திருகோணமலை: புலிகள் குறித்த அச்சம் காரணமாக திருகோணமலை பகுதிகளில் இராணுவம் மற்றும் போலீஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழருக்கு எதிரான கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன.
திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவ தடுப்பரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
'புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார்தட்டிக் கூறிய அதிபர் மகிந்த ராஜபக்சே, தற்போது யாரை அழிப்பதற்காக இராணுவத்தை நடுவீதியில் நடக்க விட்டிருக்கின்றார்?' என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
ஆனால் புலிகள் தாக்கக் கூடிய சூழல் உள்ளதாக ராணுவத்தினர் தங்கள் ரோந்துக்கு காரணம் கூறி வருகின்றனர்.
இதேவேளை மேற்குலக நாடுகளை ஏமாற்றும் பொருட்டு நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் பயமின்றியும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையில் உள்ளனர் என்றும், தற்போது அபிவிருத்திப் பணிகளே நடைபெற்று வருகின்றது என்றும் அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டு வருகின்றது.
ஆனால் அவர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு எதிர்மாறான செயல்பாடுகள் தமிழர் பகுதிகளில் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
அத்துடன் பாடசாலைக்கு மாணவிகள் செல்லும் பாதையில் தமது தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட தாள்களை வீசுவதும் அவர்களின் ரோந்துப் பணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மாணவிகளிடம் தவறாக நடக்கவும் சிலர் முயன்று வருகின்றனர் என புகார் கிளம்பியுள்ளது.
இன்னொருபக்கம் போக்குவரத்துப் போலீஸாரின் அட்டகாசங்கள் அளவுக்கு மீறிச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்லும் ஆண்களிடம் கேட்கப்படும் வாகன ஆவணங்களை விட, பெண்களிடம் வித்தியாசமான முறையிலும், தீவிரமான முறையிலும் கேட்டு விசாரணை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?