Saturday 8 October 2011

கிளிநொச்சியில் ஆயுததாரிகள் கொடூரம் : வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை

 

கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சியில் வீடு ஒன்றிற்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர் அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சியில் மாயவனூர் சிவன் கோயிலை அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றபோதும் கொலையாளிகளால் எதுவித இடையூறும் இன்றித் தப்பிச் செல்ல முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தம்பிராசா சௌந்தரராஜன் (வயது 50) என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டார். இவர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்தவர். தொழில் நிமித்தம் வட்டக்கச்சியில் தங்கியிருந்தார்.

இவரது உறவினரான மாயவனூர் தியாகராசா சாந்தி (வயது 39) கத்தியால் குத்தப்பட்டதில் கழுத்தில் படுகாயமடைந்தார். கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காகப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இவரும் இவரது இளவயது மகளும் அண்மையிலேயே அந்தப் பகுதியில் மீளக்குடியமர்ந்திருந்தனர். இவர்களது வீடு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. வீட்டுக்குக் கதவு, ஜன்னல்கள் இல்லை. மகளின் பாதுகாப்புக்காக இரவில் எப்போதும் தூக்கமின்றியே இருக்க வேண்டியிருக்கிறது என்றார் சாந்தி.

இவர்களது உறவினரான சௌந்தரராஜன் கடந்த 3 மாதங்களாக இவர்களது வீட்டில் தங்கியிருக்கிறார். தொழில் நிமித்தம் அவர் அங்கு தங்கியிருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் நானும் மகளும் படுத்திருந்த அறைக்குள் டோச் அடித்தபடி ஒருவர் வருவதைக் கண்டு பயந்துபோய் யாரது? என்று சத்தமிட்டேன். உடனே எனது கழுத்தில் கூரான ஏதோ ஒன்றால் குத்திவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார் என்றார் சாந்தி. அதன் பின்னர் சத்தமிட்டு அயலவர்களைக் கூட்டி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அவரது மகள். அம்மாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோதே சொந்தரராஜன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டோம்" என்கிறார் சாந்தியின் மகள்.

உடனடியாக கிளிநொச்சிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சௌந்தரராஜனின் சடலத்தின் அருகே டோச் லைற் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர். கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது உத்தரவுக்கமைய கொலையுண்டவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சௌந்தர்ராஜனின் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்ப இருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger