இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
கிண்டி ரேஸ் கிளப்பில்,என் நண்பர் ஒருவர் உறுப்பினர்.
அவர் என்னையும் சேர்த்துச் சில நண்பர்களை அங்கு ஒரு நாள் மாலை அழைத்துச் சென்றார்.
உணவின்போது நடுவில் டாய்லெட் போக விரும்பினேன். வெயிட்டரைக் கேட்ட போது அங்கு அருகில் இருந்த டாய்லெட்டைக் காட்டினார். சென்றேன். உள்ளே முதலில் கை கழுவும் இடம்.அதை அடுத்து ஒரு கதவுக்குப் பின் டாய்லெட்.நான் முடித்துவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தால்………!!
வாஷ் பேசின் முன் நின்று கண்ணாடியைப் பார்த்துத் தன் ஒப்பனையைச் சரி செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.இளம் பெண் அல்ல. பேரிளம் பெண். நான் திடுக்கிட்டேன்.ஆனால் அந்தப் பெண் பதட்டமின்றி என்னைப் பார்த்துச் சொன்னாள்,"அன்கிள்!இது லேடீஸ் டாய்லெட்"
நான் நொந்து போனேன்.
தவறாக லேடீஸ் டாய்லெட்டுக்கு வந்து மாட்டிக் கொண்டதற்கு அல்ல.
ஒரு பேரிளம்பெண் என்னைப் பார்த்து 'அன்கிள்' என்று அழைத்து விட்டாளே என்றுதான்!!ஹா,ஹா,ஹா.
சமீபத்திய நிகழ்ச்சி.
சில நேரங்களில் உண்மை நமது முகத்தில் அறைவது போல் வெளிப்படும்.
இது அப்படித்தான்.
இரு நாட்களுக்கு முன்,கச்சேரி கேட்டுவிட்டு,(ஞானாம்பிகாவில் டிஃபனும் சாப்பிட்டு விட்டுத்தான்!) மயிலைக் குளம் வரை தானியில் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்தேன்.பேருந்தில் சரியான கூட்டம்.சீட்டு வாங்கி வீட்டு ஒரு இருக்கையின் அருகே நின்று கொண்டேன். இருக்கையில் அமர்ந்திருந்த நடு வயதுக் காரர் என்னை நிமிர்ந்து பார்த்தார்."நீங்க உட்காருங்க சார்" எனச் சொல்லியபடியே எழுந்தார்.நான் இருக்கட்டும் என்று மறுத்தும் அவர் விடவில்லை.கட்டாயப்படுத்தி என்னை அமர்த்திவிட்டார். இது என் வயதுக்குக் கிடைத்த சலுகை."நீ வயதானவன்; உன்னால் நிற்க முடியாது "என்று அவர் சொல்லாமல் சொல்லி விட்டார்.அவரது இந்த சலுகைக்கு நன்றி.அதே நேரம் நான் என்னதான் மனதளவில் இளைஞன் என்று சொல்லிக் கொண்டாலும் உடல் தோற்றம் சலுகைக்குரியவனாக மாற்றி விடுகிறதே!வருத்தம்தான்!!
இந்நிகழ்ச்சியை யு.எஸ்.ஸில் இருக்கும் என் அண்ணன் மகளிடம் சொன்னபோது அவள் சொன்னாள்"உங்கள் முகத்தைப் பார்த்தால் வயதானவராகத் தெரியவில்லை.ஆனால் தலை முடி தும்பைப்பூவாக வெளுத்து விட்டது.சாயம் பூசினால் சரியாகி விடும்."
யோசித்தேன்.அப்படிச் சாயம் பூசியாவது என் வயதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?ஏன் வேடம் புனைய வேண்டும்? நான் நானாகவே இருந்து விட்டுப்போகிறேன்.
ஆனால் இந்த வயதில் நான் இளைஞர்களின் களமான பதிவுலகில் அவர்களுடன் போட்டியிட்டுப் பதிவு எழுதிக் கொண்டிருப்பது நியாயமா? நான் செய்ய வேண்டிய வேறு எவ்வளவோ பணிகள் இருக்கின்றனவே!
எனவே சில முடிவுகளைக் கட்டாயமாக எடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆண்டு முடிவுக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவேன்.
பார்க்கலாம்;புத்தாண்டு எப்படிப் பிறக்கிறதென்று?
..................................
சென்னை இசை விழா:--
ஸ்ரீராம் கேட்டிருந்தார்,யார் கச்சேரி என்று இரு வரி பகிரலாமே என்று.
உன்னி,சௌம்யா கச்சேரி பற்றி முன்பே எழுதி விட்டேன்.
19th--கே.ஜே.யேசுதாஸ்------------பெருங்காயம் வைத்த பாண்டம்!
20-----ஓ.எஸ்.தியாகராஜன்---------சாஸ்திரீய சுத்தம்!
21-----மல்லாடி சகோதரர்கள்------சுவையான ஆந்திர நெய்ப்பெசரட்டு!
.....................................................
நபர்-1--சகோதரர்களில் ஒருவரின் குரலில் ஒரு கம்மல் இருக்கிறது.
நபர்-2--அதனால்தான் எல்லோரும் காதுல போட்டுக்கறா!!
.................................................
http://dinasarinews.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?