Saturday 8 October 2011

மும்பை அணியை சமாளிக்குமா சாமர்சட்! *இன்று இரண்டாவது அரையிறுதி

 

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ தொடரில் இன்று நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், சாமர்சட் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக பைனலுக்கு முன்னேற மும்பை இந்தியன்ஸ் அணி காத்திருக்கிறது.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இங்கிலாந்தின் சாமர்சட் அணியை எதிர்கொள்கிறது.
மைதான அனுபவம்:
கேப்டன் சச்சின், முனாப் படேல் உள்ளிட்ட எட்டு வீரர்கள் காயம் காரணமாக விளையாடாத போதும், இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஏனெனில் மும்பை அணி, சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு லீக் போட்டியில் விளையாடியது. இந்த அனுபவம் மும்பை அணிக்கு கைகொடுக்கலாம். ஆனால் சாமர்சட் அணி, தகுதிச் சுற்றுப் போட்டிகளை ஐதராபாத் மைதானத்திலும், லீக் சுற்றுப் போட்டிகளை பெங்களூரு மைதானத்தில் விளையாடியது. இதனால் சாமர்சட் அணிக்கு சேப்பாக்கம் மைதானம் குறித்த அனுபவம் குறைவாக இருக்கும்.
போலார்டு எழுச்சி:
மும்பை அணிக்கு பிளிஜார்டு, கன்வர் ஜோடி சிறந்த துவக்கம் அளிக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை அடையலாம். ஜேம்ஸ் பிராங்க்ளின் தனது பொறுப்பான ஆட்டத்தை இன்றும் தொடரலாம். இதுவரை சொல்லிக் கொள்ளும்படி விளையாடாத போலார்டு, சைமண்ட்ஸ் இன்று முழுத்திறமையை வெளிப்படுத்தினால், ரசிகர்கள் "சிக்சர்' மழையில் நனையலாம். ஹர்பஜன், சதிஷ், சுமன் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் அசத்தினால் நல்லது. "ஆல்-ரவுண்டராக' அசத்தி வரும் மலிங்கா, இன்றும் பேட்டிங்கில் கைகொடுக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு லசித் மலிங்காவை எதிர்நோக்கி உள்ளது. இதுவரை நான்கு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ள இவர், இன்று எழுச்சி கண்டால் நல்லது. இவருக்கு அபு நேசிம் அகமது, போலார்டு, சதிஷ், ஜேம்ஸ் பிராங்க்ளின் உள்ளிட்ட வேகங்கள் கைகொடுக்கும் பட்சத்தில், எதிரணியின் வேட்டையை தடுக்கலாம். சுழலில் ஹர்பஜன் சிங் இருப்பது பலம்.
மெர்வி நம்பிக்கை:
சாமர்சட் அணியின் கீஸ்வெட்டர், பீட்டர் டிரிகோ ஜோடி இன்று சூப்பர் துவக்கம் அளிக்க வேண்டும். வான் டெர் மெர்வி, ஜேம்ஸ் ஹில்டிரத், ஜாஸ் பட்லர், நிக் காம்ப்டன், அருள் சுப்பையா உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை பதிவு செய்யலாம். தமிழக வீரர் முரளி கார்த்திக், கேப்டன் அல்போன்சா தாமஸ் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும் சாதித்தால் நல்லது.


சாதிப்பாரா தாமஸ்:
சாமர்சட் அணியின் வேகப்பந்துவீச்சில் கேப்டன் அல்போன்சா தாமஸ் நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு லீவிஸ் கிரிகோரி, பீட்டர் டிரிகோ உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. சுழலில் முரளி கார்த்திக் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மைதானம் குறித்த அனுபவம் இவருக்கு இருக்கும் என்பதால், சுழல் ஜாலம் காட்டலாம். இவருடன் இணைந்து வான் டெர் மெர்வி, ஜார்ஜ் டாக்ரல் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

வருகிறார் சூர்யகுமார் யாதவ்
காயம் காரணமாக லீக் சுற்றில் விளையாடாத மும்பை அணியின் "ஆல்-ரவுண்டர்' சூர்யகுமார் யாதவ், சாமர்சட் அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் களமிறங்க உள்ளார். இவரது வருகையால், மும்பை அணியில் ஆறு வெளிநாட்டு வீரர்களும், எட்டு இந்திய வீரர்களும் இருப்பர். கேப்டன் சச்சின் உள்ளிட்ட எட்டு முன்னணி வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்காத நிலையில், லீக் சுற்றின் போது ஐந்து வெளிநாட்டு வீரர்களை விளையாடும் லெவன் அணியில் சேர்த்துக் கொள்ள மும்பை அணிக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.
தற்போது சூர்யகுமார் யாதவ் வருகையால், ஒரு வெளிநாட்டு வீரரை, சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் திரும்ப பெற்றுக் கொண்டது. இதன்படி இன்றைய அரையிறுதியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடும் லெவன் அணியில் இடம் பெற முடியும்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger