Monday 10 October 2011

கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ்! * வீழ்ந்தது பெங்களூரு சாலஞ்சர்ஸ்

 

சென்னை: சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி "சூப்பராக' தட்டிச் சென்றது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவில் மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ தொடர் நடந்தது. நேற்றிரவு சென்னையில் நடந்த பைனலில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்பஜன் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
வெட்டோரி ஜாலம்:
மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. அவசரப்பட்ட பிலிஜார்டு(3) ரன் அவுட்டானார். நானஸ் "வேகத்தில்' கன்வர்(13) காலியானார். பின் பிராங்க்ளின், அம்பதி ராயுடு சேர்ந்து பொறுப்பாக ஆடினர். அரவிந்த் ஓவரில் பிராங்க்ளின் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பட்கல் பந்தில் ராயுடு(22) வெளியேறினார். தில்ஷன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த யாதவ்(24), தேவையில்லாமல் ரன் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிராங்க்ளினும்(41) ரன் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. அடுத்து வந்தவர்கள் ஏமாற்ற, விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. போட்டியின் 16வது ஓவரை வீசிய வெட்டோரி இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் "அதிரடி' போலார்டை(2) அவுட்டாக்கினார். 3வது பந்தில் ஹர்பஜனை(0) பெவிலியனுக்கு அனுப்பினார்.
மலிங்கா அதிரடி:
கடைசி கட்டத்தில் வெட்டோரி, அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய மலிங்கா நம்பிக்கை தந்தார். ராஜூ பட்கல் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சதிஷ்(9), மலிங்கா(16) அவுட்டாக, ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. மும்பை அணி 20 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விக்கெட் மடமட:
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தார். அகமது ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார். இவர், மலிங்கா "வேகத்தில்' 27 ரன்களுக்கு அவுட்டானார். ஹர்பஜன் சுழலில் "ஆபத்தான' கெய்ல்(5) வெளியேற, மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இதற்கு பின் வந்தவர்கள் சேப்பாக்கம் ஆடுகளத்தின் மந்தமான தன்மையை உணர்ந்து விளையாட தவறினர். அதிரடியாக ஆட முற்பட்டு, விக்கெட்டுகளை வீணாக பறிகொடுத்தனர். அரியானாவை சேர்ந்த சாகல் "சுழலில்' அகர்வால்(14) சிக்கினார். பின் ஹர்பஜன் பந்தில் விராத் கோஹ்லி(11) அவுட்டாக, பெங்களூரு அணியின் நம்பிக்கை தகர்ந்தது. தொடர்ந்து அசத்திய சாகல் பந்தில் அருண் கார்த்திக் "டக்' அவுட்டானார். போலார்டு பந்தில் முகமது கைப்(3) வீழ்ந்தார். போராடிய சவுரப் திவாரி(17), அகமது பந்தில் அவுட்டானார். "டெயிலெண்டர்களும்' சொதப்ப, பெங்களூரு அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் தேடியது.
சுழலில் அசத்திய ஹர்பஜன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை மலிங்கா கைப்பற்றினார்.


ரூ. 12 கோடி பரிசு
சாம்பியன்ஸ் லீக் தொடரில், கோப்பை வென்ற "ரிலையன்ஸ்' முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 12 கோடி பரிசாக தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற தொழில் அதிபர் மல்லையாவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ரூ. 6 கோடி பரிசாக பெற்றது.
————–
சபாஷ் ஹர்பஜன்
சச்சின் இல்லாத நிலையில் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்திய ஹர்பஜன் மும்பை அணிக்கு கோப்பை வென்று தந்தார். பைனலில் சுழல் ஜாலம் காட்டிய இவர், 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger