் கூட முழுமையாக பெற முடியாமல் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு 'பவர் ஸ்டார்' சீனிவாசன் படு தோல்வியைச் சந்தித்தார்.
பொருளாளர் பதவிக்கு எஸ்.ஏ.சி அணியைச் சேர்ந்த கலைப்புலி தாணு தேர்வு பெற்றார். இவருக்கு 349 வாக்குகளும், அன்பாலயா பிரபாகரனுக்கு 256 வாக்குகளும் கிடைத்தன.
வெற்றிக்குப் பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அரசியல் கட்சித் தேர்தல் அல்ல. சங்கத் தேர்தல். இங்குவெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களுடன் இணைந்து செயல்பட்டு, நல்லது நடக்க பாடுபடுவோம் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?